வருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. உடை அணிவது தேவைக்கு மட்டுமின்றி, தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் அணியப்படுகிறது. எனவே தான் ஆள்பாதி... ஆடை பாதி என்று சொன்னார்கள்.
உடைகள் உடுத்துவதில் ஆண்களும், பெண்களும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன.
பண்டிகைக் காலங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி காலங்கள் மட்டுமின்றி அன்பளிப்பு வழங்குவது, தள்ளுபடி காலங்கள், சீருடைத் தேவை போன்ற காரணங்களாலும் ஆடைகளின் தேவையும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன. எனவே ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.
ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஜவுளி ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. இத்தொழிலை முறையாகக் கற்றுக் கொண்டு சிறியளவில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெற முயற்சிக்கலாம்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாகத் தைத்துக் கொடுக்கும் அனுபவத்தை வளர்த்துக் கொண்டால் இத்தொழிலை சிறப்பாக நடத்தலாம்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தருவோரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் தைத்துத் தரும் டெய்லர்கள் அதிகம் உள்ளனர். அனைத்துத் தரப்பினருக்கும் தைத்துத் தர அதிக அனுபவம் தேவை.
அதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்யலாம்.
தையல் தொழிலை கடைகளை முக்கியப் பகுதியில் வாடகைக்குப் பிடித்துத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே இயந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, பணியாட்களுடனோ தையல் இயந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம்.
நாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது தான் முக்கியம். அதன் பிறகு படிப்படியாக இடவசதிக்கேற்ப விரிவாக்கி கொள்ளலாம். பின்னர் வேறு இடங்களுக்கோ, முக்கியப் பகுதிகளுக்கோ மாற்றி பெரிய நிறுவனமாகக் கூட அமைத்துக் கொள்ளலாம்.
என்னதான் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டாலும், அது அனைவருக்குமே பொருந்தி விடுவதில்லை. துணியாக எடுத்துத் தைப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் போலவே உள்ளன. எனவே டெய்லரிங் தொழிலுக்கு வாய்ப்பு எப்போதும் உண்டு.
பண்டிகைக் காலங்கள் வந்து விட்டால் டெய்லர்கள் பிசியாகி விடுவது எப்போதும் போலவே உள்ளது. அவர்களிடம் அவசரமாக வேண்டும் என்று தைத்துத்தர கொடுத்தால் “சற்று தாமதமாகும்” என்று நேரம் கேட்கும் நிலையே உள்ளது. பள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகளும் உள்ளன.
இது போன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம்.
ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலோ விளம்பரம் செய்து உடனடியாக தைத்துக் கொடுக்கப்படுவதும் உண்டு. அது போன்ற பகுதிகளில் கடைகள் அமைத்து தைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.
போதிய டெய்லரிங் ஆட்கள் கைவசம் இருக்க வேண்டியது அதிகளவு ஆர்டர்களின் போது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்புண்டு.
தையல் (டெய்லரிங்) தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தையல் தொழில் செய்யும் பிற தையல் கலைஞர்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களோடும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான் மொத்த ஆர்டர்கள் அதிகளவில் வரும்போது, நம்மிடம் பணியாற்றும் தையற் கலைஞர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை இருந்தாலும் நட்புறவு கொண்டுள்ள தையற் கலைஞர்களிடம் கொடுத்து ஆர்டர்களை முடித்துத் தரலாம்.
இதனால் அவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
அது போல் துணி வகைகள், நூல்வகைகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கும் கடைகளையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.
பள்ளிகள் போன்றவற்றுக்கு சீருடைகள் தைத்துத்தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால் தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும்.
விலையை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த விலை கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இல்லாவிட்டால் கணிசமான அளவிற்கு வருவாய் குறையும்.
காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
அவற்றை தைத்துத்தரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதுவித டிசைன்களையும் அறிந்து அதற்கேற்ப தயாரிக்கும் தொழில் நுட்பத்தை புகுத்த முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப செய்து தர முடியும். வாடிக்கையாளர்களும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
தையல் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் வழங்கப்படுகிறது. அங்கு தையல் கலையை கற்று சிறியளவில் தையல் பணியைத் துவங்கலாம்.
இயந்திரம் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலிருந்தே செய்யத்துவங்கலாம். அல்லது ஏதேனும் டெய்லரிங் கடைகளில் பணிக்குச் சேர்ந்தும் பணிபுரியத் தொடங்கலாம்.
இவ்வாறு பணியாற்றும் போது இத்துறை சார்ந்த பல்வேறு விவரங்களும், அனுபவங்களும் கிடைக்கும். இவ்வாறு துவங்கி இத்தொழிலை திறம்படச் செய்ய முயற்சிக்கலாம்.
சுகுமார்