வங்கிகளின் முதுகெலும்பு வாடிக்கையாளர்களே...
வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவுகள் சமீபகாலமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதை பல வங்கிகளில் காண்கிறோம்.
இப்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் நாம் வங்கிச் சேவையை சார்ந்தே இருக்கிறோம். சொல்லப்போனால் வங்கித்துறை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் வங்கி நிர்வாகமும் உயர்மட்டக் குழுவை நியமனம் செய்து வாடிக்கையாளர்களின் குறைகளை துரிதமாக சரிசெய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
வங்கிச் சேவையானது ஆட்டோ ஓட்டுனர் முதல் மாத பென்சன் பெறுபவர்கள் வரை பல வகைப்பட்டது.
ஒரு வங்கியின் எந்தக் கிளையில் கணக்கு வைத்திருந்தாலும் இந்தியாவின் எந்த ஊரிலும் உள்ள அந்த வங்கிக் கிளையில் பணபரிவர்த்தனை செய்யலாம் என்கிற வசதி வங்கித்துறையின் முக்கியமான சாதனை என்றே கூறலாம்.
வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையைப் பெற முறையான படிவங்களையும் அடையா ளங்களையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்-துகிறது.
வங்கிகள் தமது பரிவர்த்தனைக்கு தேவையான நிதியை பொதுமக்கள், நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி இவற்றின் மூலமாக திரட்டிக் கொள்கின்றன. திரட்டப்பட்ட பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கின்றன.
இதை வைத்துத்தான் ஒரு வங்கியின் ஆற்றல் நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களோடு நல்ல உறவை வைத்துக் கொள்வது தான் அவற்றின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும்.
இந்திய மக்களிடம் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று சேமிப்பு பழக்கம். இந்த சேமிப்பை வங்கிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும்.
சேமிப்பு பழக்கம் குறித்து இன்னும் விரிவாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மேலும் சிறுசேமிப்பு திட்டத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வண்ணம் அறிமுகப்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை வங்கிகள் பெற முயன்றால் வங்கிகளின் பலம் இன்னும் அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்கள்தான் தங்களின் முதுகெலும்பு என்பதை வங்கிகள் உணர வேண்டும்.