‘பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காள தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்’

பழனி என்றால் பஞ்சாமிர்தம் ஞாபகத்திற்கு வருவதைப்போல பவானி என்ற பெயரைக் கேட்டாலே ஜமக்காளம் தான் ஞாபகத்திற்கு வரும். 1947 ம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கிறார்கள்.
தமிழகத்தை கடந்து ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பவானி ஜமக்காளம் பிரபலம். மேலும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் இன்றும், பவானி தரை விரிப்புகள் பெரிதும் விரும்பப்படுவதைப் பார்க்கிறோம். அவை மரபின் சின்னங்களாக தமிழகத்தில் போற்றப்படுகின்றன.
இப்போது விசைத்தறியிலும் ஜமக்காளம் தயாரிக்கப்படுகிறது. எனினும், கைத்தறியில் தயாரிக்கப்படும் ஜமக்காளத்திற்கு கூடுதல் சிறப்பம்சங்கள் உண்டு.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை. விசைத்தறி ஜமக்காளம் விரைவில் சாயம் போகும்.
தலைமுறை கடந்தும் நீடித்து உழைப்பது கைத்தறி ஜமக்காளத்தின் முக்கிய சிறப்பம்சம். விசைத்தறி ஜமக்காளமோ 7 ஆண்டுகள் வரை உழைப்பதே அதிகம்.
முறுக்கு நூலையும், 10ம் நெம்பர் நூலையும் அழுத்தம் கொடுத்து கைத்தறி ஜமக்காளம் தயாரிக்கப்படுவதே அது நீடித்து உழைப்பதற்கு காரணமாக அமைகிறது. விசைத்தறி ஜமக்காளத்தை இப்படி அழுத்தம் கொடுத்து தயாரிக்க முடியாது என்பது அதன் பலவீனமான அம்சம்.
பவானி மற்றும் நகரைச் சுற்றியுள்ள ஜம்பை, குருப்பநாயக்கன் பாளையம், பெரியமோளப் பாளையம் போன்ற ஊர்களில் இந்த ஜமக்காளம் தயாராகிறது.
பெரும்பாலானோர் கைத்தறி மூலம் மட்டுமே ஜமக்காளம் தயாரிக்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகளில் ஜமக்காளம் தயாராகிறது. ஏராளமான பெண்களும் ஜமக்காளம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
விசைத்தறிகளின் தாக்கம் அதிகரித்த போது, கைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்காக மத்திய மாநில அரசுகள் கைத்தறிக்கென்று 22 ரகங்களை ஒதுக்கி இருந்தன.
இந்த ரகங்களை விசைத்தறிகளில் நெய்யக் கூடாது என சட்டம் விதிக்கப்பட்டது. இந்த ரகங்களில் ஜமக்காளமும் ஒன்று. விசைத்தறி உரிமையாளர்கள் இந்த சட்டத்தை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சட்டத்தை மீறி ஜமக்காளங்களை விசைத் தறிகளில் உற்பத்தி செய்து குவிக்கின்றனர். உற்பத்தி செலவு குறைவதால் விலையையும் குறைத்து விற்கின்றனர். இது கைத்தறி நெசவாளர்களை கடுமையாக பாதிக்கிறது.
கைத்தறி ரகங்களின் தரத்தை விசைத்தறி ரகத்தால் எட்டமுடியாது எனினும் விலை குறைவாக இருக்கிற காரணத்தால் கைத்தறி ரகங்களின் விற்பனை மந்தமாக உள்ளது. தரத்தையும், பாரம்பரியத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களால் தான் கைத்தறி தொழில் இன்னும் ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் கைத்தறி நெசவாளர்களே, தாம் நெய்த ஜமக்காளங்களை அதிக விலை கிடைத்ததன் காரணமாக, தலையில் சுமந்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தனர்.
இன்றைக்கு விசைத்தறிகளின் தாக்கத்தால், கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சங்கங்கள் வழங்கும் கூலி கட்டுபடியாகவில்லை என்கின்றனர் நெசவாளர்கள்.
இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறையாலும் ஜமக்காளம் நெய்தல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் ஜமக்காளம் நெய்வதற்கு ஆர்வம் காட்டாத போக்கு காணப்படுகிறது. குறைந்த வருமானம் தரும் தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்பது இவர்களது கேள்வியாக உள்ளது.
50 வயதைக் கடந்த பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால்தான் பாரம்பரிய ஜமக்காளங்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.
இந்த தொழில் இனி அழியாமல் பாதுகாக்கப் பட வேண்டுமெனில் கைத்தறி நெசவாளர்கள் வைக்கும் கோரிக்கை களை அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டும். இவர்களது கோரிக்கைகள் என்ன?
8 ஜமக்காளம் நெய்வதற்கு வாரத்தில் 6 நாட்களாவது நூல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
8 கைத்தறிக்கென்று ஒதுக்கப்பட்ட ரகங்களை உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 60 வயது நிரம்பிய கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஜமக்காள கூலி தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
8 பசுமை வீடுகள் திட்டத்தில் ஜமக்காள கூலி தொழிலாளர்களுக்கும் வீடுகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தான், ஜமக்காளம் நெய்தல் தொழில் உயிர்ப்புடன் நீடித்திருக்கும் என்ற நெசவாளர்களின் கருத்து நியாயமானதே.
கார்த்திக்

Issues: