வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா?

அதிர்ஷ்டம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்று பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கருத்து மிகவும் அபத்தமானது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறோம்.
அந்த வெற்றிக்கு பின்னால் எவ்வளவோ வலிகளும், வேதனைகளும் மறைந்து இருப்பதை உணர மறுக்கிறோம்.
‘நீ எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறாயோ அந்த அளவிற்கு உனக்கு அதிர்ஷ்டம் உண்டு’ என்று கேரி பிளேயர் என்ற அறிஞர் சொல்லி இருக்கிறார்.
எனவே அதிர்ஷ்டசாலிகள் என்று யாரை கருதிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாம் கடினமாக உழைத் தவர்கள். மற்றவர்கள் தூங்கும்போது அவர்கள் விழித்திருந்து செயல்பட்டவர்கள். முயற்சியை ஒரு போதும் கைவிடா தவர்கள். மற்றவர்கள் தங்களது ஜாதகத்தை நம்பியபோது அவர்கள் தமது திறமையையும், செயலையும் நம்பியவர்கள்.
அதனால்தான் அவர்களால் வெற்றியாளர் களாகவும், சாதனை யாளர்களாகவும் திகழ முடிகிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு. துயர் மிகுந்த தருணங்களும் உண்டு. துயரமான தருணங்களை வெற்றியாளர்கள் ஒருபோதும் கசப்பாக நினைத்துவிடுவதில்லை. அந்த கசப்பை எப்படி இனிப்பாக மாற்றுவது என்ற ரீதியில் சிந்தித்து செயல்படுவது வெற்றியாளர்களின் இயல்பு.
இவ்வாறு நுணுக்கமாக செயல்படுபவர்களை ஒரே வார்த்தையில் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்வது சரியாகாது. உழைப்பிற்கு கிடைக்கும் ஊதியம்தான் அதிர்ஷ்டம்.
இந்த அதிர்ஷ்டம் தற்செயலாக கிடைத்து விடாது. வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து செயல் பட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் வெற்றி தாமாக வந்து சேரும். அப்போது அது பிறரால் அதிர்ஷ்டம் என்று வர்ணிக்கப்படுகிறது.
இன்றைய இளைஞர்கள் வேகமாக வெற்றியடைய வேண்டு மென விரும்புகிறார்கள். அதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று கருதுகி றார்கள். வேகமாக வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை. அதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று எண்ணுவதுதான் தவறு. தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சில கஷ்டங்களையும், துயரங்களையும் பொறுத் துக்கொண்டுதான் ஆக வேண்டும். துன்பங்களை கண்டு துவண்டு விட்டால், செயலில் தொய்வு ஏற்பட்டுவிடும்.
எனது வாழ்க்கையிலும் இதற்கு உதாரணம் உண்டு. தொழிலில் நான் காலடி எடுத்து வைத்த பிறகு பல்வேறு தடைகளை சந்திக்க நேர்ந்தது. அவ்வப்போது சிறு தோல்விகள் ஏற்பட்டன. ஆனாலும், நான் மனம் கலங்கவில்லை. தன்னம்பிக்கையோடு செயல்பட்டேன். எந்த சூழ்நிலையிலும் எனது மன உறுதியை நான் கைவிடவே இல்லை. இன்றைக்கு ஆல்வின் குழும நிறுவனங்கள் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது என்றால் இதற்கு அடிப்படை காரணம் எனது மன உறுதிதான்.
ஆல்வின் குழும நிறுவனங்களில் ஒன்றான ஆல்வின் கோல்டன் சிட்டியை, சர்வதேச நிறுவனமாக உயர்த்தி, ஆயிரக்கணக்கானோ ருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களை பொருளாதாரா ரீதியாக உயர்த்த வேண்டும் என்று எண்ணி நம்பிக்கையுடன் செயல்பட்டேன். அதில் வெற்றியும் பெற்றேன்.
கஷ்டங்களையும், துயர ங்களையும் உரமாக்கிக் கொள்ளவேண்டும். படையப்பா படத்தில் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது.
‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக் கொரு படிக்கல்லப்பா’
ரஜினிகாந்த் அந்த படத்தில் பல்வேறு சோதனைகளை சந்திப்பார். எதிரிகள் அவரை வீழ்த்துவதற்கு பல்வேறு வியூகங்களை வகுப்பர். ஆனால் அவற்றையெல்லாம் தன்னுடைய மன உறுதியால் கடந்து வெற்றிக் கொடி நாட்டுவார்.
தனக்கு வரும் தடைகளையே படிக்கட்டாக்கி வெற்றிக் கொடி நாட்டுவதுதான் அந்த படக்கதையின் சாராம்சமாகும்.
நமது வாழ்க்கையிலும் எண்ணற்ற தடைகள் வருவது உண்டு. அந்த தடைகளை எல்லாம் படிகளாக்கி மேலே செல்ல வேண்டும். அப்போதுதான் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
சுவாமி விவேகானந்தர் ‘எனக்கு வலிமையை தா என்று கடவுளிடம் வேண்டினேன். கடவுளோ கடினமான தருணங்களை எனக்கு தந்தார். அதையெல்லாம் எதிர்கொண்டுதான் நான் பலத்தை பெற்றேன். கடவுள் கடினமான தருணங்களை மனிதனுக்கு தருவது, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை சோதிப்பதற் காகத்தான் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.
அந்த துயரமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளத் தவறி இருந்தால் என்னால் துறவியாகி இருக்க முடியாது. உலகம் முழுவதும் இந்து மதத்தின் மேன்மைகளை பரப்பி இருக்க முடியாது. சாதாரண மனிதனாகவே இருந்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.
இப்போது சிந்தித்து பாருங்கள்.. விவேகானந்தரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமா? அவரது தன்னம்பிக்கையா?
தன்னம்பிக்கையோடு அவர் தீவிரமாக செயல்பட்டதால்தான் உலகம் அவரை வீர துறவியாக போற்றியது.
இந்தியா முழுவதும் இன்றைக்கு ராமகிருஷ்ண மடம் லட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு இலவசமாக கல்வி சேவை வழங்கி வருகிறது என்றால் அதற்கு காரணம் விவேகானந்தர் போட்ட அடித்தளம்தான். உலகம் முழுவதும் பயணம் செய்து இந்து மதத்தின் மேன்மைகளை பிரச்சாரம் செய்தார். அதன் மூலம் கிடைத்த நிதியை கொண்டு ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
இன்றைக்கு அந்த மடம் பெரும் கல்வி சேவையையும், ஆன்மிக சேவையையும் ஆற்றி வருகிறது. விவேகானந்தர், அதிர்ஷ்டம் வரும் என்று நம்பி செயல்படாமல் இருந்திருந்தால் அவரால் வெற்றியாளராக பரிணமித்திருக்க முடியுமா?
நிலவில் கால் பதிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம் என்று நினைத்த காலம் உண்டு. அந்த எண்ணத்தை விஞ்ஞானம் உடைத்தது. மனிதன் நிலவில் கால் பதித்தான். இந்த சாதனை அதிர்ஷ்டத்தால் நிகழ்ந்தது என்று சொன்னால் அது மடமை.
நிலவில் கால் வைப்பதற்காக பல ஆண்டுகாலம் ஆராய்ச்சி நடைபெற்றது. நிலவில் மனிதன் கால் வைப்பதற்கு முன்னால் ரஷ்யா முதலில் விண்கலத்தை நிலவில் இறக்கியது. அதன் பிறகே அமெரிக்கா, மனிதன் நிலவில் கால் பதிக்கும் சாதனையை நிகழ்த்தியது.
இன்றைக்கு செவ்வாய் கிரகத்திலும் மனிதன் அனுப்பிய விண்கலங்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. விரைவில் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டமும் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்த சாதனைகள் எல்லாம், தொடர் முயற்சிக்கும், பகுத்தறிவு சிந்தனைக்கும் கிடைத்த வெகுமதியாகும். படிக்காத மேதை என்று புகழ் பெற்ற பெரும்தலைவர் காமராஜர், முதலமைச்ச ரானபோது பலரும் பரிகசித்தனர். அதிர்ஷ்டத்தால் இவர் முதலமைச்சரானவர் என்று கூறினர்.
அதிர்ஷ்டத்தால்தான் இவர் உயர்ந்த இடத்தை அடைந்தார் என்று கூறியவர்கள்தான் உண்மையில் படிக்காதவர்கள் என்று சொல்ல வேண்டும்.
காமராஜர் பள்ளியில் சென்று படிக்கவில்லை என்ற போதிலும் வாழ்க்கையை நுணுக்கமாக கற்றார். உழைப்பதில் தீவிர ஆர்வம் காட்டினார். சமூக முன்னேற்றத்திற்காக தீவிரமாக போராடினார். மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதை இளம் வயதிலேயே கொள்கையாக கொண்டார்.
இளம் வயதிலேயே அரசியலில் குதித்தார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடினார். இதன் காரணமாகத்தான் கட்சித் தலைமை அவரை முதலமைச்சாரக்கியது. கிடைத்த முதல்வர் பதவியை திறமையாக கையாண்டு தமிழகத்தை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்கினார்.
படிக்காதவர் என்று பரிகசித்தவர்கள் எல்லாம் அவரை படிக்காத மேதை என்று போற்றினர். அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர் என்று கூறியவர்கள் எல்லாம் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று போற்றினர். எனவே வாழ்வில் சாதனை படைப்பதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை. தேவைப்படுவதெல்லாம் கடுமையான உழைப்பும், முயற்சியும்தான்.

Issues: