உற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்
3டி பிரிண்டர் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.
பிளாஸ்டிக், செராமிக் என தேவைக்கு தகுந்தார்போல டை-களை உருவாக்கும் பிரிண்டர்கள் இப்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.
இதனால் பாரம்பரியமாக டை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தொழிற்நுட்பத்திற்கு மாற வாய்ப்புண்டு. அவர்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.
அண்மையில் முடிவடைந்த டாவோஸ் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கூட அடுத்தகட்ட புரட்சியை 3-டி பிரிண்டர் ஏற்படுத்த வல்லது என கணித்துள்ளனர்
பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து விண்ணுக்குச் செல்லும் ராக்கெட் வரை அனைத்து துறைகளிலும் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது.
இது யுபிஎஸ்-ஸிலும் செயல்படக்கூடியது. எனவே மின்சாரம் தடைபட்டாலும் இதை செயல்படுத்தலாம். மின்வெட்டு இத்தொழிலுக்கு பெரும் பிரச்சனையாக இருக்காது.
கட்டுமான துறையில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் நிறுவனங்கள் தங்களது குடியிருப்புகளின் மாதிரிகளை 3-டி பிரிண்டர் உதவியோடு உருவாக்கி வாடிக்கையாளர்களுக்குக் காட்டி விற்பனை செய்கின்றனர்.
விண்வெளித்துறை, விமானம், ஆட்டோ மொபைல், மருத்துவ கருவிகள், மின்சார கருவிகள், ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், வடிவமைப்பு கல்வி மையங்கள் உள்ளிட்ட அனைத்திலுமே இது மிகவும் பயனுள்ளது.
விண்வெளியில் நாசா அமைத்துவரும் மையத்தில் ஏற்படும் பழுதுகளை நீக்க 3-டி பிரிண்டரை எடுத்துச் செல்லலாமா என்று கூட நாசா ஆராய்ந்து வருகிறது.
மருத்துவ துறையில் நுரையீரல் குழாய், மிகச் சிறிய காது கேட்புக் கருவி, பல் உருவாக்கம் உள்ளிட்டவற்றிலும் இதைப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தியும் வருகின்றனர்
பெரும்பாலும் பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருள்களைக் கொண்டு டை தயாரிக்க முடியும். இதற்கான இயந்திரத்தின் விலை ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையாகும். இதில் 8 அங்குலம் உயரம் வரை பொருட்களை தயாரிக்க முடியும்.
இது தவிர, செராமிக் பவுடர் மூலம் பொருட்களை வடிவமைக்க முடியும். இதற்கான இயந்திரத்தின் விலை ரூ. 10 லட்சத்துக்கு மேல்.
இதைக் கற்பது எளிது. இதற்கென பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கு சென்று கற்றுக்கொள்ளலாம். எந்த வடிவத்திலும் பொருளைத் தயாரிக்க முடியும்.
கம்ப்யூட்டர்கள் எப்படி மாற்றத்தைக் கொண்டு வந்ததோ அதைப் போல 3-டி பிரிண்டர்கள் உற்பத்தித் துறையில் பெரும் புரட்சியை மேலை நாடுகளில் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் இத்தகைய மாற்றம் வருவது நிச்சயம்.
கனவுத் தொழிற்சாலையான சினிமா தொழிலிலும் இதைப் பயன்படுத்த முடியும். மிக பிரமாண்டமான செட் அமைப்பதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம். கலை இயக்குநர்களுக்கு இந்த டெக்னாலஜி மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கும்.
எனவே இத்தொழிற்நுட்பம் குறித்து கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு நிச்சயம். வருமானமும் நிச்சயம்.