கலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு?

 கலப்பு பொருளாதார முறையிலிருந்து தாராளமய பொருளாதார முறைக்கு இந்தியா மாறி 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
1992ல் தாராளமயக் கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது பல பொருளாதார நிபுணர்களும், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் அக்கொள்கையை வானளாவப் புகழ்ந்தார்கள்.  
அனைத்தும் தனியார் மயம் ஆக்கப்படுவதால் போட்டி ஏற்படும்... தரமான பொருட்கள் உற்பத்தி ஆகும்.... நிறுவனங்கள் தங்களது போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க விலையைக்  குறைக்கும்... இது  நுகர்வோர்களாகிய மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் மத்திய அரசு இரண்டு வித இந்தியாவை உருவாக்கியதுதான் மிச்சம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஒன்று: ஒரு வீதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடுத்த வீதிக்குச் செல்வதற்குக்கூட சொந்த தனி விமானத்தைப் பயன்படுத்தும் மகா கோடீசுவரர்களின் இந்தியா.
மற்றொன்று: தங்களது குடிசையில் கழிப்பிட வசதி கூட இல்லாமல் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று காலைக்கடன்களை கழிக்கும் பரம ஏழைகளின் இந்தியா என அவர்கள் வகைப்படுத்துகின்றனர்.
           இது போன்ற கருத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கூறியிருக்கிறார். ஆனால் இப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்கியது 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக               நாட்டை ஆண்ட காங்கிரஸ்தான் என்ற செய்தியை அவர் கூறவில்லை.
உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கும் நமது அரசுகள், ஏழைகள் மீது கரிசனம் காட்ட மறுகின்றன.   இதுதான் உலக அளவில், இந்தியாவில் ஏழைகளின் சதவீதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்கின்றனர் இடதுசாரிகள்.
    வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு கரிசனம் காட்டுவதில் நமது அரசுகள் எவ்வளவு முனைப்போடு செயல்படுகின்றன என்பதை கீழ்க்காணும் நிகழ்வுகள் விளக்கும்.
      ஸ்ரீபெரும்புதூரில் சமீபத்தில் மூடப்பட்ட நோக்கியா நிறுவனம் 2005ல் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.675கோடி.         இதற்காக மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, உள்ளூர்வரி, லெவி, விற்பனை வரி, டர்ன் ஒவர் வரி, ஆக்ட்ராய்வரி, எலக்ட்ரிசிட்டி செஸ் போன்றவற்றில் சலுகை பெற்றது.
     2006 ல் தனது உற்பத்தியை தொடங்கிய நோக்கியா நிறுவனம் மதிப்புக் கூட்டுவரி, மத்திய விற்பனை வரி ஆகிய இரண்டின் மூலமாக மட்டும் 2008ல் செலுத்தியிருக்க வேண்டிய       தொகை ரூ.638 கோடி. ஆக தான் செய்த முதலீடு அளவுக்கு இரண்டே வருடங்களில் அரசின் வரிச்சலுகை மூலம் லாபம் அடைந்திருந்தது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தான்      சொன்னபடி நோக்கியா நிறுவனம் நடந்து கொள்ளவில்லை. 12000 பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் 4500 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியது.  தற்போது       இந்நிறுவனம் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியான ரூ 2000  கோடியை  பாக்கி வைத்தத்தோடு தொழிலாளர்களுக்கும்  பெப்பே காட்டிவிட்டு  நிறுவனத்தை மூடிவிட்டது.   
 
ஹீண்டாய் நிறுவனம் ரூ.100 கோடி பெறுமானமுள்ள 543 ஏக்கர் நிலத்தை ரூ.40 கோடிக்குப் பெற்றது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 1லட்சம் கார்களை உற்பத்தி செய்வதாக கூறியிருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்நிறுவனம் ஆண்டுக்கு  6லட்சம் கார்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் எண்ணிக் கையோ முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் குறைவு, தண்ணீர், மின்சாரம், திடக்கழிவு வெளியேற்றும் டேங்க், வேதியியல் கழிவுகளை வெளியேற்ற ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவற்றை அரசே ஏற்பாடு செய்து  தந்தது. இவை மட்டுமின்றி பல்வேறு வரிச்சலுகைகளையும் அரசு தந்தது.

இப்படி பல்வேறு சலுகைகளை பல்வேறு துறைகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு வாரி வழங்கியுள்ளது. சென்னை மாநகரைச் சுற்றி மட்டும் 300 கொரிய நிறுனங்கள், 170ஜப்பான் நிறுவனங்கள், 18 தைவான் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு அரசின் கரிசனம் எப்போதும் உண்டு.  
வருடத்திற்கு லட்சக்கணக்கான கோடிகளை ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளாக அரசு அளித்து வருகிறது. வரிச்சலுகைகைளப் பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அச்சலுகையால் கிடைத்த உபரி லாபத்தை திரும்பவும் இந்தியாவிலேயே முதலீடு செய்தாலாவது வேலைவாய்ப்பு பெருகும் என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால் உபரி வருமானம் பல்வேறு நாடுகளுக்கு முதலீடாகச் சென்று விடுகிறது.

இந்த உண்மையெல்லாம் மத்திய அரசுக்கு நன்கு தெரிந்திருந்தும் கார்பரேட் நிறுவனங்கள் மீது காட்டும் கரிசனத்தை மட்டும் கைவிடவே இல்லை.  அமெரிக்கா பின்பற்றும் கொள்கைகளையே இந்தியாவும் பின்பற்றுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

முதலாளித்துவ பொருளாதாரத்தையும்,  நுகர்வு கலாச்சாரத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் இன்றைய நிலை என்ன?
14.5 லட்சம் கோடி டாலர் கடன் சுமையால் அமெரிக்கா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் கணக்கை கேட்டால் தலை சுற்றி விடும். இதன் மதிப்பு 6கோடி கோடி ரூபாய். எதிலும் நெம்பர் 1 ஆக காட்டிக்கொள்ளத் துடிக்கும் அமெரிக்கா கடன் சுமையிலும் உலக அளவில் நெம்பர் 1 ஆக இருக்கிறது. 1970களில் இந்நாட்டின் கடன் வெறும் 300 கோடி டாலர்தான். ஆக 40 ஆண்டுகளில் அந் நாடு கடனை வாங்கிக் குவிப்பதில் பெரும் முனைப்பு காட்டியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியால் 4.5 கோடி பேர் பரம ஏழைகளாகி விட்டனர். வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நுகர்வு  கலாச்சாரத்திற்கு  அடிமையானதால் கோடிக்கணக்கான மக்கள் பெரும் கடனாளிகள் ஆகிவிட்டனர்.

இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையின் பிடியில் இருந்தாலும் தனது பொருளாதார கொள்கையை அமெரிக்கா மாற்ற வில்லை. திவாலடைந்த நிறுவனங்களுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் லட்சக்கணக்கான கோடிகளை சலுகையாக வாரி வழங்கியது. திவாலடைந்த நிதி நிறுவனங்களை அரசு தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வராமல் இலவசமாக கோடிகளை அந்நிறு வனங்களுக்குக் கொட்டியது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே உள்ள மகா கோடீஸ்வரர்களுக்கே மீண்டும் இலவசமாக கோடிகளைக் கொட்டியது. வால்ட்ஸ்ட்ரீட் போராட்டம் வெடித் ததற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.
அமெரிக்காவை நம்புவது ஏன்?

அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் நசிவைச் சந்தித்த போதிலும் இந்தியா, சீனா, ஜெர்மன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா என்ற என்ஜினையே பின்தொடர்வதற்கு காரணம் உண்டு.

அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்தாலும் டாலர்தான் உலகம் முழுவதும் செலாவணி பரிமாற்றத் திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒரு பொருளாதார நிபுணர் வேடிக்கையாகச் சொன்னார்:

டாலர்களை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. மற்ற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்’’
உலகில் டாலர்களின் ஆதிக்கம் இருக்கும் வரை அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும். டாலரின் ஆதிக்கத்தை ஒழிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய  ஒன்றியங்களின் யூரோவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியால் தகிடுதத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலர்களில் 70 சதவீதம்  அமெரிக்காவிற்கு வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. உற்பத்தி மதிப்புக்கேற்பதான் பணத்தை அச்சிட  வேண்டும் என்பது அடிப்படை பொருளாதார விதி. அதாவது பணம் என்பது ஒரு கருவி தான். உற்பத்திதான் உண்மையான மதிப்பு. இந்த அடிப்படை பொருளாதார விதி அமெரிக்காவிற்கும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் டாலர்களில் வர்த்தகம் நடை பெறுவதால் இதை தனக்குக் சாதகமாக  மாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா.
டாலரை மட்டும் அச்சடித்து கோடிக்கணக்கான மதிப்புள்ள உற்பத்தி பொருட்களை இறக்குமதி  செய்து தனது பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொண்டது. இந்த குறுக்கு வழியை ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பயன்படுத்த முடியும் என்பதை அமெரிக்கா அறியாததல்ல...

அமெரிக்காவிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் டாலர்களில் 5 சதவீதத்தை திரும்பப் பெற வேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டாலே அமெரிக்காவின் கதி அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்து விடக்கூடாது என்பதில்  பல நாடுகள் ஆர்வத்துடன் முனைப்பு காட்டுகின்றன. ஏனெனில் அந்நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு அமெரிக்காவையே சார்ந்துள்ளது.

இப்படி அமெரிக்காவை நாம் சார்ந்திருப்பதால்தான் தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து வெளிநாட்டு மூலதனம் நம்நாட்டுக்கு வருமா  என்று ஏங்கித் தவிக்ககூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலை மாற வேண்டுமெனில் நேரு காலத்து கலப்பு பொருளாதார முறைக்கு இந்தியா மாறவேண்டும். ஆனால் இந்தியா அப்படி மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும்.

சுரா

 

Issues: