வல்லரசுக் கனவை விதைத்துவிட்டு விண்ணுக்கு சென்றுவிட்ட ஏவுகணை நாயகன்!

இந்தியக் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தவர்களில், மக்களின் இதயங்களை கவர்ந்தவர் யார் என்ற கேள்வியை  முன்வைத்தால், அதற்கான ஒரே பதில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற பெயராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவரது  செயல்பாடுகள் அவரது பதவிக்காலத்தின் போது இருந்தன.  
உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார மட்டத்திலும், வெளிநாட்டுத் தலைவர்களின் மத்தியிலும் வளைய வருபவர்களாகவே இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து மக்கள் சேவகராக வலம் வந்தவர் அவர்.

இளம் தலைமுறையினரிடம் பிரபலமாக இருந்த தலைவர் ஒருவர் உண்டு என்றால் அவர் கலாமாகத்தான் இருக்க முடியும். பல்வேறு மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் உச்சரிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒருவர் உண்டு என்றால் அதுவும் கலாம்தான்.  

தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின்போது அரங்கில் இருப்பவர்களிடம் ஆக்கபூர்வமான மனநிலையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதில் கலாமுக்கு நிகர் கலாம்தான்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்து, சாமானியராக வளர்ந்து, மாபெரும் விஞ்ஞானியாக மலர்ந்து, சாமானியர்களுக்காகச் சிந்தித்து,  பேசி, உழைத்த ஒரு கர்ம வீரர் இன்றைக்கு நம்முடன் இல்லை. இயற்கை அவரை தன்னோடு இணைத்துக்கொண்டு விட்டது.  இளம் வயது முதலே உழைத்து, பெரும் உத்வேகத்துடன் படித்து முன்னேறிய அவர் நாட்டின் மிக உயரிய பதவிக்கு வந்த முதல்  விஞ்ஞானி என்ற புகழுக்கு சொந்தக்காரர். 

மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு உத்வேகம் அளிப்பது கலாமுக்கு பிடித்தமான ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்   அவர் உயிர் பிரிந்தது. அவரது விருப்பப்படியே அவரின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மரணம் எல்லாருடைய வாழ்வுக்கும் முடிவுகட்டுகிறது. முடிவுக்குப் பிறகும் சிலர் இறவாப் புகழை அடைகிறார்கள்.  அத்தைகையோரில் கலாமும் ஒருவர். தென்கோடி ராமேஸ்வரத்தில் பிறந்த கலாமின் புகழ், இந்தியா முழுவதும் பரவி, அது  உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. 

எஸ்.எல்.வி3 என்ற செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை உருவாக்கி விண்வெளித்துறையில் தனது சாதனை மகுடத்தை  பதித்தார். அணுசக்தித் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி போன்றவற்றுக்கு தனது சிறப்பான பங்களிப்பைத் தந்தார். விண்வெளி ஏவு  ஊர்தி தயாரிப்பு, அணுகுண்டு வெடிப்பு, ஆயுதசாலைகள் அமைப்பு என பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த கலாம்  குடியரசுத்தலைவராகி தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் இடம் பிடித்தார்.
அமெரிக்க செயற்கைக்கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றிகண்ட  போது இந்திய மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தபோது அவர் கூறினார்:  

‘எனது உண்மையான வெற்றி இதுவல்ல, 4 கிலோ எடை கொண்ட செயற்கைக் கால்களைத் தூக்கி நடக்க முடியாமல் குழந்தைகள் சிரமப்பட்டனர். அவர்களுக்காக  400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதே எனது  உண்மையான வெற்றி’ என்று குறிப்பிட்டார். சிறார்கள் மீது அவர் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு இந்த கூற்று ஒரு சான்று.

தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். தேசம்தான்  அவரது முதல் குடும்பம். 
அறிவியல், அரசியல் பணிகளுக்கு இடையில் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட பல்வேறு  நூல்கள்  இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வேதமாக அமைந்திருக்கின்றன.
தனது மகத்தான கனவுகளாலும், அசாத்தியமான உழைப்பாலும், கூரிய அறிவாலும் மக்களின் மனங்களை வென்றார்.  பொறுப்பேற்ற ஒவ்வொரு துறையிலும் அவர் ஜொலித்தார்.  தன் ஆளுமையை அத்துறைகளில் அழுத்தமாகப் பதித்தார்.  அப்பழுக்கற்ற நேர்மையும் எளிமையும் அவரது இரு கண்களாக திகழ்ந்தன.

பாரத்ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது கலாமுக்கு பெருமை என்று சொல்வதைவிட  விருதுகளுக்கு பெருமை என்றே சொல்ல வேண்டும். பல்வேறு சாதனைகளையும், விருதுகளையும், ஒப்பற்ற மரியாதையையும் பெற்ற கலாமிடம் இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டிய பண்புகள் ஏராளம்.
தானும் சாதித்து பிறரையும் சாதிக்கத் தூண்டினார். இந்தப் பண்பு சாதி, மதம், இனம், மொழி என எல்லா விதமான பேதங்களையும் கடந்து மக்கள் கலாமை நேசிப்பதற்கு காரணமாக அமைந்தது.

இப்போதும் உங்களைத் தூங்கவிடாத ஒரு கனவு உள்ளதா என ஒரு நிருபர் கலாமிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம்  அளித்த பதில் இதுதான்:
“நூறு கோடிக்கும் அதிகமான என் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகை காண கனவு காண்கிறேன். இந்தக் கனவு மெய்ப்பட   ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். தேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த  வெளிநாடுகளை நம்பி இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக தொலைநோக்குப் பார்வையோடு நாடாளுமன்றம் உயிர்ப்பான  செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்“ என்று கூறினார். 

கலாமின் இந்த எண்ணத்துக்கு நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்வடிவம் கொடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். 

Issues: