சமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்!

சமோசாவின் ருசி பலருக்கும் பிடித்தமான ஒன்று. கடைகளில் எத்தனை பலகாரங்கள் இருந்தாலும் முதலில் விற்றுத்தீர்வது சமோசாவாகத்தான் இருக்கும்.
சில கடைக்காரர்கள் சமோசாவை தாமே தயாரிகின்றனர். ஆனால் பல கடைக்காரர்கள் வெளியில் தயாரிக்கப்படும் சமோசாவை வாங்கித்தான் விற்கின்றனர்.
வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை என்பதால்தான் கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை.
நல்ல தரத்தோடும் சுவையோடும் சமோசா தயாரிப்பவர்களிடமே கடைக்காரர்கள் வாங்குகின்றனர்.
சமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம் என்பதற்காக டீயோடு சேர்த்து சாப்பிடுவது, மசாலா வாசனைக்காக சாப்பிடுவது என்று சமோசாவை விரும்பி சாப்பிடுவோர் ஏராளம்.
உருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை சேர்த்து தயாரிக்கும் பொருளான சமோசா வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த உணவுப்பொருள்களில் ஒன்றாகும்.
சுவைக்காகவும், பசியை போக்குவதற்காகவும் மக்களிடம் அறிமுகமான சமோசாவின் சுவை, குழந்தைகளையும் ஈர்த்திருப்பதால் சமோசா விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
எனவேதான் சமோசா தயாரிக்கும் தொழிலில் தொடர்ந்து புதுமுகங்கள் இறங்குகின்றனர். நல்ல லாபமும் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் சமோசா தயாரிக்கும் தொழிலை அவர்கள் செய்து வருகின்றனர்.
சமோசாவுக்கு கிராக்கி என்பது அனைத்து பகுதிகளிலும் உள்ளது. சமோசா தொழிலில் தயாரித்து சப்ளை செய்வது, அதற்குரிய பணத்தை வசூல் செய்வது போன்ற பணிகளை முறையாக மேற்கொள்வது முக்கியம்.
தரம், சுவை இரு ந்தால் சப்ளை செய்யும் சமோசாவுக்கு கிராக்கி இருக்கும். டீ கடை, பேக்கரி உரிமையாளர்கள் தேடி வந்து வாங்குவர்.
சமோசாவுக்கு முக்கிய மூலப்பொருளான வெங்காய விலை அதிகமாக இருந்தால் உற்பத்தி செலவு கட்டுப்படியாகாது. விலை அதிகரிக்கும்போது வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு துண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வெங்காய சமோசாவுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது என்றாலும் மாறுபட்ட சுவைக்காக மற்ற வகை சமோசாக்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கத்தான் செய்கின்றனர். சமோசா விற்பனை இல்லாத ஊர்களில் நீங்களே கொண்டு சென்று விற்றால் கூடுதல் லாபம் பெறலாம்.
குறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் முதலீடு இருந்தால் இத்தொழிலை சிறப்பாக செய்யலாம். தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
சமோசாவை சுவையாக தயாரிப்பது குறித்த விசயங்களை புத்தகம் படித்தோ அல்லது அதை தயாரிப்பவரிடம் சென்றோ கற்றுக் கொள்ளலாம்.
தொழிலுக்கேற்றது வெங்காய சமோசாதான் என்றாலும் சமோசாக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. வெஜிடேபிள் சமோசா, காளான் சமோசா, ஹரியாலி சமோசா, சிக்கன் சமோசா, ஸ்வீட் சமோசா என பல வெரைட்டிகளை குறிப்பிட்ட சில கடைகள் விற்கின்றன.
அத்தகைய கடைகளை தேடிச்சென்று ஆர்டர்கள் எடுத்து வெரைட்டியான சமோசாக்களை தயாரித்துக் கொடுத்து லாபம் பார்க்கலாம்.

முருகன்

Issues: