அடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சரக்கு வாகன துறைக்கு முக்கிய பங்குண்டு. சரக்கு வாகன துறையில் அதிகம் ஈடுபடுவது கனரக வாகனங்களே. அதாவது லாரிகள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. அதைப் போல சரக்குப் போக்கு வரத்து தங்குதடையின்றி நிகழ்ந்தால்தான் நாட்டில் அத்தியாவசிய பணிகள் சரியாக நடக்கும்.
லாரிகள் ஒரு நாள் ஸ்டிரைக் நடத்தினாலே இயல்பு வாழ்க்கை எந்த அளவுக்கு ஸ்தம்பித்துப் போகிறது என்பதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.
இந்தியாவில் தாராளமயம் அனுமதிக்கப்பட்ட பிறகு பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் என்கிற நிலை மாறி வேலைக்கு ஆள் பற்றாக்குறை என்னும் நிலை உருவாகி இருக்கிறது.
அமெரிக்காவே இந்தியாவைப் பார்த்து பொறாமைப் படும் அளவுக்-கு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருப்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தான். இந்தப் பொருளாதார வளர்ச்சியில் சரக்கு வாகன துறைக்கு முக்கிய பங்குண்டு. இத்தகைய பெருமைக்குரிய சரக்கு வாகன துறைக்கு மத்திய மாநில அரசுகள் மிகுந்த முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனபது சரக்கு வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
அடிக்கடி உயரும் டீசல் விலை
டீசல் விலை அடிக்கடி உயருவதால் சரக்கு வாகன தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக சரக்கு வாகன உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.அது மட்டுமின்றி விலைவாசியும் கடுமையாக உயர்கிறது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை 100 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மற்ற நாடுகளோடு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் அதிகம்.
எனவே டீசல் விலை நிர்ணய உரிமையை மீண்டும் மத்திய அரசே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் டீசல் விலையை உயர்த்தாமல் மாற்றுவழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
டீசல் விலை உயரும் போது அதன் மீதான மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியும் உயர்கிறது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் ரூ.2 உயர்த்தினால் ரூ. 3 அளவுக்கு டீசல்விலை உயர்ந்து விடுகிறது. எனவே மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.
தற்காலிக பதிவுக்கு கூடுதல் வரி
தமிழக அரசு கடந்த 2010 ம் ஆண்டு விலையுயர்ந்த கார்களுக்கு ஆயுட்கால வரியினை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதை அடிப்படையாகக் கொண்டு தற்காலிக பதிவை மேற்கொள்ளும் லாரிகளுக்கும் கூடுதல் வரியை விதித்தது அரசு. இதன் காரணமாக ஒரு லாரிக்கு ரூ. 5600 வரை கூடுதல் வரியாக செலுத்த நேரிடுகிறது.
தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக புதிய சேசிஸ்க்கு பாடி கட்டி பெயிண்டிங் போன்ற வேலைகளை செய்து லோடு ஏற்றி அனுப்புவதற்கு ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை ஆகிறது. அவ்வாறு காலதாமதம் ஆகும்போது மீண்டும் ஒவ்வொரு மாதத்திற்கும்
ரூ. 5600 கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.
ஏற்கனவே ஒரு லாரிக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை காலாண்டு வரியாக ரூ. 5400 ஐ லாரி உரிமையாளர்கள் செலுத்துகிறார்கள். இந்நிலையில் தற்காலிக பதிவுக்கட்டணமாக ரூ. 5600 ஐ ஒவ்வொரு மாதத்திற்கும் செலுத்துவது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய லாரியை பதிவு செய்யும்போது விபத்துக் காப்பீட்டுக் கட்டணமாக ரூ 2 ஆயிரம் செலுத்துகிறார்கள். மேலும் சாலைவரி, உற்பத்திவரி, விற்பனைவரி போன்ற அனைத்து வரிகளையும் முன்கூட்டியே அரசுக்கு செலுத்தி தொழிலை செய்து வருகிறார்கள்.
எனவே கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டுமென லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள். நியாயமான இந்த இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜெயக்குமார்