வருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு

ஆட்டுக்கறியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. விலை அதிகரித்தாலும் மக்கள் ஆட்டுக்கறியை வாங்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஆட்டுக்கறியில் தான் பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. குறிப்பாக புரத சத்து மிக அதிகமாக கிடைக்கிறது. எனவே ஆடு வளர்ப்பு தொழிலை மேற்கொள்வோர் நன்றாக சம்பாதிக்கின்றனர்.

குறிப்பாக செம்மறி ஆடு வளர்ப்பது அதிக வருமானத்தை ஈட்டி தரும். மழை, வெயில், குளிர் என அனைத்து சூழல்களிலும் செம்மறி ஆட்டை வளர்க்க முடியும். விரைவாக அதிக வருவாய் ஈட்ட முடியும். இவ்வகை ஆடு வளர்ப்பதற்கு சிறிய இடமும், சிறிய கொட்டகையும் இருந்தால் போதுமானது. நன்றாக வளர்ந்த ஆட்டில் இருந்து சராசரியாக 20 முதல் 30 கிலோ வரை கறி கிடைக்கிறது.

செம்மறி ஆடுகள் மந்தையாகவே மேய்வதால் அவற்றை பராமரிப்பது மிகவும் எளிது. இவற்றில் இருந்து கிடைக்கும் கறி தவிர தோல், பால், எருக்கள் இவற்றில் இருந்தும் வருமானம் ஈட்ட முடிகிறது. 2 ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு நபர் சுமார் 100 ஆடுகளை வளர்க்க முடியும். பகல் வேளையில் திறந்த வெளியில் ஆடுகளை மேய விட்டு இரவில் கொட்டகையில் அடைத்து விடலாம்.

வளர்ப்பதற்கு ஆட்டுகுட்டிகள் வாங்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். இடைத்தரகர்களை நாடாமல் நேரடியாக ஆட்டுக்குட்டிகளை வாங்க வேண்டும். வாங்கிய உடன் இன்சூரன்ஸ் செய்துவிட வேண்டும். ஓரிரு ஆடுகள் இறந்தாலும் நஷ்டப்பட வேண்டியதில்லை. ஆடு இறந்து விட்டது என்று கால்நடை மருத்துவரிடம் ஒரு சான்றிதழ் வாங்கி கொடுத்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைத்து விடும்.

படித்த வேலையில்லாத இளைஞர்கள் கூட இத்தொழிலில் இறங்கலாம். வேலை தேடி அலைந்து கொண்டு இருப்பதை விட இத்தொழிலை சுயமாக மேற்கொள்ளலாம். வேலைக்கு சென்று வாங்கும் சம்பளத்தைவிட அதிக வருமானத்தை இத்தொழிலில் ஈட்டலாம். படித்த இளைஞர்களுக்கு இத்தொழிலில் ஈடுபடுவதற்கு இருக்கும் ஒரே தடை கவுரவம் பார்ப்பது.

மேலை நாடுகளில் ஆடுகள் வளர்ப்பதை படித்த இளைஞர்கள் கவுரவ குறைச்சலாக நினைப்பதில்லை. மற்ற தொழிலை போலவே இதுவும் ஒரு தொழில் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். நிறைய வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களை போன்ற எண்ணம் நம் நாட்டு படித்த இளைஞர்களுக்கும் வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

அதேபோல சிறு குறு விவசாயிகள், விவசாயம் செய்வதோடு கூடுதலாக ஆடுகள் வளர்ப்பிலும் ஈடுபடலாம். நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களும் குறைந்த முதலீட்டில் ஆடுகள் வாங்கி வளர்த்து வருமானம் ஈட்டலாம். ஆடுகள் உற்பத்தி பற்றி அதிகமான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்துக்கோ, வேளாண் அலுவலகத் திற்கோ சென்று தெரிந்து கொள்ள லாம்.

Issues: