ரியல் எஸ்டேட் துறை முதலீடுகளை ஈர்ப்பதில் 700 சதவீத வளர்ச்சி... குஜராத் மாநிலம் சாதனை!

இந்திய அளவில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்துள்ளதாக அசோசேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல் எஸ்டேட் துறையில் 55% முதலீடு குறைந்திருக்கிறது என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் வரை ரியல் எஸ்டேட் துறை ரு.92,600 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் சரிவை கண்டுள்ளபோதிலும், குஜராத் மாநிலம் மட்டும் 700 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

அந்த மாநிலம் கடந்த மார்ச் மாதம் வரை ரு17 ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரு15 ஆயிரம் கோடி அதிகமாகும்.
குஜராத்திற்கு அடுத்த இடத்தில்   கேரளமாநிலம் உள்ளது. இம்மாநிலம் 550 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரகாண்ட் மாநிலம் 400 சதவிதமும், ராஜஸ்தான் 175 சதவிதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

குஜராத் மாநிலம் கடந்த நிதிஆண்டில் இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளபட்ட புதிய முதலீடுகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை தன் பக்கம் ஈர்த்துள்ளது. குஜராத்தை அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் 17 சதவீதம் பங்கையும், கர்நாடக 10 சதவீதத்தையும், தமிழ்நாடு 8 சதவீதத்தையும், உத்திரபிரதேசம் 6 சதவீத பங்கையும் தன்பால் ஈர்த்துள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை 8 சதவீதம் என்பது குறைவான வளர்ச்சியாகும். இது இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது ரியல்எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப் பாகும்.
ஏனெனில் தமிழகத்தில் வீடுகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளன.  அதற்கேற்ப முதலீடு பெருகினால்தான் அத்தேவையை பூர்த்தி செய்ய முடியும்.  
நம்மை விட சிறிய மாநிலமான குஜராத் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடையும் போது தமிழகத்தால் அடைய முடியாமல் போனது வியப்பளிக்கிறது.

பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் தமிழகம் ரியல் எஸ்டேட் துறையிலும் முன்னணி நிலைக்கு வரவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஏழுமலை

Issues: