குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன.  இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன?

ரிசர்வ் வங்கியின் முக்கிய பணியான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், அந்த வங்கியின் கவர்னரிடம் உள்ளது.  அந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வட்டிவிகிதத்தை நிர்ணயிப்பது, ரிசர்வ் வங்கியின் முக்கிய பணியாகும்.  சந்தையிலும், வங்கியிலும் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால்  தீர்மானிக்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்போது, அதற்கென உள்ள தொழில் நுட்ப ஆலோசனை குழு, தனது  பரிந்துரைகளை வழங்கும். பரிந்துரைகள் எதுவாகினும், அதை அப்படியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரிசர்வ் வங்கி கவர்னர் எடுக்கும் தனிப்பட்ட முடிவும் அறிவிக்கப்படக்கூடும்.  இந்த அம்சம் மத்திய அரசுக்கு நீண்ட நாட்களாகவே உறுத்தலாக இருந்து வந்தது. மக்களின் பிரதிநிதிகளிடம்தான்  இந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்று எண்ணியதன் வெளிப்பாடுதான் புதிய திருத்த வரைவு.

புதிய திருத்த பரிந்துரையின்படி 7 நபர் குழு அமைக்கப்படும்.  இதில் ரிசர்வ் வங்கியின் சார்பில் அதன் கவர்னர் உட்பட மூவரும்,  மத்திய அரசு நியமிக்கும் நால்வரும் இந்த குழுவில் இருப்பர்.  தன்னிச்சையான முடிவை கவர்னர் அறிவிக்க முடியாது. குழு எடுக்கும் முடிவுக்கே கவர்னர் கட்டுப்பட வேண்டும்.  7 பேர் உள்ள குழுவில், 4 பேர் மத்திய அரசு நியமிக்கும் ஆட்களாக  இருப்பார்கள் என்கிறபோது மத்திய அரசின் எண்ணமே பிரதிபலிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்பவே ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் என்பதே இந்த வரைவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையை எடுப்பதினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சில பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.  
அரசாங்கம் நியமிக்கும் உறுப்பினர்களால் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும், ஓட்டு அரசியல் வட்டி விகிதங்களை தீர்மானிக்கும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

 ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டக்கூடாது என்றே பலரும் எச்சரிக்கிறார்கள். எனவே மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கவேல்

 

Issues: