எல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்

வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பொறுத்துவதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டிற்குள்  10ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  
 
இது இந்தியாவின் ஒட்டு மொத்த நுகர்வில் 10 சதவீதமாகும். இதன் மூலம் 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று மத்தியஅரசு எண்ணுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திட்டத்தை முன்னிட்டு, நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதன பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல தொழிற்சாலைகளில் மின்சாரத்தை  சேமிப்பதற்கும்  அரசு முன்னுரிமை தரும் என்று தெரிகிறது.

இன்றைய நிலையில், 28 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை. இவ்வீடுகள் யாவும் விளக்கொளியில்தான் வெளிச்சத்தைக் கண்டு வருகின்றன. மின்சார வெளிச்சத்தை காண்பது இவர்களுக்கு கனவாக உள்ள நிலையில், மீதமாகும் 10 சதவீத மின்சாரத்தை இவர்களுக்கு கொடுத்து அவர்களின் கனவை நனவாக்க முடியும்.

எல்இடி விளக்குகளின் விலையை குறைப்பதில் ஆர்வம் காட்டும் மத்தியஅரசு,  வீடுகளில் சூரிய மின்சார உற்பத்தியை ஊக்கு விப்பதிலும் ஆர்வம் காட்டுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 40ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை இலக்காக கொண்டு மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது.

சூரிய சக்தி  மின்சாரம் அதிகரிக்கும்போது உற்பத்திவிலை குறையும் என்பதால் சூரிய சக்தி  மின்சாரத்திற்கான செலவினம் குறையும். நிலக்கரி பற்றாக்குறை நிலவிவரும் வேளையில் சூரிய சக்தி  மின்சாரம் என்பது வரப்பிரசாதமாக அமையும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். பருவமழை குறைவால் ஏற்படும் நீர் மின்சார இழப்பினையும் சூரிய சக்தி  மின்சாரம் ஈடுகட்டும்.

கலை

 

Issues: