மக்கள் நலன்

ஒரு முறை டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிழ்வதற்கு கடுமையான வெங்காய விலை உயர்வு காரணமாக அமைந்தது. அந்த நிகழ்வை பாஜக இன்னும் மறக்கவில்லை.
அதனால்தான், வெங்காய விலை உயரும்போதெல்லாம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை தற்போதைய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விலையை கட்டுப்பாட்டில் வைக்க 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 15 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு இவற்றை கொள்முதல் செய்ய தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.50 கோடி சுழல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் என்ன? எல்லாம் தேர்தல்தான்!
டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந் நிலையில் வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு விலை அதிகரித்து அது ஓட்டு வங்கியை பாதித்துவிடக்கூடாது என்ற கவலையே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக ஜூலை&நவம்பர் மாதங்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இவற்றின் வரத்து குறைவாக இருக்கும். மேலும் இருப்பு வைக்க சாதமான தட்ப வெப்ப நிலையும் இருக்காது. இந்த காரணத்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இவற்றின் விலை அதிகரிக்கும்.
இதை கருத்தில் கொண்டு இப்போது முதலே வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இருப்பு வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
‘சிறு விவசாயிகள் வேளாண்வர்த்தக கூட்டமைப்பு’ என்ற அரசு சார்ந்த அமைப்பு கொள்முதல் பணியை மேற்கொண்டு தலைநகரில் இருப்பு வைக்க, ரூ.50 கோடி சுழல் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 15 ஆயிரம் டன் உருளைக்கிழங்கை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கும்.
இவ்வாறு இருப்பு வைத்து ,விலை உயரும்போது அவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும்.
இந்த நடவடிக்கை தேர்தலை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது என்றாலும் மக்களுக்கு நன்மை அளிக்கும் நடவடிக்கை என்பதால் இதை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

Issues: