சாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி?

கடந்த 2008ல் தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடி இன்று வரை நீடித்து வருவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த நெருக்கடியில் இருந்து பல நாடுகள் இன்னும் மீளவில்லை.  

நல்ல வேளையாக இந்தியா மீண்டுவிட்டது என்று சொல்லலாம். இந்தியா நெருக்கடியில் சிக்காமல் மீண்டதற்கு முக்கியகாரணம், நம் மக்களின் சேமிப்பு பழக்கம் என்கிறார்கள் அறிஞர்கள்.
பொருளாதார நெருக்கடியால் சிக்கிக் தவிக்கிற  அனைத்து நாடுகளும்  தங்களது பொருளாதார சிக்கலுக்கு அடிப்படை காரணம், தவறான சமூக பொருளாதார கட்டமைப்பே என்பதை உணரத் தவறுகின்றன. அடிப்படையை சரிசெய்யாமல் மாற்றம் நிகழ வாய்பில்லை என்கிற உண்மையை இந்த நாடுகள்  ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.  அடிப்படையை சரி செய்தால் மாற்றம் நிகழும் என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  மரணமடைந்த வெனீசுலா அதிபர் சாவேஸ் செய்த அரசியல் சீர்த்திருத்தங்கள் அந்நாட்டு மக்களின் வாழ்வு நிலையை உயர்த்தியதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். 
சாவேசுக்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்கள் தாராளமய கொள்கைகளை கட்டுப்பாடு இல்லாமல் வெனீசுலாவில் புகுத்தினர். இதன் காரணமாக அந்நாட்டின் செல்வ வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் பட்டன. மாபெரும் லாபத்தை பன்னாட்டு நிறுவனங்கள் ஈட்டின.
தாராளமய கொள்கைகளால் வேலைவாய்ப்பு பெருகினாலும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக பண்பாட்டு சிக்கல்கள் தோன்றின. கலாச்சாரம் வேறு திசையை நோக்கி நகர்ந்தது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்தது. இது அந்நாட்டு மக்களை பொங்கி எழ செய்தது. கிளர்ச்சியாளர்கள் உருவானார்கள். அரசுக்கு எதிராக போராடிய வர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சூழ்நிலையில் சாவேஸ்  தமது அரசியல் இயக்கத்தை வளர்த்து மக்களிடம் தமது ஜனநாயக பொதுவுடமை கொள்கைகளை  பரப்பி மக்களின் நல்லாதரவை பெற்றார். பிறகு மக்களின் அமோக ஆதரவோடு வெனீசுலா நாட்டின் அதிபராக ஆனார்.

அதிபராக முதல் முறையாக பொறுப்பேற்றவுடன் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்தல் அறிவித்தார். 
அதன் மூலமாக, மக்கள் ஆதரவு அரசியலமைப்பு சட்டத்தை நாட்டிற்காக உருவாக்கி தருமாறு கேட்டுக்கொண்டார். இவ்வாறாக பொலிவாரியன் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். அதைக் கொண்டு மக்களுக்கு தேவையான உரிமைகளை அளித்தார். வெனீசுலா மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக  மாற்றியமைத்தார்.
இன்னொரு முக்கிய மான காரியத்தை அவர் செய்தார். அதாவது தனியார் நடத்தி வந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொழிலை தேசியமய மாக்கினார். 
இது அரசின் கஜானாவிற்கு  மிகுதியான பணத்தை கொண்டு சேர்த்தது. கிடைத்த  பணத்தை எல்லாம் சமூக திட்டங்களுக்கு பயன் படுத்தினார். நாட்டில் உள்ள செல்வங்களை அனைத்தும் நாட்டு மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தும் வகையில் திட்டங்களை தீட்டினார். 

இது அந்நாட்டின் செல்வந்தர்களையும், அந்நாட்டுக்கு தொழில் செய்ய வந்த பன்னாட்டு நிறுவனங்களையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது. சாவேசுக்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபட்டனர். ஆனால் எந்த சதிவேலையும் எடுபடவில்லை. ஏனெனில் சாவேஸ் ஒரு மாபெரும் மக்கள் தலைவராக உயர்ந்திருந்தார். 

அவர் செய்த மகத்தான சாதனைகளில் ஒன்று, மக்கள் பங்கேற்கும் வகையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றிய மைத்தை கூறலாம். மக்கள் நலதிட்டங்களை நிறைவேற்று வதற்கு பல்வேறு மக்கள் குழுக்களை அமைத்தார். இக்குழுக்கள் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக தலையிட்டு தீர்த்தன. 
2006ம் ஆண்டிலேயே எழுத்தறிவின்மை முற்றிலுமாக அகற்றப்பட்டது. பொருளாதார நெருக்கடி இருந்த போதிலும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதை உத்தர வாதமாக்கினார். பல தொழிற் சாலைகளை தேசியமய மாக்கினார்.

சாவேஸ் ஆட்சியை எப்படியாவது  பலவீனப் படுத்தி வீழ்த்திவிட வேண்டும் என்று அமெரிக்கா கடும் பிரயத்தனம் செய்தது. ஆனால் அவர் மரணம் நிகழும் வரை அமெரிக்காவின் முயற்சி பலிக்கவில்லை. 
ஒரு சிறந்த மக்கள் அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வெனீசுலா ஒரு எடுத்துக்காட்டு. அதேவேளையில் ஒரு அரசு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

கிருஷ்ணா, கோதாவரி படுகையில் உள்ள இயற்கை எரிவாயு வயல்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் நிறுவனம் ரிலையன்ஸ் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்.
அந்த வயல்களில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவை யூனிட் ஒன்றுக்கு ரூ.226 என்ற விலையில் அரசு நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் விற்று வருகிறது. 
இந்த விலையை ரூ 756 ஆக அதிகரிக்க வேண்டுமென கோரியது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் அரசின் முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் அந்நிறுவனம் குறைந்த அளவே உற்பத்தி செய்ததால் 100 கோடி டாலர்களை அரசிற்கு அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. உடனடியாக ஜெயபால்ரெட்டி பெட்ரோலிய துறை அமைச்சரவை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாற்றப்பட்டார்.

கடந்த 14  ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா, கோதாவரி படுகையில் கச்சா எண்ணெயும், எரிவாயும் இருப்பது கண்டறியப் பட்டவுடன் அப்படுகையின் பெரும் பகுதியை (339சதுர கிலோமீட்டர்) உற்பத்தி பகிர்வு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜக கூட்டணி அரசு, ரிலையன்ஸ் குழுமத்திற்கு ஒப்படைத்தது. 
இப்படுகையில் கிடைக்கும் எரிவாயுவை தோண்டி எடுக்க எவ்வளவு மூலதனம் போடப்படுகிறதோ அந்த மூலதனத்தை ரிலையன்ஸ்  முழுமையாக திரும்ப எடுக்கும் வரை அரசிற்கு குறைந்த பட்ச ராயல்டி தொகை கொடுத்தால் போதும் என்பது ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சம்.
ரிலையன்ஸ் இப்படுகையை குத்ததைக்கு எடுத்தபோது, ஒரு யூனிட் இயற்கை எரிவாயு ரூ.124 என்ற விலையில் 17 ஆண்டுகளுக்கு தேசிய அனல்மின் கழகத்திற்கு தருவதாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டது.  

ஆனால் உற்பத்தி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு யூனிட் விலையை ரூ.226 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தது. பின்னர் ரிலையன்சின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 
இந்த விலை உயர்வின் காரணமாக ரிலையன்சிற்கு ரூ 30 ஆயிரம் கோடி வரை அதிரடியாக லாபம் கிடைத்தது. தேசிய அனல் மின் கழகம் ரூ.24 ஆயிரம் கோடி நஷ்டத்திற்கு ஆனானது. இந்த நஷ்டம் மக்களின் வரிப்பணம் என்பதை முந்தைய மத்தியஅரசு உணராமல் போனது துரதிருஷ்டவசமானது. 
ஃபோர்ப்ஸ் பட்டியலில்  உலக பெரும் பணக்காரர்களாக 70  இந்தியர்கள் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள் என்று இந்தியா பெருமிதம் கொள்கிறது. 
இந்தச் சாதனை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக வருணிக்கப் படுகிறது. உலக பட்டினி பட்டியலில் உள்ள 88 நாடுகளில் 66வது இடத்தை பிடித்துள்ள இந்தியா,  பணக்காரர்களின் சாதனையை புகழ்ந்து பேசுவது வியப்பாக உள்ளது.

ஐநாவின் ‘மனிதவளம்’ குறித்த முன்னேற்ற பட்டியலில் பூட்டான், லாவோஸ் போன்ற நாடுகளுக்கும் கீழாக 136வது இடத்தில் இருக்கிற இந்தியா, எப்படி முன்னேறிய நாடாக இருக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நமது மன்மோகன்சிங், நரசிம்மராவ் அமைச்சரவையில் 1991ல் தாராளமய கொள்கையை அறிமுகப்படுத்திய போது இந்தியாவில் மாயவித்தைகள் நிகழும் என்றார். பாலாறும், தேனாறும் ஓடும் என்றார். ஆனால் நிகழ்ந்ததோ வேறு. 

 தாராளமய கொள்கைகளால் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்தது உண்மை தான். பொருளாதார வளர்ச்சி முன்னை விட அதிகரித்தது என்பதும் உண்மை தான். ஆனால் இதன் பலனை அறுவடை செய்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரே. 
பணக்காரர்கள் மேலும், மேலும் பணக்காரர்களாகி கொண்டே இருக்கிறார்கள். பணக்காரர்களின் வளர்ச்சி முயல் வேகத்தில் இருக்க, ஏழைகளின் வளர்ச்சி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.  

இதைத்தான் வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி  அந்நிய முதலீடுகளை அளவுக்கு அதிகமாக அனுமதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு புள்ளி விவரத்தை பார்ப்போம். 1980 முதல் 2014  வரையிலான 34  ஆண்டுகளில் சராசரியாக இந்தியா 6 சதவீத வளர்ச்சியை அடைந்தது. 
1980 ஆண்டில்  இந்தியா மனிதவள வளர்ச்சி  குறியீட்டில் 134வது இடத்தை பெற்றிருந்தது. 34  ஆண்டுகளில் அதாவது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்த பிறகு 2014 ல் தரவரிசை பட்டியலில் 136வது இடத்திற்கு கீழ்  இறங்கி உள்ளது. 

சராசரி ஆயுள் காலம், எழுத படிக்க தெரிந்த பெண்களின் தொகை , குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ கால இறப்புகள், சுகாதார முன்னேற்றம், குழந்தை நோய் தடுப்பு முயற்சிகள்  போன்றவற்றில் பாகிஸ்தான், வங்காளதேசம்,  இலங்கை, நேபாளம், இந்தியா உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் 1980ல் இந்தியா முதலிடத்தில் இருந்தது. 
ஆனால் தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சத்துணவு குறைபாட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 40 சதவீதம் இந்திய குழந்தைகள் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. 

2000ம் ஆண்டு முதல் அமைப்பு ரீதியான துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையில், தொடர்ந்து வீழ்ச்சி நிலை தான் காணப்படுகிறது. 
நிரந்தர பணி அதிகம்  கிடையாது. மாறாக ஒப்பந்தபணி அல்லது தற்காலிக பணி தான் அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி துறை போன்றவற்றில் தான் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தாராளமய கொள்கைகள் கோலோச்சி வரும் இந்தியாவில்  சமுதாயத்தில் மேல்மட்ட அடுக்கில் உள்ள சுமார் 20 சதவீதத்தினரே பயனடைந்து வருகின்றனர் என்பதை முன்னரே குறிப்பிட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது வெறும் வார்த்தையாகத்தான் உள்ளது.
உலகளவில் வேலைவாய்ப்புகளின் போக்கு பற்றி சர்வேச தொழிலாளர் அமைப்பு ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி,  உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் இந்த 7 வது ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி மேலும் சரியுமாம். 
வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரிக்கு மாம். 2016 ,ம் ஆண்டில் வேலைவாய்ப்பில்லா தவர்களின் எண்ணிக்கை 205 மில்லியனாக இருக்குமாம்.  மேலும் கூடுதலாக 100 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழப்பார்களாம். 
35 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் எந்தவொரு வேலையிலும் நுழைய முடியாத நிலை ஏற்படுமாம். இந்த எச்சரிக்கையை  நம் இந்தியா உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம். 

நம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் நுகரும் சக்தியை அதிகரிக்க வைக்க முடியும். இது நல்ல பொருளாதார சுழற்சியை உருவாக்கும். 
உள்நாட்டில் பொது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். மாறாக அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதால பெரிய வளர்ச்சி சாத்தியமில்லை. பொது முதலீட்டை அதிகரித்து கட்டமைப்பை உருவாக்கினால் தான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் மக்களின் வருமானம் அதிகரித்து  உள்ளநாட்டு கிராக்கி அதிகரிக்கும்.

நமது அரசோ, அதிகமான அளவிற்கு சர்வேச நிதி மூலதனத்தை உள்ளே கொண்டு வருவதன்மூலம் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று கருதுகிறது. அதனால் தான் சில்லரை வர்த்தகம், இன்சூரன்ஸ், வங்கித் துறை, பென்சன் நிதி  போன்றவற்றில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு கதவை திறந்து விட்டது.
இந்த திட்டம் பலனளிக்காது என்பது  சமுக ஆர்வலர்களின் கருத்து. நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுபவை நமது நாட்டு மக்களால் முழுமையாக  நுகரப்படும்போதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்ற கருத்தை பலரும் முன்வைக்கின்றனர்.

சுரா 

Issues: