தொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை!

1991 ம் ஆண்டு இந்திய தொழில் முனைவோர்களுக்கு ஒரு பொன்னான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் நமது இந்தியா உலகமயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இதன் காரணமாக ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு முன்பெல்லாம் ஒரு புதிய தொழிலை தொடங்குவது என்பது குதிரை கொம்பான விஷயமாகும். அதற்கு காரணம் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வந்தது தான்.
புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியா ஏராளமான மாற்றங்களை கண்டது. புதிய தொழில்கள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்தன.
வேலைவாய்ப்புகள் பெருகின. மக்களிடம் பணபுழக்கம் அதிகரித்தது. இதன்காரணமாக இன்றைக்கு நமது நாடு உலகளவில் பொருளாதார சக்தி மிகுந்த நாடாக திகழ்ந்து வருகிறது.
90களில் தொழில் முனைவோர்கள் நவீன சிந்தனைகளோடு தொழில் தொடங்கினார்கள்.
தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் நவீன தொழில் சிந்தனைகளை தங்களது தொழிலில் புகுத்தி பெரும் வளர்ச்சியை பெற்றன.
இந்நிறுவனங்களைபோலவே ஏராளமான நிறுவனங்கள் தொடர்ந்து கால்பதித்து இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமாக திகழ்ந்து வருகின்றன.
இந்த முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்தது புதுமையான தொழில் சிந்தனைகள்தான்.
90களில் தொடங்கிய புதிய பொருளாதார சிந்தனையின் தொடர்ச்சியாக இன்றைக்கும் நவீன சிந்தனைகளோடு தொழில் முனைவோர்கள் தொழிலில் இறங்கி சாதனை படைக்கிறார்கள்.
இன்றைக்கு இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. யாரெல்லாம் இந்த துறைகளில் புதுமையான சிந்தனையின் மூலம் அடியெடுத்து வைக்கிறார்களோ அவர்கள் வெற்றிக் கொடி நாட்டுவது நிச்சயம்.
உணவக துறையையே எடுத்துக்கொள்வோம். 90களுக்கு முன்பெல்லாம் வெறும் ஓட்டல் கடை மட்டும்தான் இருக்கும். சாலை ஓரங்களில் ரெஸ்டாரன்ட்டுகள் இருக்கும்.
ஆனால் இன்றைக்கு துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன் புட், இத்தாலியன் புட் என புதுமையான கடைகள் வந்துவிட்டன.
மக்களும் இந்த புதுமையான உணவு கடைகளுக்கு பெரும் ஆதரவு தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மக்களை ஈர்க்கும் வகையில் இந்த உணவு கடைகளின் செயல்பாடு இருப்பதுதான் இதில் உள்ள சூட்சமமாகும்.
கம்ப்யூட்டர் துறையை எடுத்துக்கொண்டால் புதிதுபுதிதாக சாப்ட்வேர்களை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். அதேபோல்தான் வாகன துறையிலும்.
90களுக்கு முன்பு மாருதி, பியட், அம்பாசிடர் கார்கள் மட்டும்தான் இந்திய சாலைகளை அலங்கரித்தன. ஆனால் இன்றைக்கு மாருதி காரை எடுத்துக்கொண்டால்கூட அதில் 30க்கும் மேற்பட்ட மாடல்கள் வந்துவிட்டன.
பல வெளிநாட்டு கார் கம்பெனிகளின் கார்கள் இந்திய சாலைகளை அலங்கரித்து கொண்டு இருக்கின்றன.
முன்பு கால் டாக்ஸி இருந்தது. இப்போது கூடுதலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது. புதிய தொழில் முனைவோர்கள் கார், பைக்கை வாடக்கைக்கு விடுவது குறித்த சிந்தித்து செயல்பட்டால் அது புதுமையான தொழிலாக அமையும். கடைகள் வைத்து மக்களிடம் நேரடியாக பொருட்களை விற்பனை செய்து வந்த நிலைமாறி இன்றைக்கு ஆன்மூலமாகவே விற்பனை செய்யும் புதுமை சிந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது.
பொருட்கள் விற்பனை மட்டுமின்றி அனைத்து விதமான சேவைகளும் ஆன்லைன் மூலமாக வந்துவிட்டன.
கல்வி கற்பித்தல், டியூசன் சொல்லி கொடுத்தல், மொழி கற்றுகொடுத்தல், இசை பயிற்சி கொடுத்தல், டாக்டர் கன்சல்டிங் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. இவையெல்லாம் புதுமையான தொழில் சிந்தனையால் விளைந்தவை.
இதுபோல இன்னும் புதுமையான தொழில் சிந்தனைகள் நமது நாட்டு இளைஞர்களிடம் வளர வேண்டும். அதற்கு இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு புதுமையாக சிந்திக்க வேண்டும்.
புதுமையான தொழில் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி செயல்பட்டு கொண்டு இருப்பவர்கள்தான், தொழில் துறையில் சாதனை படைக்கிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

Issues: