பூச்செடி வளர்ப்பில் வருமானம்...
பலருக்கும் பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பூச்செடிகளை மட்டும் விற்பனை செய்வதற்கு சிலர் பூச்செடிகளை வளர்க்கின்றனர். இன்னும் சிலர் பூக்களை மட்டும் விற்பனை செய்வதற்கு பூச்செடிகளை வளர்க்கின்றனர். இது ஒரு நல்ல தொழில் எனலாம்.
கிராமபுறங்களில் அதிக அளவு திறந்தவெளி இடங்கள் இருப்பதால் அம்மக்கள் அதிக பூச்செடிகளை வளர்த்து பூக்களை விற்கிறார்கள். குறைந்த அளவு நிலம் உள்ளவர்கள் கூட பூச்செடிகளை வளர்த்து பூக்களை விற்பனை செய்து இலாபம் அடையலாம்.
பூச்செடிகளை வளர்ப்பதற்கு தேவையான அளவில் மண்தொட்டிகளை வாங்க வேண்டும். பண்ணை வைத்து பூக்களை வளர்க்க எண்ணுவோர் அந்த இடத்தில் உள்ள மண்ணை தோட்ட கலை நிபுணரிடம் கொடுத்து பரிசோதனை செய்து பூச்செடிகள் வளர்க்க ஏற்றது தானா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற மண்ணாக இல்லாத பட்சத்தில் அந்த நிலத்தை செடிகள் வளர்க்க ஏற்றதாக மாற்ற தோட்ட கலை நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள். இவ்வகை பண்ணைகளில் ரோஜா, மல்லிகை, முல்லை, செம்பருத்தி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. சிலர் பூச்செடிகளை தவிர மா, பலா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, செர்ரி போன்றவற்றையும் வளர்க்கிறார்கள்.
ரோஜாசெடிகளை பெரும்பாலும் பதியன் முறையில்தான் உருவாக்குகிறார்கள். இந்த முறை எளிதானது.
தாய் செடியிலிருந்து நன்கு முதிர்ந்த கிளையை ஒடித்து மண்ணில் புதைத்து வைத்தால் சில நாட்களில் வேர் முளைத்துவிடும். பின்னர் அதை தாய் செடியிலிருந்து வெட்டி வேறோடு எடுத்து பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது மண் தொட்டிகளிலோ நட்டு வைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
இது போன்ற பதியன் முறையில் மல்லிகை, முல்லை, செம்பருத்தி போன்றவற்றை உருவாக்கி விற்பனைக்கு அனுப்பலாம். இது ஒரு நல்ல சுயதொழில். இத்தொழிலை செய்பவர்கள் பலன் பெறுவது உறுதி.
சொந்தமாக நிலம் உள்ளவர்கள் நல்ல ஆழமாக உழுது மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பயிர்களை பயிர்செய்தால் சிறந்த பயனடையலாம். சொந்த நிலங்கள் இல்லாதவர்கள் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் செடிகளை பயிரிடலாம். இத்தொழிலுக்கு அதிக அளவு முயற்சிகள் தேவை இல்லை.
முதலில் கொஞ்சநாள் வருமானம் இல்லாதிருந்தாலும் பூக்கள் பூக்க தொடங்கியதும் தினமும் ஒரு கணிசமான வருவாய் கிடைக்கும். இதற்கு தேவையான செடிகளை அருகிலுள்ள பண்ணைகளிலோ, அரசு தோட்டகலையிலோ பெற்றுக்கொள்ளலாம். பூக்களை உங்கள் இடத்திற்கே வந்து வாங்கி செல்வதற்கு விற்பனையாளர்கள் இருக்கிறார்கள்.
நகரத்தில் உள்ளோர்களுக்கு இட வசதி வாய்ப்பு குறைவு எனினும் அதற்கேற்ப குறைந்த அளவு பயிர் செய்யலாம். ஆனால் கிராமத்தில் உள்ளோர்களுக்கு இட வசதி அதிகம். அவர்கள் இத்தொழிலை மிக சிறப்பாக செய்ய முடியும்.எந்த அளவுக்கு இடத்தை அதிகரித்து பயிர் செய்கிறோமோ அந்த அளவுக்கு இலாபமும் பெறலாம்.
தங்கவேல்