வருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்

வண்ண மீன் வளர்ப்புத் தொழில் சென்னையில் மிகவும் பிரபலமாக உள்ளது. சென்னை கொளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளான விநாயகபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். கடந்தநான்கு  ஆண்டுகளில் இத்தொழில் மிகவும் வளர்ந்திருக்கிறது.
 
வண்ணமீன் வளர்ப்பில் மிகவும் பெயர் பெற்ற நாடு சிங்கப்பூர். மேலும் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இத்தொழில் மிகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் கொல்கத்தாவில் வண்ணமீன் வளர்ப்புத் தொழில் நன்றாக நடபெற்று வந்தது.

அரசின் ஊக்குவிப்பு இல்லாத காரணத்தால் இத்தொழில் அங்கே நசிந்து விட்டது. ஆனால் சென்னையில் இத்தொழில் நன்கு ஊன்றி விட்டது. அரசும் இத்தொழிலுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மீன்கள் இந்தியா முழுக்கச் செல்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இத்தொழில் நல்ல வருமானம் வழங்கக் கூடியது. இன்னும் அதிகம்பேர் இத்தொழிலுக்கு வரவேண்டும் என்பது தொழில் ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் குறைவான இடத்தில் வண்ண மீன்களை வளர்க்கலாம்.

குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும் ஒரு சென்ட் இடமும் போதுமானது.  பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில் இது. குறைவான உழைப்பே போதுமானது. காலையில் 2 மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் என ஒரு நாளைக்கு 4 மணி நேரம் உழைத்தால் போதும். குறைந்த பட்சம் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
வண்ணமீன்களை வளர்ப்பதற்கான சீதோஷ்ண நிலை தமிழகம் முழுவதும் நன்கு உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் வண்ண மீன்களில் உள்ளன. வண்ண மீன் வளர்ப்புத் தொழில் முதலில் வெளிநாட்டில்தான் பிரபலம். பின்னரே இத்தொழில் இந்தியாவிற்கு வந்தது. தற்போது நம் நாட்டில் இத்தொழில் நன்றாக நடந்து வருகிறது.

வண்ணமீன்களை வளர்ப்பதற்கான முக்கிய தேவை தண்ணீர் வசதி. பூமியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை ஆய்வு செய்து அதில் உள்ள அமிலத்தன்மை, காரத்தன்மை போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப என்ன மாதிரியான மீன்களை வளர்க்கலாம் என்பதை மீன் வளத்துறை ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

வண்ண மீன்களை தமிழ்நாடு மீன்வள துறையிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது வண்ண மீன் விற்பனையாளர்களிடமிருந்தும் வாங்கிக் கொள்ளலாம். மீன்களை வளர்ப்பதற்கான தினச் செலவு மிகவும் குறைவுதான். இத்தொழிலை மேற்கொள்கின்றவர்கள் மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கும் மீன்களை மட்டும் வளர்க்கலாம்.  
வளர்க்கும் வண்ண மீன் களை வாங்கிக் கொள் வதற்கு சென்னையில் பல நிறுவனங்கள் உள்ளன. எனவே எளிதாக விற்பனை செய்யலாம். நேரடியாக கடைகளிலும் விற்பனை செய்யலாம். இத்தொழிலை வளர்க்க வேண்டும் என மத்திய அரசு கடல்சார் மையமானது  பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தை அறிவுறுத்தி உள்ளது. இக்கழகம் இத்தொழிலுக்கு மானியம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
              
  ராஜாராம்

 

Issues: