முயன்றால் முடியும்...

இந்தியாவில் 15 சதவீத மாணவர்களே மேற்படிப்புக்குச் செல்வதாகவும், மாநில அளவின்படி  தமிழ்நாட்டில் 42 சதவீத மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்வதாகவும்  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை  நடத்திய கணக்கெடுப்பு சொல்கிறது.
இது  தமிழகத்துக்கு பெருமையான விசயம் என்றாலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பலர் வேலைத்திறனுக்கு தகுதி  இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மாணவர்களில் பலர் சரியான முயற்சியை மேற்கொள்ளாததே. வருடத்திற்கு இரண்டு லட்சம்  பொறியியல் மாணவர்கள் படித்து விட்டு வெளியே வருகிறார்கள். இவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை  பெறுகிறார்கள். மீதிபேர் வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள். நான்கு வருட படிப்பு முடியும் வரை வேலை தேடுவது  என்பதையே மறந்து விடுகிறார்கள். அதன் பின்னர் வீட்டில் இருந்து கொண்டுதான் வேலை தேடுகின்றனர்.

புத்திசாலி மாணவர்களில் சிலர்  மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே தீவிர முயற்சி மேற்கொண்டு, வேலை தேடுவதை  தொடங்குகிறார்கள்.
நிறுவனங்கள் என்ன தகுதிகளை எதிர்பார்க்கின்றன என்பதை இவர்கள் படிக்கும்போதே தெரிந்து கொள்வதால் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டு படித்து முடித்தவுடன் எளிதாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர். மிகச்சிறந்த திறன்  கொண்ட மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே வேலை வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.

இன்றைய நிலையில் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு  வரும்  நிறுவனங்கள்,  முதல் வருடத்தில் இருந்து நான்காம் வருடம் வரை  மாணவர்கள் எப்படி படித்திருக்கிறார்கள் என பார்க்கிறார்கள். அதன் பின்னரே தேர்வு செய்கிறார்கள். எனவே அந்தந்த வருட  பாடங்களை அந்தந்த வருடமே படித்து முடித்தால்தான் நான்காம் ஆண்டில் கேம்பஸ் இண்டர்வியூவின்போது நட்சத்திர  குறியீட்டை பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலவரங்களை எல்லாம் பொறியியல் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். மேலும் பொறியியல் பட்டதாரிகள்  வேலை தேடுவதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சுயதொழில் தொடங்கி பலருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபர் ஆகவும் முயற்சி மேற்கொள்ளலாம்.   போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தீவிர முயற்சியோடு செயல்பட்டால்தான், வெற்றிகரமான  வாழ்க்கையை வாழ முடியும்.

ஒரு செடி தனது இயல்பான உயரத்தை அடைய வேண்டுமெனில் முதலில் அது வளர வேண்டும். வளருவதற்கு காற்று, வெப்பம்,  தண்ணீர் போன்றவை சரியான அளவில் தேவை. அப்படி சரியாக அமையும் பட்சத்தில் செடி தனது இயல்பான உயரத்தை  எட்டிவிடும். செடி எந்தவித முயற்சியையும் செய்யத்தேவையில்லை. ஆனால் மனிதன் அப்படியல்ல. அவன் வாழ்வின் உயர்ந்த  நிலையை அடைய வேண்டுமெனில் முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்வதன் மூலமாகத்தான் வளர்ச்சிப்படியில் ஏறி  உயரத்தை அடைய முடியும்.

சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை  கூகுள் நிறுவனத்தின்  புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார் என்பது  நாம் அறிந்ததே. இன்றைய இணைய உலகில் கூகுள் ஓர் அசைக்க முடியாத நிறுவனம். கூகுள் இல்லாவிட்டால் இணையதளம் பயன்படுத்துவோர் பாடு பெரும் திண்டாட்டம்தான்.  ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப் படுகின்றன.

உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்பட்டு வருகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.

இத்தகைய பெரும் இணைய சாம்ராஜ்யத்தின்  சிஇஓ -வாக  தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழர்களுக்கு மிகவும் பெருமை அளிக்கக்கூடிய விசயம். பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்  சுந்தர் பிச்சை.  இளம்வயதில் இவரது வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது என்பதிலிருந்தே இவரது குடும்பம் எவ்வளவு சாதாரணமானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  எனினும் தன்னால் சாதிக்க முடியும் என எண்ணினார்.  ஊக்கத்தோடு படித்தார்.  நன்றாக படித்ததன் காரணமாக மேற்குவங்க மாநிலம்  கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டியில் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  

படித்து முடித்து மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்ல தீர்மானித்தார். விமான கட்டணத்துக்கு கூட பணமில்லை. அவரது தந்தையின் ஓராண்டு ஊதியத்தை சேர்த்தால் கூட விமானத்திற்கான பயணச்சீட்டு வாங்க முடியாது என்ற நிலை இருந்தது.

எனினும் தீவிரமான முயற்சி மேற்கொண்டு பணத்தை திரட்டி ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்புக்கு சேர்ந்தார்.  இப்படிப்பை முடித்தபிறகு  பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.

உயர்கல்வி முடித்தபிறகு மெக்கென்சி குழுமத்தின்  சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக தனது கேரியரைத் தொடங்கினார்.  தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அந்நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றினார்.

2004 ல் கூகுள் நிறுவனத்தில் பணிவாய்ப்பை பெற்றார்.  இன்றைக்கு கோடிக்கணக்கான நபர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்தவர் சுந்தர்பிச்சை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.   2011ல் கூகுள் குரோம் ப்ரவுசர், ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும்  நியமிக்கப்பட்டார்.

இவரது பணி அர்ப்பணிப்பையும், அறிவுத்திறமையையும் பார்த்து கூகுளின் நிறுவனர் வியந்து போற்றியிருக்கிறார்.  ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறந்த கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக சுந்தர்பிச்சை இருக்கிறார் என்று கூகுள் நிறுவன இணை நிறுவனர் பாராட்டியுள்ளார்.  
இவ்வளவு பெரிய உயரத்தை சுந்தர்பிச்சை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான்.
இன்றைக்கு உயர்கல்வி படிக்கிற மாணவர்கள் சுந்தர்பிச்சை போன்றவர்களை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும். இன்னுமொரு முக்கிய செய்தியை இங்கு கூறுவது, பொருத்தமாக இருக்கும்.

கண்டார்ப் ஷர்மா  5 வயது நிரம்பிய சிறுவன்.  அவனது சகோதரி ரித்விகாவுக்கு 8 வயது. இவர்கள் மத்திய பிரதேச மாநிலம்  குவாலியரைச் சேர்ந்தவர்கள். குறைந்த வயதைக் கொண்ட இவர்கள், உலகின் மிக உயரம் கொண்ட சிகரமான எவரெஸ்ட்  மலைச்சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்கள் என்ற  செய்தி நம்மை யெல்லாம் மிகுந்த  வியப்பில் ஆழ்த்துகிறது.
சிறுவனுக்கு மூன்று வயதாக இருந்தபோதே மலையேற்றப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவனது சகோதரிக்கும் அப்படித்தான். இந்த சிறார்களின் ஆர்வத்துக்கு உரம் போட்டவர்கள் இவர்களது பெற்றோர்.

பொதுவாக சிறு வயதுக் குழந்தைகளை படிக்கும்படி வற்புறுத்துவதுதான் பெற்றோர்களின் வழக்கம். ஆனால் இந்த பெற்றோர்  குழந்தைகளின் படிப்பு நேரம் போக மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து தந்தனர்.
சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை  அந்த பிஞ்சு உள்ளங்களில் விதைத்தனர். சிறார்களும் தன்னம்பிக்கையோடு தீவிர பயிற்சி மேற்கொண்டனர். விளைவாக  சாதனையையும் படைத்து விட்டார்கள்.

5380 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைவது இளைஞர்களுக்கே கடினமான காரியம். எத்தனையோ பேர் ஏற  முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனால் இந்த சிறார்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று கின்னஸ் சாதனை  படைத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு தன்னம்பிக்கையோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்!
சிறு வயது குழந்தைகளே சாதனை படைக்கும்போது நிச்சயம் இளைஞர்களாலும் சாதனை படைக்க முடியும். அதற்கு தேவையானதெல்லாம் முயற்சியும் தன்னம்பிக்கையும்தான்.

தொடரும்

 

Issues: