குறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்

தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு எழக்கூடும். அந்த எண்ணம் தோன்றியவுடன், பணத்திற்கு என்ன செய்வது என்ற அச்சமும் கூடவே எழும். இந்த அச்சத்தை முன்னிட்டு தொழில் தொடங்காமல் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் ஏராளம்.
சரியான சிந்தனை மற்றும் நுண்ணிய பார்வையை செலுத்தினால் குறைந்த முதலீட்டில் தேர்ந்தெடுக்க பல தொழில்கள் உள்ளன. குறைவான நேரமும், குறைவான உழைப்பும் இந்த தொழில்களுக்கு போதுமானவை. இத்தகைய தொழில்கள் பற்றி இங்கு காண்போம்.
* உணவு தொழில் குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளக்கூடிய ஓர் அருமையான தொழில். குறைந்த முதலீட்டில் சிற்றுண்டி கடை வைத்து நல்ல வருமானம் பார்ப்போர் நமது நாட்டில் ஏராளம். கடையே இல்லாமல் தள்ளு வண்டியில் உணவு விற்பனை செய்து தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏழை மக்கள், நடுத்தர மக்கள், கூலித்தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பசிக்கும்போது நாடுவது தள்ளு வண்டி உணவுக் கடைகளைத்தான். இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது முக்கியமான அம்சமாகும்.
* பெரிய அளவில் முதலீடு தேவைப்படாத இன்னொரு தொழில் பிரான்சைஸ் வாய்ப்பு பெறுவது. ஒருவர் நடத்தும் தொழிலின் ஒரு கிளையை மற்றொருவர் உரிமை பெற்று நடத்துவதே பிரான்சைஸ் (FRANCHISE). அதிக ரிஸ்க் எடுக்காமல் சம்பாதிக்க பிரான்சைஸ் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம்.
*EVENT PLANNER என்று சொல்லப்படும், நிகழ்ச்சிக்கு திட்டமிடுபவர் தொழில் அதிக அளவு லாபம் தரக்கூடியதாகும். இத்தொழிலுக்கு பணத்தை விட மூளைதான் முக்கிய முதலீடு. விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு சரியாக திட்டம் தீட்டி சிறப்பாக செயல்படுத்துபவர் என்ற பெயரை நீங்கள் பெற்று விட்டால் வாடிக்கையாளர்கள் வந்து குவிவதோடு நீங்கள் கேட்கும் பணத்தையும் தருவர்.
* புகைப்படம் எடுக்கும் ஆற்றல் பலருக்கு இருக்கும். இந்த ஆற்றலை கொஞ்சம் மெருகேற்றி அழகியல் உணர்வோடு சிந்தித்தால் சிறந்த புகைப்பட கலைஞர் ஆகி விடலாம். தொழில் ரீதியான கேமரா வாங்குவது மட்டும்தான் முதலீடு. சிறந்த கலை உணர்வோடு செயல்பட்டால் கூடுதல் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைப்பர்.
* மேலும்,வலை வடிவமைப்பு (வெப் டிசைனிங்),உள் அலங்காரம் (INTERIOR DECORATOR), பேக்கரி, போன்ற தொழில்களும் குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளக் கூடியவையே. இத்தொழில்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்று, குறைந்த முதலீடு செய்து தொழில் செய்யலாம்.

Issues: