பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா?

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, பணியில் இருக்கும் சிலருக்கு எழக்கூடும். ஆனாலும் பணியை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய பலர் தயாராக இருப்பதில்லை.
சிலர் சம்பளத்துக்கு பணி புரிந்து கொண்டே பகுதி நேரமாக சொந்தத்தொழில் செய்வதுண்டு. அவ்வாறு செய்து தொழிலில் ஓரளவு வருமானம் கிடைக்கத் தொடங்கியவுடன் சம்பள பணியை விட்டுவிடுகின்றனர்.
இன்னும் சிலருக்கு பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்குரிய வழிமுறைகள் தெரியாது.
இத்தைகையோருக்கு உதவும் விதமாக இங்கே சில ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக, பகுதி நேரமாக சொந்த தொழில் செய்து மாபெரும் உயரத்தை எட்டிய ஒரு தொழிலதிபர் குறித்து பார்ப்போம்.
ஹாட் சிப்ஸ் ஹோட்டல் இன்றைக்கு எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பதை நாம் அறிவோம். இதன் நிறுவனர் வாசுதேவன் இந்தக் கடையை பகுதி நேர தொழிலாகத்தான் ஆரம்பித்தார் என்பது பலர் அறியாத உண்மை.
இவர் பேராசிரியராக இருந்தவர். ஹோட்டல் தொழிலுக்கு இவர் வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை.
இவர் வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர் களின் வாழ்க்கைச் சம்பவங்களை மாணவர்களுக்கு வகுப்பில் அடிக்கடி எடுத்துரைப்பார்.
இந்த தொழிலதிபர்களைப் போல் தாமும் ஏன் சொந்த தொழில் செய்து முன்னேறக்கூடாது என இவருக்கு தோன்றியது. உடனே பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தார்.
இவரது வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருந்துக்கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தினார். அடுத்து இன்னொரு மருந்துகடை, பல்பொரு அங்காடி என தொழிலை விரிவுப்படுத்தினார்.
எனினும் எதிர்ப்பார்த்த முன்னேற்றமில்லை. வேறு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தார். இவரது மருந்து கடையை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடை இருந்தது.
அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம், வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவழைக்கிறது என அறிந்து, அதே போல் ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தார்.
இது இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் நொறுக்குத் தீனிகள் தயாரித்து வழங்கப் பட்டன.
இந்தக் கடையின் வட இந்திய உடனடி சாட் உணவுகள் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றன. வருமானம் பெருகத் தொடங்கியது.
பிறகு 1992 ல் இவர் பார்த்து வந்த பேராசிரியர் வேலையை விட்டு முழு நேர பிசினஸ் மேன் ஆனார். சிப்ஸ் கடையை தொடர்ந்து ஓட்டலையும் தொடங்கினார்.
இவரது முதல் ஓட்டல் நுங்கம்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு இவர் 18 ஓட்டல்களை நடத்தி வருகிறார். 1500 பேருக்கு வேலை தந்துள்ளார்.
பேராசிரியராக இவர் பணியை தொடர்ந்திருந்தால் இப்போதும் மாதச் சம்பளம்தான் வாங்கிக்கொண்டு இருந்திருப்பார். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை உதித்து, அதன்படி திறமையாக செயல்பட்டதால்தான் இவரால் இன்றைக்கு 1500 பேருக்கு வேலை வாய்ப்பு தர முடிந்துள்ளது.
இவரைப் போன்று பகுதி நேரமாக சொந்த தொழில் செய்து வெற்றி பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களது வழிமுறைகள் நமக்கு பாடமாக இருக்கும்.
மேலும் சில ஆலோசனைகள்
உங்களுக்கு பணி பகலில் என்றால்,உங்கள் பணியையும், பகுதி நேர தொழிலையும் ஒரே நேரத்தில் செய்ய முற்பட வேண்டாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின் உங்களின் தொழிலை கவனியுங்கள்.
அந்த தொழில் குறித்த தகவல்களை அப்டேட் செய்து கொள்வது அவசியம். பகுதி நேர தொழில் சிறிய அளவில் மட்டும் வருமானம் தருகிறது என்று சொன்னால் நிரந்தர வேலையை விடுவது பற்றி சிந்திக்காதீர்கள்.
நிகழ்காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் பகுதி நேர தொழில் வளமையை தரும் என்று நீங்கள் உறுதியாக நம்பினால், நிரந்தர வேலையை விட்டு விட்டு, பகுதிநேர தொழிலை நிரந்தர தொழிலாக ஆக்கிக் கொள்ளலாம்.
ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் போன்ற சேவைத் துறையில் பகுதி நேரமாக தொழில் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன.இவற்றில் பணி செய்தும் கூடுதல் வருமானம் பெறலாம்.

பாண்டியன்

Issues: