பட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்

2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு, வரி அடிப்படையிலான பயன்களை மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகளை கவரவும் மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தீட்டி வருவது அறிந்ததே.
இந்நிலையில் இந்தியாவில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் வாரி வழங்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்ததர நிறுவனங்களுக்கு முதல் 3 வருடங்களுக்கு நேரடி வரி தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி இவற்றின் இறக்குமதி வரி தற்போது 10 சதவீதமாக உள்ளது. இது இவற்றின் வியாபாரத்தை பெருமளவு பாதித்துள்ளதாக வியாபாரிகள், மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர். எனவே இவற்றிற்கான இறக்குமதி வரி பெருமளவு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் விண்வெளிதுறை பொருட்களை உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முழுமையான வரி தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது. காலணிகளுக்கான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படலாம்.
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு அதிக மான வரியும், அவற்றின் மூலப்பொருட்களுக்கு குறைவான வரியும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி நபர்களுக்கான வருமான வரி உச்ச வரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்பது தெரியவில்லை. எனினும் உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக அரசு வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைபடுத்தி வருகிறது. இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அமையும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Issues: