அருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்
அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவைவிட மக்கள் தொகை குறைந்த நாடுகள். எனினும் அந்நாடுகள் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளன. அந்நாட்டு விவசாயிகள் ஒருகிணைந்த பண்ணை முறையில் வேளாண்மை மேற்கொள்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்திய விவசாயிகளும் ஒருங்கிணைந்த பண்ணை முறைக்கு மாற வேண்டுமென நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம். இதனால், மக்களுக்கான வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது. இது விவசாய நிலப்பரப்பு குறைவதற்கு காரணமாக அமைகிறது.
இந்நிலையில் இந்தியா, விவசாய உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டுமெனில் ஒருங்கிணைந்த பண்ணை முறையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அரசு ஊக்கம் கொடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மை என்பது என்ன?
பொதுவாக விவசாயிகள் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்கிறார்கள். இது சில நேரங்களில் அவர்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் பயிர் சாகுபடி செய்வதோடு கறவை மாடு, மீன், கோழி, ஆடு, காடை, காளான் போன்றவற்றை வளர்த்து விற்பனை செய்யும் உப தொழில்களில் ஈடுபடுவதே ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மை முறையாகும்.
ஒருங்கிணைந்த பண்ணையம் சிறப்பாக செயல்படும்போது அதிக வருமானத்தை ஈட்ட முடியும். ஆண்டு முழுவதும் தொடர் வருமானம் வரும். விவசாய தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். பண்ணைப்பொருட்களையும் கழிவுகளையும் சுழற்சி செய்வதன் மூலம் நிலத்திற்கான உரமும் கிடைக்கும். இது உரச்செலவுகள் பெருமளவு குறைவதற்கு வழிவகுக்கும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணை திட்டம் வகுக்கும்போது நஞ்சை, புஞ்சை நிலங்களுக்கு ஏற்ப பயிர் திட்டத்தை வகுக்க வேண்டும். அந்த பயிர் திட்டத்திற்கு ஏற்ப நன்கு வருமானம் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மேலும் ஒரு உப தொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.
பண்ணையில் விளையும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் கிடைக்கும்.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் பயிர்களை பயிரிடுவதில் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம். முதல் போகத்தில் நெல் பயிரிட்டால், இரண்டாம் போகத்தில் பயிரும் மக்காசோளமும் பயிரிடலாம்.
அடுத்து ஒருங்கிணைந்த பண்ணையத்தில் செய்யப்படும் மற்ற உபதொழில்கள் குறித்து பார்ப்போம்:
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் உபதொழில்களில் ஒன்றான கோழி வளர்ப்பு சிறந்த தொழிலாகும். நெல்லிலிருந்து கிடைக்கும் தவிடையே கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
மாற்று பயிர்களில் ஒன்றான மக்காசோளத்தையும் கோழிக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த தீவனங்கள் மூலமாக கோழி தீவன செலவை சுமார் 75 சதவீதம் குறைக்க முடியும்.
வளரும் கோழிகளை 8வது வாரத்தில் விற்பனை செய்யலாம். பெருமளவு தீவன செலவு குறைவதால் கோழி விற்பனையில் அதிக லாபம் ஈட்ட முடியும்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உப தொழிலான மீன் வளர்ப்பை முறையாக செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம். வளர்க்கும் மீன்களுக்கு உணவாக கோழியின் கழிவுகளையே கொடுக்கலாம்.
கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும், 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது.
வளர்ப்பு மீன்களுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. குறிப்பாக வண்ண கலர் மீன்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 6 மாத வளர்ப்புக்கு பிறகு மீன்களை விற்க தொடங்கலாம்.
இன்றைக்கு காளான் வளர்ப்பை தனி தொழிலாக செய்து லாபம் சம்பாதிபவர்கள் ஏராளம் உள்ளனர். இந்த காளான் வளர்ப்பை ஒருங்கிணைந்த பண்ணையிலும் மேற்கொள்ளலாம். நெற் பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், மக்காச்சோளக் கதிர்ச்சக்கை இவற்றை காளான் வளர்ப்பிற்கு இடுபொருளாக பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கிறது. உற்பத்தியாகும் காளான்களை உடனுக்குடன் விற்றுவிட வேண்டும்.
பாலின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கறவை மாடுகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் கறவை மாடு வளர்ப்பு பணியை மேற்கொள்ளலாம். மக்காச்சோளத்தில் இருந்து கிடைக்கும் மணிகள், தவிடுகள் இவற்றை கறவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். நன்றாக வளர்க்கப்பட்ட கறவை மாடு ஒரு நாளைக்கு குறைந்தது 10 லிட்டர் பால் கொடுக்கும். குறைந்தது 4 கறவை மாடுகளை வளர்த்தால் ஒரு நாளைக்கு அதிலிருந்து கிடைக்கும் பால் மூலம் ரூ.1200 வருமானமாக கிடைக்கும்.
கோழியை வளர்த்து லாபம் ஈட்டுவது போல ஒருங்கிணைந்த பண்ணையில் காடை வளர்ப்பையும் மேற்கொள்ளலாம். 1000 காடை குஞ்சிகளை வளர்ப்பதற்கு 200 சதுரடி இடம் போதுமானது. இதன்மூலம் மாதம் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் ஈட்டமுடியும்.
ஒருங்கிணைந்த பண்ணையில் நெல்லை பயிரிடும்போது அந்த வயலில் மீன்களையும் வளர்க்கலாம்.
இந்த வயலில் வளரும் மீன்கள், களைகளை கட்டுப்படுத்தும். மேலும் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கும். இந்த மீன்களின் கழிவுகள் வயலுக்கு உரமாக பயன்படும். இது 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
நெல் வயலில் மீன்கள் வளர்க்கும்போது ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. அவ்வாறு தெளித்தால் மீன்கள் இறக்க நேரிடும். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளான வேப்ப எண்ணைய், பஞ்ச காவ்யா போன்றவற்றை தெளிக்கலாம்.
நெல்லை அறுவடை செய்தவுடன் கால்வாயில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்யலாம். வளர்ந்த மீன்கள் சுமார் 700 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் 500 கிலோ வரை மீன்களை பெறமுடியும். இதை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
இன்றைக்கு விவசாயிகளில் சிலர் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை நாம் செய்திகளில் பார்த்தோம். இந்நிலை மாற வேண்டுமெனில் ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மையை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் அடைவதோடு நாட்டின் உணவு உற்பத்தியும் தன்னிறவை அடையும்.