எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையை அமைப்பது எண்ணங்களே. ஆம்.. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பது எண்ணங்களே. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றி தோல்வி அமைகிறது. நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான். தன்னம்பிக்கை இல்லாத எண்ணம் தோல்வி அடைகிறது.

“ஒரு மான் குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. குட்டிகளைப் பெற்றெடுத்த பின்பும், தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே அந்த மான் வசித்து வந்தது. அந்த குகை சிங்கம் வசிக்கும் குகையாகும். பல நாட்களாக அந்த சிங்கம் குகைக்கு வரவில்லை. வேறு காட்டிற்கு சென்றிருந்த அந்த சிங்கம் திடீரென ஒருநாள் அந்த குகைக்கு வந்தது.

பொதுவாக மான்கள் சிங்கத்தை கண்டால் பயந்து ஓடும். ஆனால் இந்த மான் தைரியம் கொண்ட மானாக திகழ்ந்தது. சிங்கத்தைக் கண்டவுடன் பதட்டம் அடையாமல் தன் குட்டிகளிடம், சிங்கம் அருகில்வந்ததும், சிங்கத்தின் கறி வேண்டும் என சத்தமாக கத்துமாறு கூறியது. சத்தத்தை கேட்ட சிங்கம், பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது. பின்னர் எவ்வித பிரச்சனையும் இன்றி அந்த மான் தனது குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது” எண்ணம் போல் வாழ்வு என்பதற்கு இந்த கதை சிறந்த உதாரணம்.

சிங்கத்தைக் கண்டால் பயப்படும் சுபாவம் கொண்ட மான் இனத்தில் பிறந்த ஒரு மான், தனது தைரியமான எண்ணத்தின் துணை கொண்டு, காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை விரட்டிய டித்தது முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும். தைரியமும் தன்னம் பிக்கையும் இருந்து விட்டால் வாழ்க் கையில் எதையும் சாதிக்க முடியும். என் னிடம் பணம் இல்லை யே... என்னால் எப்படி வெற்றி பெற முடியும் என்று புலம்புபவர்கள் ஏராளம்.

உண்மையில் பிரச்சனை என்பது பணத்தில் இல்லை. மனத்தில்தான் இருக்கிறது. பாஸிட்டிவ் சிந்தனைகளை மனதில் வளர்த்தெடுப்பவர்களுக்கு பணம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. இதற்கு ஒரு உதாரணம் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

இன்று இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பெண்களில் முன்னணியில் இருப்பவர், கிரண் மஜம்தார் பயோகான். இவர் பயணித்த பாதை என்பது மிகவும் கடினமானது. பல்வேறு தடைகளை தாண்டித்தான் இந்த வெற்றியை அவர் அடைந்திருக்கிறார்.

டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி, நாட்டின் பிரதமர் நிலைக்கு உயர்ந்த மோடி பிறந்த குஜராத்தை சேர்ந்தவர்தான் இந்த கிரண். கிரணுக்கு டாக்டர் ஆக வேண்டுமென்பது பெரும் விருப்பமாக இருந்தது. ஆனால் வீட்டு பொரு ளாதார நிலை கைக் கொடுக்காததால் பி.எஸ்.சி. விலங்கியலை படித்தார். எம்.எஸ்.ஸியை ஆஸ்தி ரேலியாவில் படித்தார்.

படிப்பு முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய கிரண், கம்பெனி கம்பெனியாக ஏறி வேலை தேடினார். சுமார் இரண்டு ஆண்டுகள் கிரணின் வாழ்வு, நேர்முகத் தேர்வுக்குச் செல்வதும், பெண் என்ற காரணத்திற்காக வேலை மறுக்கப்படுவதுமாகவே கடந்தது. பிறகு சொந்தமாக தொழில் செய்தால் என்ன என்று யோசித்தார்.

சொந்த தொழில் தொடங்குவதற்கு கிரணின் அப்பாவும் சம்மதித்தார். பணம் திரட்ட வீட்டுப் பத்திரத்தையும் கொடுத்தார். ‘என்சைம்’ எனப்படும் நொதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலையை தனது வீட்டிலேயே தொடங்கினார் கிரண். இதற்கான முதலீடு ரூ 10ஆயிரம் ஆனது.

1978ல் பயோகான் என்று பெயரிடப்பட்ட அந்நிறுவனத்தில், பப்பாளிப் பழத்தில் இருந்து நொதிப் பொருட்கள் எடுக்கப் பட்டது. இந்த என்சைம் இறைச்சியைப் பதப்படுத்தப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் நடத்தும் நிறுவனம் என்பதால் தொடக்கத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதே சிரமமாக இருந்தது. பின்னர் ஒரு வழியாக பிரச்சனை சமாளிக்கப்பட்டது. வேலை செய்ய ஆட்கள் கிடைத்த பிறகு, நிறுவனத்தை விரிவாக்க திட்டமிட்டார் கிரண். வங்கிகளை அணுகினார். வங்கிகளோ அவரது கடன் விண்ணப்பத்தை நிராகரித்தன. இறுதியாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அவருக்கு கடன் கொடுத்தது. அதைக் கொண்டு தன்னுடைய தொழிற்சாலையை விரிவு படுத்தினார். சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தொழிலை விரிவுபடுத்தினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று பலவற்றிற்கும் உற்பத்தி செய்த நொதிப்பொருட்களை ஏற்றுமதி செய்தார். பின்னர் தன் பார்வையை மருந்துகள் தயாரிப்புப் பக்கம் திருப்பினார். முதலீட்டுக்காக பயோகானின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்டார். ஒரே நாளில் 4500 கோடி ரூபாய் கிடைத்தது. நிறுவனமும் வேகமாக வளர்ந்தது. இவரது திறமையையும், வளர்ச்சியையும் கண்ட ஸ்காட்லாந்தின் முக்கிய தொழிலதிபரான ஜான் ஷா என்பவர் கிரணை திருமணம் செய்து கொண்டார். பெரிய தொழிலதிபராக அவரது கணவர் இருந்தாலும் முடிவுகளை கிரண் மட்டுமே எடுக்கிறார் .

பயோகானில் முதலீடு செய்யும் சந்தர்ப்பம் வந்தபோது, தன்னுடைய ஸ்காட்லாந்து வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பயோகானின் பங்குகளை வாங்கினார் ஜான் ஷா. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் மூன்று அடிப்படை விசயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக கிரண் குறிப்பிடுகிறார்.

தான் உட்பட தனது நிறுவனத்தில் பணி யாற்றும் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளுதல், முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவரை ஒருவர் மதித்து பணியாற்றுதல், யார் மீதும் பொறாமை கொள்ளாமல் அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்தல், ஆகிய விசயங்களை கடைபிடித்ததால் வெற்றி சாத்தியமானதாக கிரண் கூறியிருக்கிறார். இன்று ஊழியர்களின் எண்ணிக்கையில், உலகிலேயே 7வது பெரிய பயோடெக்னாலஜி கம்பெனியாக பயோகான் நிறுவனம் திகழ்கிறது என்றால் அதற்கு காரணம் தடைகளை தகர்த்தெறியும் கிரணின் தன்னம்பிக்கைதான்.

மேலும் அவருக்கு துணிச்சலான முடிவெடுக்கும் திறன் இருந்தது. பொறுப்பும் , ஈடுபாடும் கொண்ட உழைப்பை செலுத்தினார். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எதையும் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். இந்த குணாம்சம் அவரை மாபெரும் பெண் தொழிலதிபராக உயர்த்தியது.

ஆரம்பத்தில் கிரணிடம் கையில் பணம் இல்லை. ஆனால் தொழில் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணம் பணத்தை திரட்டுவதற்கான வழியை காட்டியது. கையில் பணம் இல்லை என்று அவர் முடங்கியிருந்தால் இந்தியாவுக்கு ஒரு முன்னணி பெண் தொழிலதிபர் கிடைத்திருக்கமாட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது.

அவர்கள் எப்போதும் தங்களின் செயல்களிலும் நேரத்திலும் கவனம் வைத்திருந்ததோடு, மற்ற மனிதர்களின் நிறையை பற்றி மட்டுமே பேசி, பாசிட்டிவ் சிந்தனையோடு வாழ்க்கையை எதிர் கொண்டார்கள். செய்யப் போகும் காரியம், சந்திக்கப் போகும் சவால் இவற்றின் தன்மை பற்றி சரியான புரிதல் கொண்டிருந்தார்கள். பலம், பலவீனம் பற்றிய மனதெளிவு பெற்றவர்களாக இருந்தார்கள். போட்டியாளர்கள் பற்றி நன்றாக அறிந்திருந் தார்கள்.

தொடரும்...

Issues: