விற்பனையில் சக்கைப்போடு போடும் 4ஜி செல்போன்

4ஜி செல்போன் விற்பனையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களாக திகழ்வது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள்தான்.
இந்த செல்போன் இந்தியாவில் அறிமுகமானபோதும் இந்திய அளவில் விற்பனையில் இந்நிறுவனங்களே முன்னணியில் இருந்து வந்தன. ஆனால் இப்போது சீனாவின் ஜியோமி 4ஜி செல்போன்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

சாம்சங் மற்றும் ஆப்பிள் செல்போன்களை விடவும் ஜியோமி 4ஜி செல்போன்கள் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.
குறிப்பாக சீனாவில் சாம்சங் செல்போன் விற்பனை 60 சதவீதம் அளவு குறைந்ததற்கு முக்கிய காரணம் ஜியோமி செல்போன் தான்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட, மொத்த 4ஜி செல்போன்களில், ஜியோமி நிறுவனம் 30.8
சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 45 சதவீத சந்தையைக் கொண்டு முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டில் ஜியோமி நிறுவனத்தால் விற்பனையில் பெரும் தேக்கத்தைக் கண்டிருக்கிறது.

4ஜி செல்போனில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களே மக்களுக்கு அதன் மீது ஆர்வம் வர காரணமாகும். குறிப்பாக டேட்டா பரிமாற்றத்தில் கூடுதல் வேகம் கிடைக்கிறது. இதன் மூலம் மிகப் பெரிய பைல்களை செல்போனில் இருந்து சில விநாடிகளில் அனுப்ப முடியும்.பிராட்பேண்ட் இயக்க வேகத்தைப் பொறுத்தவரை 2018ல், 40Mbps ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது.
தற்போது இது 16 Mbps ஆக உள்ளது.

இன்னமும் 3 ஜி தொழில்நுட்பமே நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை. எனினும் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகளை பரவலாக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல 4ஜி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்எலக்ட்ரானிக் கருவிகளின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான் இந்திய சந்தையை பிடிப்பதற்கு செல்போன் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. தற்போதைய நிலையில், 4ஜி
செல்போன்களில் சீனாவின் ஜியோமி போன்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதற்கு முக்கிய காரணம், இவை விலை மிகவும் குறைவாக இருப்பது தான். இதை விட சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களின் விலை மூன்று மடங்கு அதிகம் என்பதால்தான் இவற்றின் விற்பனை சரிந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Issues: