கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..

கிராமப்புற பகுதிகளில் உள்ள கடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற் காகவும், இதன் மூலம் கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகப் படுத்துவதற்காகவும் உருவாக்கப் பட்டதே ‘மண்டல கிராம வங்கிகள்’.
இதற்காக 1976 ம் ஆண்டு, மண்டல வங்கிகள் சட்டம், அரசால் இயற்றப்பட்டது. வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட இந்த வங்கிகள் சிறந்து விளங்கும் என்று நரசிம்மன் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் ‘மண்டல கிராம வங்கிகள்’. நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. வங்கித் துறையில் இது ஒரு சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது.
விவசாயிகள், விவசாய வேலையாட்கள், கைவினைஞர்கள், சிறு சுயதொழில் முனைவோர் போன்றோருக்கு இந்த மண்டல கிராம வங்கிகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
கிராமப்புற சேமிப்புகள் மற்றும் வைப்பு நிதிகள், நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டதற்கு இந்த மண்டல கிராம வங்கிகளே முக்கிய காரணம்.
மண்டல கிராம வங்கிக்கு மூலதன தொகை, நிர்வாகம், நிதி உதவி, வேலைக்கு ஆள் எடுத்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற சேவைகளை, பொதுத் துறை வங்கி வழங்குகிறது.
கூட்டுறவு சங்கங்கள், வேளாண் வர்த்தக சங்கம், கூட்டுறவு பண்ணைச் சங்கம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விவசாய சேவை சங்கம், தொடக்க நிலை வேளாண் தேவைகள் அல்லது வேளாண் செயல்கள் மற்றும் இதர தேவைகளுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்கும் பணியை செய்து வருகிறது.
மேலும், சிறு வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவனம், சிறுதொழில் முனைவோர், இதர வேலைகள் செய்வோர் போன்றோருக்கும் கடன் வழங்கும் பணியைச் செய்கிறது.
மண்டல கிராமப்புற வங்கியை சிறப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து, வர்த்தக வங்கிக்கு இணையாக, ரிசர்வ் வங்கி தரம் உயர்த்தியுள்ளது.
மண்டல கிராம வங்கிகள் வைத்துள்ள பெரிய வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. 13 மாநிலங்களில் 30 மண்டல கிராம வங்கிகளைக் கொண்டுள்ளது ஸ்டேட் வங்கி.
இதன் கீழ் 2000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. ஸ்டேட் வங்கி மட்டுமன்றி இதர வங்கிகளும் இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க மண்டல கிராம வங்கிகளைக் கொண்டுள்ளன.
மண்டல கிராம வங்கிகளில் நபார்டு வங்கி மிக முக்கியமானதாகும். நிறுவன மேம்பாடு, கிராமப்புற துறைகளுக்கு கடன் வழங்குபவர்க்கு நிதியளித்தல், ஆய்வு செய்தல், கண்காணிப்பு, நிதித்துறை கழகத்தை மதிப்பீடு செய்தல் போன்றவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது.
கிராமப்புற பொருளாதார மேம்பாடு, தொடர்ச்சியான வளர்ச்சி போன்றவற்றிற்கு உறுதுணையாக நபார்டு வங்கி இருக்கின்றது.
தமிழ்நாட்டில் உள்ள மண்டல கிராம வங்கிகள்
சப்தகிரி கிராமின் வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கி இவற்றிற்கு இந்தியன் வங்கி நிதி உதவி வழங்குகிறது.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல் பட்டு வரும் பல்லவன் கிராம வங்கியானது நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி, கோவை, கடலூர், கரூர், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர். ஆகிய 14 மாவட்டங்களில் இயங்கி வருகிறது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அருள்

Issues: