கார் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உதிர்த்த பொக்கிஷ தொழில் சிந்தனைகள்

அமெரிக்க தொழிலதிபர்களில் வெற்றிகரமான ஒருவர் ஹென்றி ஃபோர்டு என்பது நமக்கு தெரியும். இவர் மோட்டார் கம்பெனியை நிறுவிய போது இவரது முதலீடு என்பது தன்னம்பிக்கை மட்டும்தான்.
கார்களை அசெம்ப்ளி லைன் முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர். தனது ஃபோர்டு மோட்டார் கம்பெனி மூலம் அதை நிரூபித்தும் காட்டியவர்.
கார்கள் செல்வந்தர்கள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற நிலையை மாற்றி நடுத்தர மக்களும் கார்கள் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவரும் இவரே.
இவர் மெக்கானிச தொழிலை தொழில் நுட்ப கல்லூரியில் படிக்க வில்லை. அனுபவமே இவரது ஆசான். இவருக்கு 15 வயது இருக்கும்போது இவரது தந்தை ஒரு கைக் கடிகாரத்தை பரிசளித்தார். அந்த கைக்கடிகாரத்தை அக்குஅக்காக பிரித்து மெக்கானிச அடிப்படையை கற்றுக்கொண்டார். இதனால் வாலிப பருவத்திலேயே வாட்ச் மெக்கானிக்காக உருவானார்.
பின்னர் அப்ரன்டிஸ் மெஷினிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தார். நாளடைவில் ஒரு இஞ்சினியராக உருவானார். போர்ட்-குவார்ட்ரி சைக்கிள் என்ற இயந்திரத்தால் தானே இயங்கும் வாகனத்தை முதலில் தயாரித்தார்.
பிறகு சொந்த நிறுவனத்தை தொடங்கினார். திறமையான பணியாளர்களை வேலைக்குச் சேர்த்து கொண்டார். திறமையான பணியாளர்களை நிலை நிறுத்திகொள்வது வெற்றிக்கான அடிப்படைகளில் ஒன்று என்ற சிந்தனையை உடையவர் இவர்.
இவரது சிந்தனைகள் மிகவும் பிரபலமானவை. உலகில் உள்ள அனைத்து தொழில் முனைவோர் களுக்கும் ஆதர்சமாக திகழும் இவரது பொன்மொழிகள் சிலவற்றை பார்ப்போம்:
வெற்றியைப் பெற தயாராவதுதான் வெற்றியைப் பெறுவதற்கான முதல் படியாகும். குறை சொல்வது எளிது. எனவே தீர்வைச் சொல்லுங்கள்.
தொழில் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அது தோல்வி அடைந்த தொழில் ஆகும்.
எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று நினைப்பதை வைத்து நமது மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியாது.
பெரும்பாலானோர் பிரச்சனைகளைப் பற்றியே அதிகம் பேசுகின்றனர். பேசுவதில் செலவிடும் நேரத்தை விட மிகக் குறைவான நேரத்தையே அதை தீர்ப்பது குறித்து சிந்திப்பதற்குச் செலவிடுகின்றனர்.
சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்பதால்தான் மிகச்சிலரே சிந்திக்கும் பணியை செய்கின்றனர்.
தொழிலில் பெரிய பிரச்சனைகள் என்பது எதுவும் கிடையாது. சின்னச் சின்ன பிரச்சனைகள் சேர்ந்துதான் ஒரு பெரிய பிரச்சனையாகிறது.
உடற்பயிற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். என்னை பொறுத்தவரை உடற்பயிற்சி என்பது ஒரு பித்தலாட்டம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் அது நமக்கு தேவையில்லை. குறிப்பாக நோயுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
ஒரு செயலை நம்மால் செய்ய முடியும் அல்லது முடியாது என உறுதியாக தீர்மானித்தால் அது சரியான தீர்மானமாகும்.
வெற்றிகரமான தொழிலதிபர்களுக்கு ஒரே ஒரு விதிதான் உள்ளது. சிறந்த தரமான பொருட்களை குறைந்த விலையில் அதிக கூலி கொடுத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது.
அடுத்த வருடம் உலகம் எப்படி இருக்கும் என்பதை பள்ளிக்கூடத்திற்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது. அனுபவம் தான் அந்த உயர்ந்த படிப்பை கற்றுத்தரும்.
இவ்வாறு தலைசிறந்த பொன்மொழிகளை தனது சுய சரிதையில் விவரித்துள்ளார் ஹென்றி ஃபோர்டு.
அவரது கருத்துகளை பின்பற்றும் ஒரு தொழில் முனைவோர் நிச்சயம் வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபராக உயர்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

Issues: