மாற்றங்களை ஏற்று செயல்படும் நிறுவனம் வெற்றிக்கொடி கட்டும்...

அறிவியல் வளர்ச்சி காரணமாக புதிய தொழில் நுட்பங்களும், புதிய மாற்றங்களும் அதிகரித்து வருகின்றன. தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர் கள் இது போன்ற புதிய மாற்றங்களை மனமுவந்து ஏற்று செயல்படுத்த வேண்டும்.

பொதுவாக வெற்றி நிறுவனங்கள் புதுமையை  புகுத்துதல், புதிய மாற்றங்களை ஏற்று செயல்படுத்துதல் இவற்றை நேர்த்தியுடன் கையாளுகின்றன.
புதுமையை புகுத்தாத நிறுவனங்களும், மாற்றங்களை ஏற்காத நிறுவனங்களும் சந்தையில் தமது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தொழில் ஒன்றைத் தொடங்குவதென்பது எளிதானதுதான். அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதுதான் சவாலான பணியாகும். அதற்கு புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிவது, புதிய மாற்றங்களை ஏற்று அவற்றைத் தொழிலில் இணைப்பது, பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். காலத்திற்கேற்ப செயல்படுவதும் அவசியம்.

உதாரணமாக டாடா நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். உருக்குத்துறையிலும், வாகன உற்பத்தித் துறையிலும் பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் இன்றளவிலும் தனது கொடியை உயர்த்தியே வருகிறது.  
உருக்குத்துறையில் டாடா ஸ்டீல் நிறுவனம் நாட்டிலேயே முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோரஸ் உருக்காலையை வாங்கி உலகிலேயே ஐந்தாவது பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமாகத் மாறியது.
அது போலவே இந்நிறுவனம்  வாகன துறையில் காலத்திற்கேற்ற கார்களை பல்வேறு மாடல்களில் உற்பத்தி செய்து  சந்தைப்படுத்தியது. கனரக வாகன உற்பத்தியிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. டாடாவின் முக்கிய தயாரிப்பான குறைந்த விலை கொண்ட நானோ  என்ற சிறிய ரக கார் இந்தியா முழுவதும் பார்வையை தன் பக்கம் திருப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் மென்பொருள் துறையிலும், தொலைத்தொடர்புத்துறையிலும் களமிறங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

டாடா நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள்தான் இது போன்று புதுமைகளையும் புதிய வழிமுறைகளையும் செயல்படுத்த முடியும் என்பதில்லை. அவரவர் செய்யும் எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதற்கேற்ற புதிய முறைகளை கையாள முடியும்.
தொழில் முனைவோர் தாம் ஈடுபட்டுள்ள தொழிலில் பெற்றுள்ள அனுபவம் மட்டுமின்றி, அத்தொழிலில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, மாற்றங்கள், தொழில் நுட்பங்கள், அதே தொழிலில் ஈடுபட்டு வரும் போட்டி நிறுவனங்கள் போன்றவற்றை கவனித்து வரவேண்டும்.
 
போட்டி நிறுவனங்கள்  உற்பத்தி அல்லது சேவையில் செய்யும் மாற்றங்களையும்  புதுமைகளையும்  கண்டறிந்து, அதற்கேற்ப ஈடுகொடுக்கும் வகையில் தமது உற்பத்தியிலும் மாற்றம் செய்து சந்தைப் படுத்துவது சிறந்த தொழில் முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள வழிவகுக்கும்.
உற்பத்தி முறையில் புதுமைகள் புகுத்துவது என்பதோடு அல்லாமல், பேக்கிங் முறைகளில் மாற்றங்கள் செய்வது, புதிய விளம்பர உத்தியைக் கையாளுவது உள்ளிட்ட வழிமுறைகளை செயல்படுத்த முயற்சிக்கலாம்.
பழையன கழிதல், புதிய புகுதல் என்பது இயல்பாகும். அதுவும் தொழிற்துறையினர் இக்கொள்கையை  தொடர்ந்து கடைப் பிடிப்பது அவர்களது கொடியினை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வழிவகுக்கும்.

சுகுமார்

 

Issues: