விரைவில் சோலார் கிரைண்டர்கள்! அசத்தும் சௌபாக்யா நிறுவனம்
மொத்த கிரைண்டர் மார்க் கெட்டில் 37 சதவீதத்தை சௌபாக்யா கிரைண்டர்ஸ் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. சமையலறைக்குத் தேவையான பல பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தை நிறுவியவர் வெங்கட் நாராயண செட்டியார் அவர்கள். சாதாரண வணிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர். சௌபாக்யா கிரைண்டரை வடிவமைத்து உருவாக்கியவர் இவரே. இதற்காக இவர் ஒன்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்று பயிலவில்லை. அனுபவம் இவரை தொழில்நுட்ப வல்லுனர் ஆக்கியது. இவர் வாங்கி உபயோகித்த கிரைண்டர் அடிக்கடி பழுதானது.. அப்பழுதை இவரே நீக்கினார். கிரைண்டரின் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொண்டார். தரமான கிரைண்டர் தயாரித்து மக்களுக்குத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
அதன்படி தரமான கிரைண்டரை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யத் தொடங்கினார். இப்படித்தான் சௌபாக்யாவின் பயணம் தொடங்கியது. இவரது மூன்று மகன்களையும் தனது வணிகத்துக்கு கொண்டு வந்தார். ராஜேந்திரன், ஆதிகேசவன், வரதராஜன் ஆகியோர் சௌபாக்யாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றனர். சென்னையில் சௌபாக்யாவின் நிர்வாகத்தை செய்து கொண்டிருப்பவர் வரதராஜன்.
இந்த ஆண்டிற்குள் குறைந்தது 50 சமையலறைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் குறைந்தது 15 பிரத்யேக சௌபாக்யா ஷோரூம்களை அமைக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் அவர்கள் மாவு அரைப்பது போன்ற வேலைகளைக் குறைத்துக் கொண்டு ரெடி-டு-யூஸ் பொருட்களை வாங்கத் தொடங்கி விட்டனர். எனவே உணவு தயாரிப்புத் துறை இன்னும் நல்ல வளர்ச்சியைக் காணும். அதனால் இந்நிறுவனம் வணிகரீதியான உணவு தயாரிக்கும் இயந்திர உற்பத்தியில் நுழைந்துள்ளது.
கிரைண்டர் முதல் சப்பாத்தி செய்யும் இயந்திரம் வரை பல பொருட்களை இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. காபி மற்றும் சாக்லேட் பானங்களை தயாரித்து அளிக்கும் வென்டிங் மெஷின் கப் ஒ காஃபே யை பல இடங்களில் நிறுவியுள்ளது.
இன்றைக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது மின்வெட்டு. எனவே மின்வெட்டு நேரங்களில் பெண்களுக்கு உதவும் வகையில் சோலார் கிரைண்டர்களை இந்நிறுவனம் வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருமணம் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு உதவும் வகையில் வடை தயாரிக்கும் இயந்திரம் ஒன்றையும் இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்த இயந்திரம் தானே மாவு அரைத்து பிசைந்து வடை அளவு மாவு எடுத்து, எண்ணெயில் போட்டு வடையை எடுத்துத் தரும் ஆற்றல் கொண்டது. மேலும் இந்த இயந்திரம் மணிக்கு 1800 வடைகள் தயாரிக்கும் ஆற்றல் கொண்டது.
கிரைண்டர் நீண்ட நேரம் ஓடும்போது பெண்களுக்கு போரடிக்காமல் இருக்க அதன் ஓசையை இசையாய் மாற்றும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
சிறந்த தரம், விற்பனைக்குப் பின்பும் முறையான சர்வீஸ் என்பது சௌபாக்யாவின் அடிப்படை வியாபார கோட்பாடு. அதே போல நேர்மையான செயல்பாடும் இந்நிறுவனத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. அதனால் தான் இந்நிறுவனத்தின் வியாபாரம் தென்னிந்தியா முழுவதும் வியாபித்திருக்கிறது. மேலும் வெளிநாடுகளிலும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி இருக்கிறது.
இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களில் 60 சதவீதம் தமிழகத்தில் விற்கப்படுகிறது. தென்னிந்திய அளவில் எடுத்துக் கொண்டால் 80 சதவீதம் சந்தைப்படுத்தப்படுகிறது. மீதியுள்ள 20 சதவீதம் வட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதன்