பெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:

சமீப காலமாக பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் பணிக்கு செல்வதன் முக்கிய நோக்கமே குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்குதான்.
கிராமபுறங்களில் பெண்கள் அதிக அளவில் விவசாய பணிகளுக்கும், கட்டிட பணிகளுக்கும் செல்கின்றனர். நகர்புறங்களில் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அதிக அளவில் பெண்கள் செல்கின்றனர். அதே சமயத்தில் சுயதொழில் முனைவோர்களை பொறுத்தவரை பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவுதான்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது.
வளர்ந்த நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் தொழில் முனைவோர்களாக திகழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் கடந்த 30 வருடங்களில் பெண் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது. சீனாவில் கூட
புதிய தொழில்களை துவங்குவதில் பெண்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை சிறு தொழில் முனைவோர்களாக பெண்கள் 7 சதவீதத்தினர் மட்டும்தான் இருக்கிறார்கள்.
தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள்தான் தகுதியானவர்கள் என்ற இந்தியர்களின் எண்ணமே இதற்கு காரணமாகும்.
தொழில் துவங்க நினைக்கும் பெண்களை சமூகம் கேலி செய்து அவர்களை முடக்கி விடுகிறது. தொழில் துவங்குவதற்கான மூலதனத்தை பெறுவதிலும் பெண்கள் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
கணவன் தொழில் துவங்க நகைகளை தருவதற்கு பெண்கள் தயாராக இருக்கும் அதே சமயத்தில், பெண்கள் தொழில் துவங்க குடும்ப சொத்துக்களை பயன்படுத்த பெரும்பாலான ஆண்கள் சம்மதிப்பதில்லை. பெண்கள் தொழில் துவங்குவதற்கான கடன் வசதிகளை வழங்குவதில் வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன.
அப்படியே கடன் தர முன்வந்தாலும் கணவனின் எழுத்து பூர்வமான சம்மதமும், உத்திரவாதத்திற்கான கையெழுத்தும் வங்கிகளால் கோரப்படுகின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். பெண் என்பவள் குடும்ப பராமரிப்பாளர் என்ற எண்ணமே பல ஆண்களிடம் நிலவுகிறது.
செலவுகளை திட்டமிடுதல், சேமிப்பு ஆற்றல், பொறுமை, சகிப்பு தன்மை, விடாமுயற்சி போன்ற சிறந்த குணங்கள் இயற்கையாகவே பெண்களிடம் அமைந்துள்ளன.
இந்த குணநலன்கள் தொழில் வெற்றிக்கு பெரிதும் உதவும். இவற்றுடன் கல்வியும் சேர்ந்தால் அந்த திறன்கள் முழுமை பெறும். எனவே, ஆண்கள் ஊக்கமளித்தால் பெண் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உருவாவார்கள். பெண்கள் பணிக்கு செல்வதற்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கும் ஆண்கள், பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதற்கு பெரும்பாலும் ஒத்துழைப்பு தருவதில்லை.
இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Issues: