கடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா?

கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவிற்கு இருக்கிறது. இது சாமானிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பாசிப்பருப்பை விட எப்போதும் குறைவான விலைக்கு விற்பனையாகும் துவரம்பருப்பு விலையோ இன்றைக்கு கிலோ ரூ.130ஐ தொட்டு இருக்கிறது.  6 மாதங்களுக்கு முன்பு இதன் விலை ரூ.70ஆக இருந்தது. ஆக சுமார் 90 சதவீத விலை உயர்வை துவரம்பருப்பு அடைந்துள்ளது.

அதேபோல உளுத்தம்பருப்பு, பாசி பருப்பு, கடலைப்பருப்பு, நிலக்கடலை இவற்றின் விலையும் சுமார் 60 சதவீத விலை உயர்வை கண்டுள்ளது.
பருப்பு உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தபோதிலும் இவ்வளவு விலை உயர்ந்திருப்பது கண்டு ஆட்சியாளர்கள் கவலை அடைந்தார்களா என்பது தெரிய வில்லை. ஆனால் இந்த விலை உயர்வு மக்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

உலகின் மொத்த பருப்பு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 23 சதவீதமாக உள்ளது. அப்படி இருந்தும் பருப்பு வகைகளை இன்னும் நாம் இறக்குமதி செய்யும் நிலையில்தான் உள்ளோம்.

நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால்  பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது.  இது விலை உயர்வுக்கு ஒரு முக்கியமான காரணம்.
கடந்த 50 ஆண்டுகளாக பருப்பு உற்பத்தியின் அளவு நமது நாட்டில் அதிகரிக்கவில்லை.  60களில் இந்தியாவில் பசுமை புரட்சி தொடங்கிய பிறகு,  பருப்பு வகைகள்  தவிர மற்ற உணவு வகைகளான காய்கறி, கிழங்கு, நெல், கோதுமை போன்றவற்றின் உற்பத்தியில் நம்மால் தன்னிறவு பெற முடிந்தது.  
பருப்பு உற்பத்தியில் மட்டும் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையே நீடிக்கிறது. 60களில் 140 லட்சம் டன்களாக பருப்பு உற்பத்தி இருந்தது.  இன்றைக்கும் அதே அளவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேபோல சாகுபடி பரப்பளவிலும், மகசூலிலும் மற்ற உணவுப் பயிர்கள் உயர்ந்த அளவுக்கு பருப்பு வகைகள் உயரவில்லை. அன்று முதல் இன்று வரை சுமார் 250 லட்சம் ஹெக்டேர்களில் மட்டுமே பருப்பு வகைகள் பயிரிடப்படுகிறது. மகசூலின் அளவு ஹெக்டேருக்கு 700 கிலோ என்ற நிலையே இன்றும் நீடிக்கிறது.
50களில் சராசரியாக தனி நபருக்கு கிடைத்த பருப்பின் அளவு 60 கிராமாக இருந்தது. தற்போது அது 40 கிராமாக குறைந்து விட்டது.

ஒரு தனிநபருக்கு ஒரு நாளைக்கு 65 கிராம் பருப்பு வகைகள் கிடைத்தால்தான் அவருக்கு உரிய புரதசத்து கிடைக்கும். ஆனால், நமது நாட்டின் பருப்பு உற்பத்தி,  மக்கள் தொகை அடிப்படையில் மேற்சொன்னபடி 40 கிராமாகத்தான் உள்ளது.   இத்தனைக்கும் உலகளவில் பருப்பு உற்பத்தியில் நமது நாடு முன்னிலை பெற்றிருகிறது.  எனினும் தன்னிறைவு அடையாததற்கு காரணமாக அமைந்திருப்பது மக்கள் தொகை பெருக்கம்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாகுபடி பரப்பு அதிகரித்திருந்தால் நமது நாடு தன்னிறைவு அடைந்திருக்கும்.  சாகுபடி பரப்பு அதிகரிக்காமல் போனதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டாததும் ஒரு முக்கிய காரணம்.
இத்தனைக்கும் மற்ற பயிர்களை விட பருப்புக்கான அரசின் ஆதார விலைதான் மிகவும் அதிகம். ஒரு குவிண்டால் துவரம்பருப்புக்கு ரூ.4,700ம்,  பச்சை பயிருக்கு ரூ.4,900மும், உளுந்துக்கு ரூ.4,700 ம் குறைந்தபட்ச ஆதார விலையாக உள்ளது. அப்படி இருந்தும் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் மகசூல் அதிகம் கிடைக்காததுதான்.
அதிக விளைச்சல் கொடுக்ககூடிய வீரிய ரகங்கள் பருப்பு வகையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  முன்னரே சொன்னபடி ஹெக்டேருக்கு சுமார் 700 கிலோ மட்டுமே மகசூல் கிடைக்கிறது.

கோதுமை, நெல் போன்ற பயிர்களோ ஹெக்டேருக்கு 7 டன் வரை கிடைக்கிறது.  எனவேதான் பெரும்பாலான விவசாயிகள் நல்ல மண்வளம் உள்ள நிலங்களில் பருப்புப் பயிர்களை சாகுபடி செய்வதை தவிர்க்கிறார்கள். மானாவாரி நிலங்களில் மட்டுமே விவசாயிகள் பருப்பு வகைகளை பயிரிடுகின்றனர்.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில்தான் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளன.  இந்த மாநிலங்களில் மட்டும் அதிகளவு பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.

அறுவடை செய்த பருப்புப்பயிர்களை விவசாயிகள் விற்பதற்கு அரசின் கொள்முதல் நிலையங்கள் பெருமளவு இல்லை. இது இடைத்தரகர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது.  
இச்சூழலை பயன்படுத்தி இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடிக்கின்றனர். நெல், கோதுமைக்கு இருப்பதைபோல, அரசின் நிரந்தர கொள்முதல் நிலையங்கள் பருப்பு வகைகளுக்கும் இருந்தால்தான், விவசாயிகள் பருப்பு பயிரிட ஆர்வம் காட்டுவர்.

ஏற்கனவே மின்கட்டணம், பால்,  காய்கறி,  பெட்ரோல், பஸ் கட்டணம் போன்றவற்றின் விலை உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் பருப்பு வகைகளின் விலை உயர்வு மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி உள்ளது.  சிக்கன் விலைக்கு இணையாக பருப்பு விலை விற்றால் எப்படி வாங்கி சாப்பிட முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு ஒரு காரணம் என்றால், ஆன்லைன் வர்த்தகமும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்க முடியாது. ஆனால், பருப்பு வகைகளை வாங்கி பதுக்கி வைத்து செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை அரசு தடுக்க முடியும்.  

இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் அதிகமான சாகுபடியைக் கொடுக்கும் வீரிய ரக விதைகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பருப்பு வகை உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு அதன் விலையும் பெருமளவு குறையும்.

முஸ்தபா

 

Issues: