விவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்தியா ஒரு விவசாய நாடு. அதனால்தான் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் கூறினார். ஆனால் தற்போது விவசாயத்துறை வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது.
வறட்சி, வெள்ளம், வசதியின்மை, பணியாள் பற்றாக்குறை, உரிய விலை கிடைக்காமை, அரசால் நிலம் கையகப்படுத்துதல், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நிலம் விற்பனை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேலை கிடைக்காததால் விவசாய தொழிலாளர்களும், சிறு குறு விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு வேறு தொழிலைத் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், விஞ்ஞானி உள்ளிட்டோர் அவர்களது வாரிசுகள் அவர்களைப் போல் அதே துறைக்கு வந்து சாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் விவசாயிகள் தங்களது வாரிசுகளை விவசாய பணிக்கு கொண்டு வர விரும்புவதில்லை. காரணம் விவசாய துறையின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின்மையே ஆகும்.
இதனால் விவசாய உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமே விவசாய உற்பத்தி குறைவுதான். விலைவாசி தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருவதற்கும் விவசாய உற்பத்தி குறைவே காரணமாகும்.

தரகர்களின் தலையீடு
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் பொருட்களை பன்மடங்கு விலை உயர்த்தி லாபம் ஈட்டுகின்றனர். கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கரும்புக்கு உரிய விலை கேட்டு அவ்வப்போது கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களிடம் கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகளின் வருவாய் மட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த முரண்பாட்டை களைய அரசு தீவிர முனைப்பு காட்ட வேண்டும்.
விளைநிலங்கள் வீட்டுமனை ஆகுதல்

பல்வேறு விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் தங்களது நிலங்களை விற்று விடுகின்றனர். பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்வதால்தான் விவசாயிகள் இவ்வாறு செய்ய நேரிடுகிறது.

விளைநிலங்கள் விலைநிலங்களாகக் கூடாது என்று கடுமையான சட்டம் விதிப்பது மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் விவசாய துறைக்கும் உரிய உதவிகளை வழங்க வேண்டிய கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் அரசோ தொழில் வளர்ச்சி, நவீனமயம் போன்ற கார ணங்களுக்காக விவசாய நிலங்களைக் கையகப் படுத்தும் பணியில் ஆர்வம் காட்டுகிறது.
தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டியது அவசியமான ஒன்றுதான். எனினும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் நிலங்களை அழித்து அந்த வளர்ச்சியை எட்ட வேண்டுமா என்ற சமூக ஆர்வலர்களின் கேள்வியை புறந்தள்ளி விட முடியாது.

விவசாயமும், தொழில்வளர்ச்சியும் இரண்டு கண்கள் என்று பாவிக்கும் மனப்பான்மையை அரசு வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு தரிசு நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இந்தியாவில் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. தரிசு நில பகுதிகளில் குடிநீர் வசதி, மின்சாரவசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தந்தால் அப்பகுதிகள் நன்கு வளர்ச்சியுறும். இப்பகுதிகளில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு எராளமான சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சியைப் பெருக்க முடியும்.

அரியானா மாநில அரசு, விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் கட்டுவதற்கு விற்றால் நிலத்திற்கான தொகை மட்டுமின்றி ஆயுட்கால உதவித்தொகையும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கும் நல்லது போல தோன்றலாம். ஆனால் விவசாயத்துறை வீழ்ச்சிக்கான அஸ்திவாரம்தான் இந்தப் புதிய முறை என்பது தொலைநோக்கு பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

பருவ நிலை மாற்றத்தாலும் பாதிப்பு
புவி வெப்பமயமாதலால் தற்போது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மழையின் அளவு அதிகரிப்பதும் குறைவதும் நிகழ்கிறது. எந்த பருவ காலத்தில் எதைப் பயிரிடலாம் என்று கணித்துப் பயிரிடும் விவசாயிகளுக்கு இது ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்துகிறது. பருவ நிலை மாற்றத்தால் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே பருவ நிலை மாற்றத்தை தாங்கி வளரும் விதைகளை கண்டுபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் விவசாயிகளுக்கு பாசனவசதி, மின்சாரசலுகை, விதைகளுக்கு மானியம், வேளாண் காப்பீடு, விவசாய பணிகளில் ஈடுபட உதவித்தொகை, வேளாண் தொழில் நுட்பங்களைப் பற்றி வகுப்புகள் எடுத்து போதிய விழிப்புணர்வை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அம்சங்களில் அரசு தீவிர முனைப்பு காட்டினால்தான் விவசாய துறையில் வளர்ச்சி காண முடியும்.
‘இந்தியாவில் விவசாய துறைக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாவிட்டால் அங்கு வறுமையை ஒழிக்க இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்‘ என்று லண்டனைச் சேர்ந்த ஆக்ஷன் எய்டு என்ற நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளதை இங்கே நினைவில் கொள்வது அவசியம்.
           
கண்ணன்

 

 

 

Issues: