உலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்

இந்திய வானியல் துறையில் ‘’இஸ்ரோ’’ வின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. குலசேகரன்பட்டனத்தில் அமையும் போது அது 2வது ராக்கெட் ஏவுதள மையமாகவும் 3வது ராக்கெட் ஏவுதளமாகவும் இருக்கும்.
பிரெஞ்ச் கயானாவுக்கு அடுத்தபடியாக இந்த பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாகக் கண்டறியப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடம் பூமத்தியரேகைக்கு மிக அருகில் இருக்கிறது. மேலும் வி.எஸ்.எஸ்.சி., எல்.பி.எஸ்.சி. மற்றும் ஐ.ஐ.எஸ்.யு. உள்ளிட்ட பல்வேறு ராக்கெட் ஆய்வு மையங்கள் இந்த பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து சென்ற பிறகு முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் கடலில் விழுமாறு பிரித்து விடப்படுகின்றன.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் போது, இவ்வாறு பிரித்து விடப்படும் நிலைகள் இலங்கையில் விழாத படி மிக கவனமாக செலுத்தபட வேண்டி உள்ளது. இதற்காக ராக்கெட்டுக்கு அதிக கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
இதற்கு மாற்றாக குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்தினால் வளைகுடா பகுதியில் இருந்து நேராக தெற்கு நோக்கி செல்லும். இதனால் தூரமும், திருப்ப வேண்டிய கோணமும் மிகக் குறைவாக அமையும். ராக்கெட்டுக்கான எரிபொருள் கணிசமான அளவு மிச்சமாகும். ராக்கெட்டை செலுத்தும் நேரமும் குறையும். 4 அடுக்கு ராக்கெட்டுக்கு பதிலாக 3 அடுக்கு ராக்கெட்டினைக் கொண்டே அதன் பணிகளை செய்து முடிக்கலாம்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் 2 வெவ்வேறு இடங்களில் தான் ராக்கெட் ஏவுதளங்கள் அமைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கெனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
இந்நிலையில் 3வது ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினமே சிறந்த இடம் என்று இந்திய அரசு கருதியது. இது தொழில்நுட்ப அடிப்படையில் பாதுகாப்பானதாக அமையும் என்பதால் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்த பிறகு குலசேகரன்பட்டினம் உலகின் கவனத்தை இழுக்கக்கூடிய நகராமாக உருவெடுக்கும். இந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ரியல்எஸ்டேட் துறை பெரும் எழுச்சியை பெறும்.

Issues: