நல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு

குறிப்பிட்ட ஒருவரை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ செல்லும் போது வெறுங்கையுடன் செல்வதைக் காட்டிலும் ஏதேனும் ஒன்றைக் கையில் கொண்டு சென்று தருவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்துத் தரப்பிலும் பொதுவான மரபாக இருந்து வருகிறது.  
முக்கியப் பிரமுகர்கள், பிரபலமானவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவும், வரவேற்கவும் மலர் மாலைகள், சந்தன மாலைகள், சால்வைகள், பரிசுப்பொருட்கள், பூங்கொத்துகள் உள்ளிட்டவற்றை வழங்கி கவுரவிப்பது வழக்கம். புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்படுவது உண்டு.
இவற்றில் பொக்கே என்றழைக்கப்படும் பூங்கொத்துகள் வழங்கப்படும் வழக்கம் பரவலாக உள்ளது. பல்வேறு  வடிவங்களில் தயார் செய்யப்படும் பூங்கொத்துகள் வடிவிற்கேற்பவும், பூக்களின் தன்மைகேற்பவும், அளவிற்கேற்பவும் தோற்றத்திலும், விலையிலும் வேறுபடுகின்றன.

பொக்கே கொடுப்பது நாகரீகமான வழக்கமாகக் கருதப்பட்டு வரும் நிலையில், இப்பழக்கம் நகரங்களில் மட்டுமே இருந்து வந்தது.  
நாளடைவில் கிராமங்களிலும் பரவி, கிராமப் பகுதிகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் பொக்கே வழங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. எனவேதான் பொக்கே தயாரிக்கும் தொழில் பிரபலமடைந்து வருகிறது. புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்கள் இத்தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.
பொக்கேக்களில் மிக்சர் பிளவர் பொக்கே, நோன் பொக்கே உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. பொக்கேக்கள் மட்டுமல்லாமல் முழுமையான ஃபுளோரிஸ்ட் ஷாப் வைத்து செயல்படும்போது அதிகலாபமும், தொடர்ச்சியான தொழில் வாய்ப்பும் கிடைக்கும்.
விழாக்கள், மணமேடைகள், அலுவலக நிகழ்ச்சிகள், பல்வேறு சுபநிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில்  மலர் அலங்காரங்கள் செய்யப்படும் போக்கு அதிகரித்துள்ளது. பொக்கே அலங்காரமும் பெருகியுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவோரிடம் சென்று ஆர்டர்கள் பிடித்து வருமானம் பார்க்கலாம்.

புளோரிஸ்ட் தொழில் செய்வது மக்களுக்கு தெரியும்படி குறிப்பிட்ட ஓரிடத்தில் வைத்து செய்தால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்ந்தெடுத்து இது போன்ற விற்பனை மையத்தை அமைக்கலாம். பேருந்து  நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து  வணிகம் செய்தால் விற்பனை அதிகரிக்கும்.
ஆர்டர்கள் எடுக்கும் திறமை உள்ளவர்கள் ஆர்டர் எடுத்த பிறகு வீட்டிலிருந்தபடியே தயாரித்து குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் விற்கலாம். விமான நிலையங்களில் வரவேற்க காத்திருப்பவர்களிடம் கூடைகளில் கொண்டு சென்று பொக்கேக்களை விற்பவர்களும் உண்டு.

புளோரிஸ்ட் தொழிலானது ஒரு கலை என்பதால் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம், கலைத்திறன், வித்தியாசமான கற்பனைத்திறன் போன்றவை தேவை. அப்போதுதான் புதிய வடிவிலான மலர்க்கொத்துக்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களை வாங்கத்தூண்ட முடியும். விற்பனை அதிகரிக்கவும், வருவாய் அதிகரிக்கவும் தனித்தன்மை மிக்க தயாரிப்பாக இருக்க வேண்டும்.
புளோரிஸ்ட் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான பூக்களை அந்தந்த பகுதி  சிறு மற்றும் மொத்த வியாபாரிகளிடமும், மலர்ச் சந்தைகளிலும் தேவைக்கேற்ப தருவித்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில்  குறைந்தளவு பூக்கள் கொள்முதல் செய்து தயாரிக்க முயற்சிக்கலாம். படிப்படியாக விற்பனை அதிகரிக்கும் போது மொத்த விலைக்கு கொள்முதல் செய்யலாம். அப்போது கொள்முதல் விலையும் குறையும்.

புளோரிஸ்ட் தொழிலுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பயிற்சி பற்றிய விளம்பரங்கள் வெளிவரும்போது அங்கு சென்று விவரம் பெறலாம். புளோரிஸ்ட் கடைகளில் உதவியாளர் பணியில் சேர்ந்தும் அத்தொழிலைக் கற்கலாம். இதனால் நேரடிப் பயிற்சி கிடைப்பதுடன், ஓரளவு வருவாயும் கிடைக்கும். மேலும் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கும் அனுபவமும் கிடைக்கும்.
போதிய அனுபவம் பெற்ற பின்னர் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தோ, அல்லது வீட்டிலிருந்தபடியோ  இத்தொழிலை மேற்கொள்ள முயற்சிக்கலாம்.  இத்தொழிலை மேற்கொள்வோர்களில் பலர் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சுகுமார்

 

Issues: