தொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாததன் காரணமாக வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
இன்னும் சிலருக்கு முறையான திட்டங்கள் இருக்கும். ஆனால் பணம் இருக்காது. நம்மை நம்பி யார் பணம் தரப்போகிறார்கள் என்று எண்ணி திட்டத்தையே கைவிடுபவர்கள் பலர். இவர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பதுதான் அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமாகும்.
'Entrepreneurs Development Institute' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அரசு நிறுவனத்தில் சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவருக்கு சிறந்த பயிற்சியையும், தொழில் வழிமுறைகளையும் கற்றுத் தருகிறார்கள்.
புதிய தொழில் முனைவோருக்கான திட்டத்தில் விண்ணப்பித்தால் நேர்முக தேர்வு நடத்தப்படும்.
இந்த நேர்முக தேர்வில் நீங்கள் செய்யப்போகும் தொழில் குறித்து பெறப்பட்டுள்ள அறிவு குறித்து சோதிக்கப்படும். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு தொழில் சார்ந்த பயிற்சி அந்நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும். முறைப்படி ஒரு மாதம் பயிற்சி வழங்கப் படுகிறது.
ஒரு தொழில் தொடங்க அடிப்படையான அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும்
தொழிலுக்கேற்ற ஆலோசனைகள் அனைத்தும் கிடைக்கும். அதாவது தொழில் செய்தல், லாபம் ஈட்டுதல், எதிர்காலத்தில் தொழிலின் வளர்ச்சி , தொழிலில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நிபுணத்துவம் பெற்றவர்களிடமிருந்து கிடைக்கும்.
மேலும் இந்த பயிற்சியின் போது தொழிலுக்கான கடன் பெறும் வழி முறைகள், அதை திருப்பி செலுத்தும் வழிமுறைகள், சந்தைப்படுத்துதல், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள், ஏற்கெனவே இந்த தொழிலை நடத்துபவர்களின் யோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கிடைக்கும்.
பயிற்சி முடிந்த பிறகு திட்டத்தின் அடிப்படையில் வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். வங்கிக்கடன் கிடைக்க இந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமே வழிகாட்டுகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் தொழில் தொடங்கும் போது மின்சார கட்டணத்தில் 20 சதவீதம் மானியமும், சிறு தொழிலுக்கான மானியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.