பணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, சொத்து ஜாமீன் கொடுக்க இயலாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக, தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் படி தொழில்முனைவோருக்கு 10 சதவீதம் மூலதனம் இருந்தால் போதும். மீதம் 90 சதவீதம் கடனாக அரசால் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரை சொத்து ஜாமீன் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசின் மானியங்களை அளிப்பதற்கு ஒரு செயல் முகவராக செயல்படும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையிடம் இருந்து கடன் சார்ந்த மூலதன மானிய திட்டத்தின் கீழ் பெற்று அதை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 31.3.2014 வரை இக்கழகம் 1லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கி உள்ளது. தொடர்ந்து 11ஆண்டுகளாக இக்கழகம் லாபம் ஈட்டி வருகிறது.
தொழில் முனைவோர் பயிற்சி திட்டம் மூலம் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோர்க்கும், கிராமப்புறங்களில் வசிக்கும் தொழில்முனைவோர்க்கும், சமூக ஆதரவு குறைந்த தொழில் முனைவோர்க்கும் கடனுதவி வழங்குவதில் தமிழ்நாடு முதலீட்டு கழகமே முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் சிப்காட் நிறுவனமானது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் நோக்கில் குறிப்பாக பின்தங்கிய தென்மாவட்டங் களில் தொழில் வளாகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவது நினைவு கூறத்தக்கது.
சிப்காட் நிறுவனம் இதுவரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 19 தொழில் வளாகங்களை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 85 ஆயிரம் கோடி முதலீடு திரண்டது. இதன் காரணமாக சுமார் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமும், சிப்காட் நிறுவனமும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
பால்ராஜ்