40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...
உணவு, உடை ,உறைவிடம் இவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றில் உணவு மற்றும் உடைத் தேவையை மக்களால் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. உறைவிடத் தேவையை அவ்வளவு எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
முதலில் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். பின்னர் பெரும் தொகை செலவு செய்து வீடு கட்ட வேண்டும். அதனால்தான் வீடு வாங்குவது பலருடைய வாழ்நாள் கனவாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர்.
வாடகை கொடுக்க வசதியில்லாத 20 சதவீத மக்களோ பிளாட்பாரங்களிலும் டெண்ட் அடித்தும் வாழ்ந்து வருகின்றனர். இந்த 20 சதவீத மக்களால் நிலம் வாங்குவதைப் பற்றியோ, வீடு கட்டுவதைப் பற்றியோ சிந்திக்கக் கூட முடியாது. அந்த 40 சதவீத மக்களுக்குத்தான் சொந்த வீடு வாங்குவது லட்சியமாக உள்ளது.
ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்கள் முதலீட்டு நோக்கத்துக்காக நிலமோ, வீடோ வாங்குகின்றனர். இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் மக்களிடம்தான் வாங்கும் திறன் அதிகமாக இல்லை. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
நிலம் வாங்கு பவர்கள் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். மனையை வாங்குவது என்று தீர்மானித்த பிறகு அது பத்தாண்டுகளுக்குப் பிறகு என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
வீடு கட்டி வசிப்பதற்காக நிலம் வாங்க விரும்பினால் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். மனைக்கு அருகிலேயே வீடுகள் இருக்க வேண்டும். சாலை வசதி, போக்குவரத்து வசதி, கடைகள் இருக்க வேண்டும். குறைந்த தூரத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.
முதலீட்டு நோக்கத்திற்காக நிலம் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனெனில் நில முதலீடு மிகவும் லாபகரமானது. வங்கியில் செய்கிற முதலீட்டுக்கு கிடைக்கிற லாபத்தைவிட பல மடங்கு லாபம் நிலத்தில் கிடைக்கிறது என்பது இதன் முக்கிய சிறம்பம்சமாகும்.
‘மண்ணுல போடற பணமும் பொன்னுல போடற பணமும் வீண் போகாது’ என்பது பழமொழி. பொன்னுல போடற பணத்துக்கு கிடைக்கிற லாபத்தை விடவும் மண்ணுல போடற பணத்துக்கு கிடைக்கிற லாபம்தான் அதிகம் என்பதே யதார்த்தம்.
நிலத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் புத்தி சாலித்தனத்தோடு செயல்பட்டால் பன் மடங்கு லாபம் நிச்சயம். இதற்கு ஒரு உதாரணம் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புறநகர்ப் பகுதிகளான பள்ளிக்கரணை, மேடவாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை, இசிஆர். சாலை துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தில் முதலீடு செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தொலைநோக்குப் பார்வை கொண்ட சில மக்கள் துணிந்து நிலத்தை வாங்கிப் போட்டனர்.
இந்த ஏரியா மாபெரும் வளர்ச்சியைக் காணும் என்று கருதினார்கள். அவர்களது எண்ணம் வீண் போகவில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் வருகையால் அந்த ஏரியாக்கள் மிகவும் வளர்ந்தன. வீடுகளின் தேவை பெருமளவு அதிகரித்தது. இதனால் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
ஆயிரங்களில் முதலீடு செய்தவர்கள் இன்றைக்கு கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் அப்போது நிலத்தில் போட்ட பணத்தை வங்கியிலோ, தங்கத்திலோ முதலீடு செய்திருந்தால் இத்தனை அளவு லாபம் கிடைத்திருக்காது. எனவே நிலத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான முடிவு என்கின்றனர் ரியல்எஸ்டேட் நிபுணர்கள்.
கார்த்திக்