ஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி!
கோழி வளர்ப்பதற்கும், ஆடு வளர்ப்பதற்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்வது சிறந்தது.
கோழி இறைச்சிக்கும், ஆட்டு இறைச்சிக்கும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய தேவை உள்ளது. எனவே கோழி வளர்ப்பிலும், ஆடு வளர்ப்பிலும் முறையான பயிற்சி எடுத்து தொழில் செய்தால் லாபம் நிச்சயம்.
கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை வைத்திருப்பவர்கள் எல்லோருமே லாபகரமாக தொழில் செய்கி றார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நஷ்டம் ஏன் வருகிறது என்று பார்த்தால் அவர்கள் முறையான பயிற்சி எடுக்காததே காரணமாக உள்ளது.
எந்த ஒரு தொழிலை தொடங்கும்போதும் அந்த தொழில் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். எனவேதான் முறையான பயிற்சி எடுத்து, உரிய வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு தொழிலில் இறங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்போதுதான் தொழிலில் லாபம் சம்பாதித்து வெற்றியாளராக வலம் வர முடியும்.
இதற்கென பயிற்சி எடுத்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தை அணுகலாம்.
இதற்காகவே இந்த பல்கலை கழகம் சென்னை மாதவரத்தில் உள்ள பால்பண்ணையில் ஆராய்ச்சி பண்ணையை அமைத்துள்ளது. கால்நடைகள் வளர்ப்புக்கான ஏராளமான புதிய உத்திகளை இந்த ஆராய்ச்சிப் பண்ணை கண்டறிந்துள்ளது.
கால்நடை வளர்ப்புத் தொழில்களில் உற்பத்தி செலவைக் குறைத்து, விவசாயிகளின் லாபத்தை அதிகப்படுத் துவதற்கான ஏராளமான ஆய்வுகளில் இந்த ஆராய்ச்சிப் பண்ணை ஈடுபட்டுள்ளது.
ஆடு வளர்ப்புக்கான கொட்டகையை குறைந்த செலவில் அமைப்பது குறித்த ஆய்வில் ஆராய்ச்சி பண்ணை ஈடுப்பட்டுள்ளது. ஏனெனில் கொட்டகை அமைப் பதற்கே பெரும் செலவு செய்ய நேரிடுவதால் பலரும் ஆட்டுப்
பண்ணை அமைக்க தயங்குகின் றனர்.
இந்த சூழலில்தான் குறைந்த செலவில் கொட்டகையை அமைக்கும் ஆராய்ச்சியை பல்கலைகழகம் தொடங்கியது.
கொட்டகை செலவு கணிசமாக குறையும்போது அதிக ஆட்டுக்குட்டிகளை வாங்கி பராமரிக்க முடியும். இதனால் லாபமும் அதிகரிக்கும். இந்த ஆராய்ச்சி பண்ணையில் கோயம்புத்தூர், கச்சக்கட்டி, கீழகரிசல், சென்னை சிவப்பு, மேச்சேரி, நீலகிரி, ராமநாதபுரம் வெள்ளை, திருச்சி கருப்பு போன்ற செம்மறியாட்டு இனங்கள் உள்ளன. தலைச்சேரி, ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், போயர், சிரோகி உள்ளிட்ட வெள்ளாட்டு இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடு வளர்ப்புக்கான பலவிதமான கொட்டகைகள், புதிதாகப் பிறந்த குட்டிகளைப் பராமரிக்கும் உத்திகள், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளாடுகளுக்கான தீவன அமைப்பு போன்றவையும் ஆராய்ச்சிப் பண்ணையில் உள்ளன.
பாரம்பரிய நாட்டுக் கோழியினங்கள் உள்பட பல்வேறு கோழியினங்களை வளர்ப்பதற்கான பல ஆய்வுகள் இந்த ஆராய்ச்சிப் பண்ணையில் நடக்கின்றன. கோழிகள் வளர்ப்பு முறையில் நவீன உத்திகளை பயன்படுத்தும் விதம் குறித்து இந்த ஆராய்ச்சி பண்ணையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோழிகளின் விலை குறைவு என்பதால் இன்றைக்கு இறைச்சி நுகர்ச்சியில் இதன் பங்குதான் மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே கோழி வளர்ப்பவர்களுக்கு விற்பது என்பது பிரச்சனையே இல்லை. கோழி வளர்ப்பில் லாபம் எப்படி சம்பாதிப்பது என்பதில்தான் பிரச்சனை. அதற்கான தீர்வு இந்த ஆராய்ச்சி பண்ணை வழங்கும் பயிற்சியில் கிடைக்கும்.
மேலும், மண்புழு உரம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி, தீவன உற்பத்தி, கால்நடை கழிவுகளை கொண்டு உரம் தயாரித்தல், இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்தல், பசுந்தீவன உற்பத்தி உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுதவிர மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்ற பயிற்சிகளும் இந்த மையத்தில் வழங்கப்படுகின்றன.
பல்வேறு கால்நடைகள் வளர்ப்புக்கான ஆராய்ச்சியும், பயிற்சி வழங்குதலும் இந்த மையத்தில் உள்ளதால் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், புதிதாக ஈடுபட நினைப்பவர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். பயனுள்ள தகவல்கள் கிடைப்பதோடு பயிற்சியும் கிடைப்பதால் சிறந்த தொழில் முனைவோராக உருவாக முடியும்.