தொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்

நான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள்,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன.  தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால்  நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பயன்படுத்துவதற்கு காகிதம் போலவும்,  பார்ப்பதற்கு துணி போலவும்  இருக்கும் நான் ஓவன் மெட்டீரியல்,  பாலிபுரோப்பலீன் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போலவே நான் ஓவனும் உறுதியானது. காற்றும் தண்ணீரும் புகும் திறன் கொண்டது. சுற்றுச்சூழலுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இது மண்ணில் மக்கக்கூடிய ஒரு பொருள். பிளாஸ்டிக்கோ மண்ணில் மக்காது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு நான் ஓவன் பயன்பாட்டை   ஊக்குவிக்கும் முயற்சியை அரசு எடுத்து வருகிறது.

இந்த நான் ஓவனை பயன்படுத்தி கேரிபேக், தாம்பூலப்பை, தலையணை உறை, சீட் கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், கிளவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நிறுவனங்கள் இந்த நான் ஓவன் மெட்ரியல் சீட் கவர்களையே, பேப்பர்களை போட்டு வைப்பதற்கு பயன்படுத்துகின்றன.
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறை, மருத்துவ துறை இவற்றில்  நான் ஓவன் மெட்டீரியல் பயன்பாடு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆயத்த ஆடைகளில் காடா துணி, கேன்வாஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நான் ஓவன் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தயாரிக்கவும் நான் ஓவன் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தைப்  பொறுத்தவரை,  நான் ஓவன் மெட்டீரியலை பயன்படுத்தி, பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இதற்கான நிறுவனங்கள் பல உள்ளன.  

தமிழகத்திலும் நிறுவனங்கள் பெருகவேண்டும் என்பது தமிழக அரசின் விருப்பமாக உள்ளது. எனவேதான் இத்தொழிலுக்கு மானியத்தை அரசு வழங்கி வருகிறது.   தற்போதைய நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலை தொடங்கினால் பணத்தை வாரி குவிக்கலாம்.
நான் ஓவன் மெட்டீரியலைக் கொண்டு பொருட்கள் தயாரிப்பதற்கு இரண்டு வகையான மிஷின்கள் உள்ளன. ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் ஆகிய இயந்திரங்கள் மூலம் பொருட்களை தயாரிக்கலாம்.  

நான் ஓவன் மெட்டீரியலை அளவெடுத்து  வெட்டுவதற்கு டேபிள், மிஷின் கட்டர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெட்ட பட்ட ஓவன்களை தேவையான பொருட்களாக மாற்றுவதற்கு ஸ்டிச்சிங் மிஷின் பயன்படுத்தப்படுகிறது.  இது செமி ஆட்டோமேட்டிக் தயாரிப்பு முறையாகும்.
நான் ஓவனை இயந்திரத்தில் இணைத்து விட்டால், அதுவே அளவெடுத்து, தேவையான அளவு வெட்டி, தேவையான பொருளை தயாரித்து வெளியே அனுப்பி விடுகிறது. இது ஆட்டோமேட்டிக்  தயாரிப்பு முறையாகும்.

இந்த தொழிலை தொடங்க நினைப்பவர்கள் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வாங்குவதே சிறந்தது.  இந்த மிஷின் ரூ 31 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.   இந்த மிஷினை வாங்குவதற்கு 70 சதவீதம் வரை வங்கிக் கடன் கிடைக்கிறது. மானியமாக 25 சதவீதம் மாநில அரசு மூலம் வழங்கப்படுகிறது.
முதலீடு செய்வோரிடம் 5 சதவீத பணம் இருந்தாலே போதுமானது. ஒரு சிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்களை நிறைய மாடல்களில் தயாரித்தால் ஆர்டர்கள் குவியும்.

நான் ஓவன் மெட்டீரியலை ஆலைகளில்  இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கிறார்கள். இவர்களிடமிருந்து நான் ஓவன் மெட்டீரியலை வாங்கிக்கொள்ளலாம். இந்த தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் புதிய தொழில் முனைவோர்கள் இந்த தொழிலில் துணிந்து இறங்கலாம்.

கார்த்திக்

 

Issues: