பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விநியோகம்.. ஐபிஎம் நிறுவனத்தின் புதுமைத்திட்டம்!

 முதன்மையான ஐ.டி.நிறுவனங்களில் ஐபிஎம்மும் ஒன்று. அமெரிக்க நிறுவனமான இந்நிறுவனம் இந்தியாவிலும்  முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டுள்ளது.  இந்தியாவில் மட்டும் இந்நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில் 3 0 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விநியோகம் செய்யும் திட்டத்தை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.  இது ஒரு முன்மாதிரி திட்டம் என அமெரிக்க ஊடகங்கள்  ஐபிஎம் நிறுவனத்தை புகழ்ந்து தள்ளியுள்ளன.
நிறுவன பணிநிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிற போது அப்பெண்களுக்கு கவலை உண்டாவதாகவும், எனவே அவர்களின் கவலையை போக்கும் விதத்தில் இத்திட்டத்தை அறிமுகப் படுத்துவதாகவும்,  இதற்கு ஆகும் செலவை நிறுவனமே ஏற்றுக்கொள்வதாகவும் ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தாயின் மார்பிலிருந்து சுரந்து எடுக்கும் கருவி கொண்டு தாய்ப்பால் எடுக்கப்பட்டு, உரிய முறையில் பதப்படுத்தி பெண்ணின் குழந்தைக்கு கொண்டுபோய் சேர்க்கப்படும்.
இத்திட்டம் முதலில் அமெரிக்க அலுவலகங்களில்,  மேனேஜ்மென்ட் லெவலில்  வேலைபார்க்கும் பெண்களுக்கு நடைமுறை படுத்தப்பட்டு, பிறகு வெளிநாடுகளிலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் இத்தகைய நலதிட்டத்தை செயல்படுத்தும் முதல் நிறுவனம் தமது நிறுவனம்தான் என்று பெருமையோடு ஐபிஎம். தெரிவித்துள்ளது.

இந்திய ஐபிஎம். நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்,   தாய்ப்பால் விநியோகம் செய்யும் திட்டத்தை இந்திய நிறுவனங்களில் விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அமெரிக்காவைப்  பொறுத்தவரை பெண்கள் பெரும்பாலானோர் தாய்ப்பால் புகட்டுவதில்லை. எனவே அந்நாட்டில் இத்திட்டத்தினால் பெரும் நன்மை விளையப்போவதில்லை. இது இந்திய பெண்களுக்கே அவசியமான திட்டம்.  அதனால்தான் தங்களுக்கு இத்திட்டம் விரைவாக வேண்டும் என்று கோருவதாக ஐபிஎம்  நிறுவன பெண் ஊழியர்கள் கூறுகின்றனர். இந்நிறுவனத்தின் பிரசவ கால விடுப்பு 3 மாதமாக உள்ளது.  இதை அரசு பெண் ஊழியர்களுக்கு இருப்பது போல் 6 மாதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.  

தாய்ப்பாலை விநியோகம் செய்யும் திட்டத்தை முன்மாதிரி திட்டம் என அமெரிக்க ஊடகங்கள் புகழ்வது, அத்திட்டத்தால் பெண்கள் அடையும் நன்மையை முன்னிட்டுதான். உண்மையில் இத்திட்டத்திற்கு பின்னால் லாப நோக்கம் உள்ளது என்பதையும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்க தவறவில்லை.
அமெரிக்க அலுவலகங்களில் 25 வருடங்களுக்கு மேலாக பணி புரிந்த ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற செய்த நிறுவனம்தான் ஐபிஎம். இப்போது தாய்ப்பாலை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது ஒரு நல்லெண்ண சேவையா என்றால் இல்லை என்கின்றன ஊழியர் அமைப்புகள்.  
 ஊழியர்களிடம் வேலை வாங்குதல், வேலை திறன் குறையாமல் இருத்தல், விடுப்பு எடுக்காமல் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களுக்காகவே இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்று இந்த அமைப்புகள் விமர்சனம் செய்துள்ளன.

ஐபிஎம். நிறுவனத்தை பொறுத்த வரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நஷ்ட கணக்கை காட்டி வருகிறது. இந்த காரணத்தை முன்வைத்து பல ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்பு வரை அனுபவம் வாய்ந்த திறமைசாலிகளை கூடுதல் சம்பளம் கொடுத்து பணிக்கு எடுத்துக் கொண்ட ஐடி நிறுவனங்கள்,  இன்றைக்கு அனுபவமற்ற, வேலை இல்லா பட்டதாரிகளை குறைந்த சம்பளத்துக்கு எடுத்துக் கொள்வதையே பெரிதும் விரும்புகின்றன.  வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகள், சம்பளத்தை பற்றி கவலை கொள்ளாமல், வேலை கிடைத்தால் போதும் என்று குறைந்த சம்பளத்துக்கு பணியில் சேர சம்மதிக்கின்றனர்.

தற்போது பல ஐடி நிறுவனங்களில் இன்கிரிமெண்டே போடப்படுவதில்லையாம். அதிக சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு திடீரென மெமோ கொடுத்து அவர்களை பணிநீக்கம் செய்கின்றனர். குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நிறைய அசைன்மென்ட் கொடுக்கப் படுகிறது.  இந்த பணிச்சுமை ஐடி ஊழியர்களை மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது.   இந்தியாவில் பணியாற்றும் ஐபிஎம். நிறுவன ஊழியர்களும் இத்தகைய அவல நிலையை சந்திக்கவே செய்கிறார்கள். எனினும் உள்ள வேலையும் போய்விட்டால் என்ன செய்வது என்றெண்ணி, பொறுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அருந்ததி

 

Issues: