அவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்
பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். தனி நபர் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம். இதற்கு வங்கிகள் கூறும் காரணம், அது பாதுகாப்பற்ற கடனாம்.
மாதத் தவணையை குறிப்பிட்ட நாட்களில் செலுத்த முடியும் என்றால் தனி நபர் கனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் கடன் சுழலுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். அவசரம் மற்றும் அவசியத்திற்கு பணம் தேவைப்பட்டால் தனி நபர் கடன் குறித்து யோசிக்கலாம்.
இதற்கு குறைவான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். பிராசசிங் நேரமும் குறைவு. உடனடியாக முடிக்க வேண்டிய அவசியத் தேவைகளுக்கு மட்டும் தனி நபர் கடனை நாடுவது என்று தீர்மானமாக இருங்கள். உங்களின் கடைசி வழியாகவே இது இருக்க வேண்டும். கிரடிட் கார்டு மூலமாக பணம் பெறுவதற்குப் பதில் தனிநபர்கடன் மேல்.
சூதாடுதல், சுற்றுலாசெல்தல், கார்வாங்குதல் போன்றவற்றுக்கு தனிநபர்கடன் பெறுவது சிக்கலில் ஆழ்த்தி விடும். தனிநபர் கடனில் வட்டி அதிகம் என்பதோடு பல்வேறு கட்டணங்களும் உள்ளன.
கடன் கேட்டு அளிக்கும் விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்த கடன் கோருபவருக்கு பிராசசிங் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது கடன் தொகையில் 1 முதல் 2 சதவீதமாக இருக்கும். சில வங்கிகள் எல்லாத் தொகைகளுக்கும் ஒரு பொதுவான கட்டணத்தை விதிக்கின்றன.
கடன் தொகையை அதற்குரிய கால கட்டத்துக்கு முன்பே செலுத்தி முடித்தால் முன் கூட்டிச் செலுத்துவதற்கான கட்டணத்தை கடன் பெற்றவரிடம் வங்கிகள் வசூலிக்கும். அது நிலுவையில் உள்ள தொகையில் 2 முதல் 5 சதவீதமாக இருக்கும். பொதுவாக கடன் பெற்ற குறிப்பிட்ட காலத்துக்குப் பின்தான் பிரீ பேமண்டுக்கு அனுமதி அளிக்கப்படும்.
மாதாந்திர தவணைத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தாமதித்தால் தவணைத் தொகையுடன் ஒரு தாமத அபராத கட்டணத்தை வங்கிகள் விதிக்கும். அது 2 முதல் 3 சதவீதம் என்ற அளவில் இருக்கும். தனி நபர் கடன் பெற்றவர் ஒரு பின் தேதியிட்ட காசோலையை வழங்கி அது அவரது கணக்கில் போதுமான பணம் இல்லை என்று திரும்பி விட்டால் அதற்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
கடன் விண்ணப்பத்தைச் செயல்படுத்தும் போது விண்ணப்பதாரரின் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக டாக்கு மெண்டேஷன் சார்ஜ் விதிக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1000 வரை இருக்கும்.
கால அளவு குறுகியதாக இருந்தால் மாதாந்திர தவணைத் தொகை அதிகமாக இருக்கும். நீண்ட காலக் கடன் என்றால் மாதாந்திர தவணைத் தொகை குறைவாக இருக்கும்.
தனி நபர்கடன் பெறும் போது இவ்விஷயங் களையெல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப முடிவு செய்யுங்கள்.
தங்கவேல்