பீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்

பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிற  முக்கியமான காய்கறிகளுள் ஒன்று பீட்ரூட். இது குளிர்பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டு வரை இந்த காய்கறி இந்தியாவுக்கு அறிமுகமாகவில்லை. அந்த நூற்றாண்டு தொடக்கத்தில்தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆங்கிலேயர்களால் உலகின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால் உலக அளவில் மக்கள் விரும்பும் காய்கறியாக  பீட்ரூட் உள்ளது. மக்கள் இதை விரும்புவதற்கு காரணம் இதன் சுவை மட்டுமல்ல, அது கொடுக்கும் பல்வேறு சத்துக்களும்தான்.
 பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை உள்ளதால் இதை சாப்பிடுவோர் பெரும் நன்மை அடைகின்றனர். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்னைக்கு பீட்ரூட் சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.
உடல்பருமன் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி  இதயக் கோளாறுகளை சரிசெய்யும் தன்மையும் பீட்ரூட்டுக்கு உண்டு.
 எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை  வெளியேற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு.
பீட்ரூட்டை சமைத்தும் சமைக்காமலும் உண்ணலாம்.  ஊறுகாய் போடுவதற்கும் பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
பொதுவாகச் சமைக்கும்போது காய்கறிகளின் சத்து குறைந்துவிடும். ஆனால் பீட்ரூட்டைச் சமைக்கும்போதும், அதன் சத்து குறைவதில்லை. அதனால்தான் மருத்துவர்களும் பீட்ரூட்டை சாப்பிடுமாறு பரிந்துரைக்கின்றனர்.

இதன் இலைகள்  கீரையாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை பயிரிட்டு சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம்.
பீட்ரூட் சாகுபடி செய்ய கடினவகை நிலம் உகந்ததல்ல. கரிசல்மண் நிலமே மிகவும் உகந்தது. வெப்பநிலை மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். இது குளிர்காலத்திற்கு ஏற்ற பயிர். குளிர்பிரதேசங்களில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பகுதிகளில் பீட்ரூட் விளைவிக்கப் பட்டுவந்தது.
தற்போது, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு, திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளிலும் விளைகிறது.
‘‘ஒரு எக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகிறது. நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி, ஒரு ஹெக்டேர்  நிலத்திற்கு 20 டன் தொழு எருவும், 60 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும் 100 கிலோ சாம்பல் சத்தும் அடிஉரமாக இட வேண்டும்.
 நட்டதிலிருந்து  30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்தை  மேலுரமாக இட வேண்டும். விதை ஊன்றியவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியம். பின்பு 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுதல் வேண்டும்.

நடவு செய்த 20 நாள் கழித்து பயிர் கலப்பு செய்தல் வேண்டும்.  பொதுவாக வேர் அழுகல்நோயும், இலைப்புள்ளி நோயும் தாக்கும்.

வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 கிராம் பைட்டலாம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த 2 கிராம் இண்டோபில் எம் 45 மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 120 நாள் கழித்து பீட்ரூட் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்யும் போது நிலம் மிதமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். பருவமழை பொழியும் இந்த குளிர்காலத்தில் முறையாக விதைநேர்த்தி செய்தால் ஒரு எக்டேர் நிலத்தில் 20 முதல் 25 டன் வரை பீட்ரூட் மகசூல் கிடைக்கும்.

தற்போது தென்மேற்கு பருவமழை காலமாக இருப்பதால்  பீட்ரூட் சாகுபடி செய்து நல்ல விலை பெறலாம்’’ என்கின்றனர்

வேளாண்மை அதிகாரிகள்.

Issues: