வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை

120 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்தியா உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவை அடைய வேண்டி இருக்கிறது. பல உணவு பொருட்களை நாம் இன்னும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறோம். வேளாண்மையில் உற்பத்தி பெருகாமைக்கு தண்ணீர் பிரச்சனை ஒரு முக்கிய காரணம். மத்திய அரசு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை சீராக விநியோகம் செய்ய தவறி விட்டது.
மாநிலங்களுக்கான நதிநீர் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் காரணமாக மத்திய அரசு பொறுப்பான முறையில் நடந்து கொள்ளாததே இப்பிரச்சனை நீடிக்க காரணம்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 2 தடுப்பு அணைகளைக் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல அமராவதி நதியின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி என்ற இடத்தில் 2 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை கட்டவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகமும், கேரளமும் மேற்கொள்ளும் இம்முயற்சியால் தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீர் தடுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மாநில அளவில் இது போல் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் நாடுகள் அளவிலும் இப்பிரச்சனை நீடிக்கிறது.
இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியில் சீனா அணைகட்டத்தொடங்கி உள்ளது. இந்த அணை கட்டப்பட்டு நீரோட்டம் சீனாவால் திருப்பிவிடப்படும். அப்போது பிரம்மபுத்திரா நதிநீரை நம்பியே விவசாயம் செய்துவரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
2050ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்நிலையில் நாடுகள் மற்றும் மாநிலங்கள் இடையேயான நதி நீர் பிரச்சனை இந்தியாவுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் பாயும் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா ஆறு இமயமலையில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் சீனா ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய அணையைக் கட்டி கொண்டு வருகிறது.
நமது நாட்டு விவசாயிகளுக்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில். தொடர்ந்து அதிகரித்து வரும் வேளாண் இடுபொருட்களின் விலை உயர்வால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கோ உரிய விலை கிடைப்பதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் வேறு தொழில்களை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது நமது நாட்டுக்கு நல்லதல்ல. இந்நிலை நீடித்தால் வேளாண் பொருட்களுக்காக வெளிநாடுகளை கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அரசு உடனடியாக இந்த விசயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

Issues: