உலக பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது இந்தியா தப்பித்தது எப்படி?

கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, உலக பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்களாலேயே கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுவாக நமது நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் கருத்தரங்குகளில் மேற்கத்திய பொருளாதார மேதைகளின் கருத்துகள் பேசப்படுகிறதே தவிர, மேற்கத்தியர்களின் பழக்கவழக்கம், பாரம்பரியம், மக்கள் உறவு நிலை போன்றவற்றில் நமது நாட்டவருக்கும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களுக்கும் உள்ள வேற்றுமைகள் பற்றி பேசப்படுவது இல்லை.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் உள்ள 11 கோடி குடும்பத்தினர் 120 கோடி கடன் அட்டைகள் மூலம் கார், வீடு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் இந்தியர்கள் தமது வருமானத்தில் 20சதவீதத்தை சேமிக்கும் வழக்கம் உடையவர்களாக உள்ளனர். இதை 10 சதவீதமாக குறைத்து நமது நாட்டவரையும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாற்றும் முயற்சி மறைமுகமாக நடந்து வருகிறது.

அதனால்தான் நுகர்வு கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியர்களிடம் உள்ள பாரம்பரிய ஆன்மீக கலாச்சார வாழ்க்கை முறை, குடும்ப பொறுப்புணர்வு இவற்றின் காரணமாக எதிர்கால சந்ததியர்களுக்கு சேமித்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. குடும்ப வருமானத்தில் சேமிப்பு என்பது கடந்த ஆண்டில் 19%ஆக இருந்தது. தற்பொழுது 29%ஆக அதிகரித்துள்ளது. வங்கிகளில் நமது நாட்டினர் சேமித்து வைத்துள்ள வைப்புத்தொகை மட்டும் 70 லட்சம் கோடியைத் தாண்டும்

. இதற்கு காரணம், அமெரிக்கர்கள் போல் கடன் அட்டைகளை கொண்டு பொருட்கள் வாங்கும் வழக்கம் இந்திய மக்களிடம் பெருகாமல் இருப்பதுதான். குறிப்பாக நம் நாட்டு பெண்கள் தான் காரணம் என்று சொல்லாம்.

பெண்கள் பொறுப்புடன் குடும்பம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதால், சேமிப்பு என்பது நமது நாட்டில் ஒரு பழக்கமாகவே மாறியுள்ளது. இதனால்தான் உலக பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது நமது நாட்டின் பொருளாதாரம் தப்பித்தது. இந்த விஷயத்துக்காகவே பல நாடுகள் இந்தியாவை ஆச்சரியத்தோடு பார்க்கின்றன.

Issues: