மக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’

இந்திய அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’ சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மற்றும் திருமணத்துக்கு தேவையான பணத்தை திடீரென திரட்டுவது மிகவும் சவாலான பணி. பெரும்பாலான பெற்றோர்கள் கடன் வாங்கியே இந்த தேவையை நிறைவேற்றுகின்றனர்.
பல குடும்பங்கள் கடனாளியாவது இந்த விஷயத்தில்தான். இதற்கு தீர்வாக அமைந்திருப்பது ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’. இந்தியில் இத்திட்டம் ‘சுகன்யா சம்ருத்தி யோஜனா’ என்று அழைக்கப் படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு தேவையான பணத்தை, அவர்களின் சிறுவயதிலிருந்தே பெற்றோர் சேமிக்க முடியும். 10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த கணக்கை தொடங்கலாம்.
இந்த ஆண்டு இத்திட்டத்தின் தொடக்க ஆண்டு என்பதால், ஓர் ஆண்டு சலுகை காலமாக நீடிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி முதல் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் பெயரில், வரும் டிசம்பர் 1-ந்தேதி வரை கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்பு கணக்கை தபால் அலுவலகம் அல்லது வங்கிகளில் தொடங்கலாம்.
கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும். ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
பணத்தை ரொக்கமாகவோ, காசோலையா கவோ, வரைவோலையாகவோ செலுத்தலாம்.இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.
சேமிக்கப்படும் பணத்திற்கு 9.1 சதவீத வட்டி, கூட்டு வட்டி முறையில் வழங்கப்படும். வட்டி விகிதத்தை வருடாந்திர அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கும்.
எனவே வட்டிவிகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இதுதான் என்பதால் பெரும்பாலானோர் இத்திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டரை மாதங்களில் சுமார் 5 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்பது மக்களின் ஆர்வம் எப்படி உள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது.
தற்போது இந்த திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்குவதற்கு முக்கிய அஞ்சல் அலுவலகங்களில் தனி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்க லாம்.
ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.100-ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடை யும். அப்போது கணக்கில் சேர்ந் துள்ள பணத்தை அந்த பெண் குழந்தையே எடுத்துக் கொள்ளலாம்.
கணக்கு வைத்துள்ள பெண்ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி மற்றும் திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற் றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.
ஒருவர் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். 14 ஆண்டுகள் நிறைவில் அவர் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும்.
இந்த கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம் தொகையை அவர் பெற முடியும். இது உத்தேசமான கணக்கு தான். வட்டி விகிதமும் செலுத்தும் தொகையும் அதிகமாகும்போது அதற்கேற்ப முதிர்வுத் தொகையும் அதிகரிக்கும்.
வங்கிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது,
அதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரமேஷ்

Issues: