ஈஸியா சம்பாதிக்க ஈக்விட்டி

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியை இரண்டு வழிகளில் திரட்டுகின்றன. ஒன்று வங்கி. மற்றொன்று பங்குசந்தை. இன்றைக்கு வளர்ந்த நிறுவனங்கள் எல்லாம் பங்குசந்தையில் நிதி திரட்டிய நிறுவனங்களே.
குறிப்பிட்ட சதவீத பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்து அவர்களையும் நிறுவனத்திற்கு பங்குதாரராக ஆக்குகிறார்கள். அந்த பங்குதாரர் வைத்திருக்கும் பங்கை ஈக்விட்டி என்றும் சொல்வார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு அதில் முதலீடு செய்பவர் பகுதி சொந்தக்காரராகிறார்.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போது நாம் அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் பார்ட்னராகி விடுகிறோம். லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனினும் சில பொருளாதார தாக்கங்களின் காரணமாக சில நிறுவனங்கள் நஷ்டத்திற்கும் ஆளாகின்றன.
அந்த நஷ்டத்தை ஈக்விட்டி வாங்கியவரும் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். நஷ்டம் அடைந்துவிட்டது என்பதற்காக உடனே அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நிறுவனம் தனது செயல்பாடுகளை மாற்றி அமைத்து லாபகரமான நிறுவனமாக மாற்றவும் வாய்ப்பு உண்டு. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.
1980ம் ஆண்டு விப்ரோ நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்கியது. பங்கு சந்தையில் அதன் விலை அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தது. எனினும் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு, லாபம் சம்பாதித்து பங்கு தாரர்களுக்கு அதிக டிவிடெண்டை வழங்கியது.
ஒருவர் 1980ல் 10 ஆயிரம் விப்ரோ பங்குகளில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.500 கோடியாகும். இதுபோல் ஏராளமான உதாரணங்கள் உண்டு. எனவே நீண்ட கால அடிப்படையிலேயே ஈக்விட்டியை வாங்குவது சிறந்தது.
பங்குகளில் முதலீடு செய்வது என்பது வேலைவாய்ப்பை பெறுவதற்கு இணையாகும். இந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு முதலீடு என்பது அவசியமான தேவை ஆகும்.
தாராளமயக்கொள்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமான அளவில் இருந்தது. இன்றைக்கோ அந்த நிலைமை இல்லை என்றே சொல்லலாம்.
அரசு துறையில் வேலை வாய்ப்பு கிடைப்பது வேண்டுமானால் அரிதாக இருக்கலாம். ஆனால், தனியார் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.
இன்றைக்கு நிறைய தொழிலதிபர்கள் தமக்கு தகுந்த ஆள், வேலைக்கு கிடைக்கவில்லை என்று புலம்புவதை பார்க்கிறோம். அந்த அளவிற்கு வேலை வாய்ப்பு தனியார் துறையில் அதிகரித்திருக்கிறது.
இந்த தனியார் துறை நிறுவனங்கள் வளர்ந்ததற்கு, பொதுமக்களிடம் பங்குகளை விற்று நிதி திரட்டியதே முக்கிய காரணமாகும்.
இந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டி தருவது ஒன்று. நிறுவன பங்கை கொடுத்து பங்குதாரர் ஆகும் வாய்ப்பை தருவது மற்றொன்று.
ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கும்போது அவரை அந்நிறுவனம் பார்ட்னராக அங்கீகரிக்கிறது. பங்குதாரருக்கு கண்டிப்பாக லாபம் சம்பாதித்து தர வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவனத்தை சிறப்பாக செயல்படுத்த திட்டமிடுகிறது. கிடைக்கும் லாபத்தில் டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையையும் நிறுவனம் வழங்குகிறது. பங்கு சந்தையில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதே சிறந்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள். தினசரி பங்கு வர்த்தகம் கடும் சவால் நிறைந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் நஷ்டம் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும். எனவேதான் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யுமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 2008ம் ஆண்டு பங்கு சந்தை உச்சத்தில் இருந்தபோது குறிப்பிட்ட துறைகளில் அதிக அளவு முதலீடு செய்தனர். அடுத்த 6 மாதத்தில் பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை விற்று கடும் நஷ்டத்தை சந்தித்தனர். அன்றைக்கு அவர்கள் பங்குகளை விற்காமல் பொறுமை காந்திருந்தால் இன்றைக்கு பெரும் லாபம் ஈட்டி இருக்க முடியும்.
ஒரு நிறுவனத்தின் பங்கை நீண்ட கால அடிப்படையில் வாங்குவது என்றால் குறைந்தது 6 ஆண்டுகளாவது பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
வருகிற ஆண்டுகளில் ஈக்விட்டி நல்ல லாபம் தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என சொல்கிறார்கள்.
குறைந்த கால முதலீட்டு நோக்கத்துடன் ஈக்விட்டியை வாங்குவதும், தினசரி வர்த்தகத்திற்காக ஈக்விட்டியை வாங்குவதும் புத்திசாலித்தனமான முடிவு இல்லை என நிபுணர்கள் கூறுவதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஈக்விட்டி என்பது பணம் சம்பாதிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு. அவ்வாறு பணம் சம்பாதித்து வருமானம் ஈட்ட நினைத்தால் அதற்கான சரியான தீர்வு, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதுதான்.

Issues: