உலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்!

ஆசிய அளவில் மக்களிடையே அதிக பண புழக்கம் கொண்ட நகரம் என்று பெயர் எடுத்த ஹாங்காங் இன்றைக்கு வறுமை நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அங்கு நடக்கும் போராட்டங்கள் உணர்த்து கின்றன.
தொழிலாளர்களும், மாணவர்களும் அந்நகரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிகச் சிறந்த சுற்றுலா நகரமாகவும் திகழும் ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்கள் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வியப்பை அளிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
20 சதுரடி கொண்ட வீட்டுக்கு கூட அந்நகரத்தில் மிக அதிகமான அளவில் வாடகை வசூலிக்கப்படுகிறது. அந்நாட்டு நாணய மதிப்பில் ஒருவர் 10 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறார் என்றால் 4 ஆயிரம் டாலர் வாடகைக்கே சென்று விடுகிறது.
இந்த வாடகை அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பெரிய வீட்டுக்கு என்றால் பரவாயில்லை. வெறும் 20 சதுரடி வீட்டுக்கே இந்த வாடகை என்றால் எப்படி அங்கு வாழ்க்கை நடத்துவது? சம்பாதிப்பதில் பெரும் பகுதி வாடகைக்கு சென்று விட்டால் உணவுக்கும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவிடுவது எப்படி?
ஹாங்காங் நகரம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய நாடு. இந்நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் மற்ற எல்லா நாடுகளை காட்டிலும் அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இவ்வளவு வருவாய் வந்தும் அந்நாட்டு மக்களால் ஆரோக்கியமாகவும், வசதியாகவும் வாழ முடியவில்லை.
ஏராளமான மக்கள் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது கசப்பான செய்தி. 10 ஆயிரம் டாலர் சம்பாதிப்பது என்பது இந்திய நாட்டு மதிப்புக்கு ரு. 6 லட்சம் ஆகும். இப்படி மாதம் ரு. 6 லட்சம் சம்பாதித்தும் அவர்களால் வசதியான வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 25 லட்சம் ஆகும். இதில் 50 சதவீதத்தினர் ஏழை மக்களாக உள்ளனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. அதாவது நன்றாக சம்பாதித்தும் ஏழ்மை நிலையில் அந்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.
இதுவரையில் குறைந்த அளவு வரிவிதிப்பு, சிறந்த அரசு நிர்வாகம் மற்றும் ஓரளவு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் என அங்கு இருந்தது.
ஆனால் தற்போது அங்கு நன்றாக சம்பாதித்தும் ஏழையாக இருக்கும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை, சகிக்க முடியாத அளவுக்கு தரமற்றதாக ஆகி விட்டது. இது தான் அங்கு போராட்டங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த 6 ஆண்டுகளாக பதவியிலிருந்த சர் டொனால்ட் சேங், தான் ஆட்சியில் இருந்தபோது ஏழைகளின் துயரத்தை களைய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சுமார் 2 லட்சம் ஏழைகள் தங்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி தர வேண்டும் என்று அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
அரசே வீடுகட்டி குறைந்த வாடகைக்கு தந்து விட்டால், சிறிய வீடுகளை கூட அதிக வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் வீட்டு முதலாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்த வீட்டு முதலாளிகள் அரசியல் வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக பெரும் தொகையை வழங்குகின்றனர்.
எனவே வீடு கட்டி கொடுத்துவிட்டால் இந்த லஞ்ச வருமானம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் அரசு இயந்திரம் ஏழை மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டிற்கு 85,000 சிறிய குடியிருப்புகளைக் கட்ட அரசு திட்டமிட்டிருந்த போதிலும், வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் வீட்டு உரிமையாளர்கள் அதிக குடியிருப்புகளை கட்டாமல் பார்த்துக் கொண்டனர். கடந்த 6 ஆண்டுகளில் அந்நாட்டில் சுமார் 80 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் குடியேறி இருக்கும் பலர் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைபட்டு சீனாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஆகும்.
இப்போது அந்நாட்டு மக்கள் சீனாவிலேயே இருந்திருந்தால், தமது வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணி புலம்புகின்றனர். சம்பளம் அதிகம்.. அதே சமயத்தில் செலவு அதைவிட அதிகம் என்ற ரீதியில்தான் அங்கே மக்களின் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
லண்டன், நியூயார்க், டோக்கியோ போன்ற நகரங்களை விடவும் ஹாங்காங்கில் நிலம் மற்றும் கட்டிடத்தின் விலை சுமார் 40 சதவீதம் வரை அதிகம்.
உலகின் மிகப் பெரிய பணக்கார நகரம் என்று வர்ணிக்கப்படும் ஹாங் காங்கின் தற்போதைய மக் களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்நிலையை சீர் செய்ய வேண்டியது ஹாங்காங் நாட்டின் கடமை மட்டும் அல்ல, சீனாவுக்கும் முக்கிய கடமை உள்ளது.

Issues: