தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா? தொழிலாளர் சட்ட திருத்த மசோதா

மத்திய அரசு கொண்டு வர உள்ள, தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில்,  அதிருப்பதி நிலவிக்கொண்டிருகிறது  என்பதை ஆங்காங்கே நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை கடுமையாக  எதிர்த்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சம்மேளனங்களும்,  சிலமாநில கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், பேட்டிகள் இவற்றின் வாயிலாக பதிவு செய்து வருகின்றன.  இந்த தொழிலாளர் சட்டதிருத்தத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்ன  என்ன என்பது குறித்து பார்ப்போம்.

தற்போதைய நிலையில் ஏழு பேர் இருந்தாலே ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பிக்க முடியும்.  புதிய சட்டதிருத்தத்தில் இந்த நிலை மாற்றப்பட்டிருக்கிறது. 100 தொழிலாளர்களுக்கு மேலாகவோ அல்லது மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் பேர் உறுப்பினர்களாகவோ இருந்தால் மட்டுமே தொழிற் சங்கம் ஆரம்பிக்க முடியும்.

கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் மட்டும்தான் தொழிற்சங்கத்தை உருவாக்க அனுமதிக்கப்படுவர். தற்போதைய சட்டத்தில், வேறு தொழிலாளர்களும் சங்கத்தில் இணையலாம் என்ற நடைமுறை உள்ளது.  முறைசாரா தொழில்களில் உள்ளவர்கள் தொடங்கும் தொழிற்சங்கத்தில் மட்டும், வெளியிலிருந்து இரண்டு பேர் சங்கத்தின் உறுப்பினராவதற்கு புதிய சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

100க்கும் அதிகமான தொழிலாளர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், ஊதியம் இல்லாத விடுமுறை (லே&ஆப்) அளிப்பதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. புதிய சட்டதிருத்தத்தில் அரசின் அனுமதி தேவை இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

300 ஊழியர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இவை அரசின் அனுமதியின்றி மூடுவதற்கு புதிய சட்டம் வகை செய்துள்ளது. புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனங்கள் 300 நபர்களுக்கு பதிலாக, இரண்டு பேரையோ மூன்று பேரையோ குறைவாக கொண்ட சிறிய நிறுவனங்களாகவே தொடங்க முற்படும் நிலையை புதிய சட்டதிருத்தம் உருவாக்கியுள்ளது.

ஒரு நிறுவனமோ, தொழிற்சாலையோ ஆட்குறைப்பு செய்ய தீர்மானித்தால் ஓராண்டுக்கு மேலாக பணிபுரியும் ஊழியரை மூன்று மாத நோட்டீஸ் அளித்து பணி நீக்கம் செய்ய இந்த புதிய மசோதா வகை செய்கிறது. இந்த விதிமுறை முக்கிய கட்டுமான பணிகளான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், சுரங்கங்கள், அணைகள் போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் ஆய்வாளர்கள் அடிக்கடி ஆய்வுக்கு செல்வதை தடுப்பதற்கான வழிகாட்டுமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆலைக்குள் நடைபெறும் விபத்து உள்ளிட்ட சம்பவங்களுக்கு அதன் உரிமையாளரை கைது செய்யும் பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது. எப்படி நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறதோ, அதே போன்ற தீவிரத்தை இச்சட்டத்தை நிறைவேற்றுவதிலும் மத்திய அரசு காட்டி வருகிறது.  

இதுவரை மூன்று தொழிலாளர்கள் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
1. தொழில் தாவா சட்டம் 1947
2. தொழில் சங்க சட்டம் 1926
3. தொழிலாளர் சட்டம் 1946

இந்த மூன்று சட்டங்களையும் ஒரே சட்டமாக கொண்டு வருவதை மத்திய அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த புதிய தொழில் சட்ட வரைவு குறித்து மத்திய அரசு, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. அப்போது  தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. பாரதீய மஸ்தூர் சங்கம் கூட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது நினைவில் கொள்ளத்தக்கது.

இந்த திருத்தங்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையிலேயே கை வைக்கும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.  நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஒரு சட்டம் என்று விமர்சனம் செய்யப்பட்டது போலவே இச்சட்டமும் அவ்வாறே விமர்சனம் செய்யப்படுகிறது.   

தொழில் வளர்ச்சி நமது நாட்டில் அதிகரிக்காமல் போனதற்கு முக்கிய காரணம் நமது நாட்டின் தொழிலாளர் சட்டமே என்று தொழிலதிபர்கள் கூறிவருகின்றனர். எனவே இந்த சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக அவர்கள் கூறி வருகின்றனர்.  நினைத்தபோது வேலையை  விட்டு நீக்கும் உரிமை ஒரு முதலாளிக்கு இல்லாதபோது,  எப்படி தொழில் தொடங்க புதிய முதலீடு வரும் என்ற கேள்வியை அவர்கள் முன் வைக்கின்றனர்.

இங்குள்ள தொழிலாளர் சட்டங்களை விடவும்,தொழிலாளர்களுக்கு மிகுந்த சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை கொண்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அதிவேக தொழில் வளர்ச்சி ஏற்பட்டது எப்படி என்ற கேள்விக்கு இந்திய நாட்டின் தொழிலதிபர்களிடம் பதில் இல்லை.

தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய வைப்பு நிதி பங்களிப்பு, பணிக்கொடை போன்றவற்றை நிதிச்சுமையாக கருதும் முதலாளிகள் தங்களுக்கு வரும் லாபத்தை மட்டும் சுகமாக கருதுகிறார்கள் என தொழிலாளர்கள் விமர்சிக்கின்றனர். தொழிற்சங்கம் என்றாலே ஆலை அதிபர்களுக்கு வேப்பங்காயாய் கசப்பது நியாயமா என்ற கேள்வியையும் தொழிலாளர்கள் எழுப்புகின்றனர்.

1930களில் அமெரிக்காவில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது,   தொழிலாளர்களுக்கு சாதகமாக சட்டத்தை மாற்றி அமைத்ததன் காரணமாகத்தான்,  இன்றைக்கு அந்நாடு உலகின் நெம்பர் 1 பொருளாதார சக்தி மிக்க நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தொழிலாளர்கள் பங்களா, கார் என சகல வசதிகளோடும் வாழ்கிறார்கள்.
இந்த உண்மைகளை எல்லாம் மத்திய அரசு உணராமல் போனது எப்படி?  தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்காமல் அவர்களது வாழ்வை இன்னும் மேம்படுத்தும் வகையில் தொழிலாளர் நல திருத்த சட்டம் அமைய வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பால்ராஜ்  

 

Issues: