லாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்!

தற்போது எந்த ஒரு வணிக நடவடிக்கையும், உற்பத்தி துறையும் லாஜிஸ்டிக்கை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து துறையின் புதிய பரிணாம பெயர்தான் லாஜிஸ்டிக். 

இந்த துறையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை கையாளும் போது மிக நுட்பமான முறையில் அதிக கவனத்துடன் கையாள வேண்டும்.  அவ்வாறு செய்யும் போதுதான் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும்.
ஒரு பொருளை தேவையான நேரத்தில் தேவையான நபருக்கு சரியாக கொண்டு சென்று கொடுப்பது லாஜிஸ்டிக்கின் நோக்கமாகும்.
தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, பைப் லைன் போக்குவரத்து என லாஜிஸ்டிக்கில் பல வழிமுறைகள் உள்ளன.
தரைவழி போக்குவரத்து குறுகிய தூரத்திற்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது.
இராணுவம், பெரிய தொழில் நிறுவனங்கள் போன்றவை தமது பொருட்களை கொண்டு செல்வதற்கு பெரும்பாலும் தரைவழி போக்குவரத்தையை தேர்வு செய்கின்றன.  
மிக அவசரமாக கொண்டு செல்லப்படும் பொருட்கள், அதிக விலை கொண்ட பொருட்கள் போன்றவற்றிக்கு வான்வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.
ரயில் போக்குவரத்தை சிமெண்ட், நிலக்கரி, இரும்புத்தாது, உரங்கள், பெட்ரோலியம், டீசல், பயிறு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்துகின்றனர்.
கடல்வழி போக்குவரத்து கனமான பொருட்களை கொண்டு செல்ல அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த போக்குவரத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்வதற்கான கால அளவு அதிகம் தேவைப்படுகிறது.
எனவே பொருட்களின் தன்மை குறித்து முதலிலேயே தீர்மானித்துக் கொள்வது அவசியம்.
பைப்லைன் எனப்படும் குழாய் வழி போக்குவரத்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த போக்குவரத்து முறை அதிகம் செலவு பிடிப்பதால் இதை அரசுத்  துறை மட்டும் கடைப்பிடிக்கிறது.
லாஜிஸ்டிக்கில் பல்வேறு முறைகள் இருப்பதால் முறையாக திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்பட்டால் அதிக அளவில் லாபம் பெற முடியும்.
இந்த துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் தகவல் பறிமாற்றம் அதிகரித்துள்ளது. எந்த நிறுவனமாக இருப்பினும் அதன் வெற்றிக்கு லாஜிஸ்டிக் முக்கிய அம்சமாக திகழ்கிறது.  
எனவே இந்த துறையில் ஈடுபட்டு தொழில் செய்ய நினைப்பவர்கள் சரியான முறையில் சேவை செய்து உரிய நேரத்தில் டெலிவரி கொடுத்தால் அதிக வாடிக்கையாளர்களை பெற்று நிறைய லாபம் சம்பாதிக்க முடியும்.
மேலும் இத்தொழிலை மாநில அளவில் என்று இல்லாமல் தேசிய அளவு, சர்வதேச அளவு என விரிவுபடுத்தி ஏராளமாக சம்பாதிக்க முடியும்.

தங்கவேல்

Issues: