தன்னம்பிக்கையே துணை!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகும் என்று அப்துல் கலாம் சொன்னார். ஒரு நாடு பொருளாதார பலம், ராணுவ பலம், விஞ்ஞான ஆற்றல் பலம் இவற்றில் எல்லாம் முன்னிலையில் இருந்தால் அந்நாடு வல்லரசாவதற்கான தகுதியை அடைந்ததாக அர்த்தம். இந்த தகுதியை இந்தியா விரைவாக அடைய வேண்டுமெனில் மனித வள ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.
நமது நாட்டில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 65 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆற்றல்களாக மாறும்போதும் இந்தியா தனது வல்லரசு கனவை அடைவது நிச்சயம். ஆனால் நமது இளைஞர்களிடம் சில குறைபாடுகளும் உள்ளன.
உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தபோதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தன்னம்பிக்கை இல்லாமலும், மன தைரியம் இல்லாமலும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். சிறு தோல்வி கண்டாலே மனதளவில் துவண்டுவிடுகின்றனர். இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டியிருந்த போதிலும் வேலையை சென்று தேடாமல் வேலையே கிடைப்பதில்லை என்று புலம்புகின்றனர்.
இத்தகையோருக்கு தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இந்த சுய முன்னேற்ற தொடரை எழுதுகிறேன்.
சாதாரண எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆனால், தற்போது நான் கல்வியியல் கல்லூரி உட்பட பல்வேறு நிறுவனங்களை கொண்ட ஆல்வின் குழும நிறுவனங்களின் சேர்மனாக உயர்ந்
திருக்கிறேன். இந்த உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணமே எனது தன்னம்பிக்கை தான்.
ஆல்வின் குழும நிறுவனங்களில் ஒன்றான ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறேன். என்னைபோல் வாழ்வில் அவர்களும் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
வேலை இல்லாதோர்கள், பகுதி நேரமாக வேலை செய்ய விரும்புபவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி கொண்டு இருக்கிறோம். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பலரிடம் உள்ள அவநம்பிக்கையையும், தாழ்வு மனப்பான்மையையும் போக்கி அவர்களை வெற்றியாளராக ஆக்கும் வகையில் இந்த சுயமுன்னேற்ற தொடர் கட்டுரை அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பின் கீழ் சுயமுன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை குறித்த விஷயங்களை எழுத இருக்கிறேன். இனி கட்டுரைக்கு செல்வோம்...
ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்கு வாய்ப்பை வழங்கி கொண்டே இருக்கிறது. இந்த வாய்ப்பை எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்தே வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. நாம் அவற்றில் இருந்து விலகி ஒதுங்கினால் வாழ்க்கை மிகவும் குறுகி சிறுத்து விடும்.
பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்கியே பலரும் வாய்ப்பை தவற விடுகின்றனர். இவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரச்சனைகள் என்பவை ஒவ்வொரு மனிதனையும் பட்டை தீட்டும் வலிமை கொண்டவை. அவற்றை எதிர்கொள்ளும் போது மனிதனின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
தன்னம்பிக்கை உள்ளவனிடம் பிரச்சனைகள் குறித்த கவலை இருப்பதில்லை. அவன் வாழ்வின் கடைசி நிமிடம் வரை போராடுகிறான். மன நிறைவோடு வாழ்கிறான். லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறான்.
லட்சியம் ஒரு மகத்தான சக்தி. நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் அதே லட்சியம் துடிக்கும்போது நாட்டின் மொத்த சக்தியும் கூடுகிறது.
அதே சமயத்தில் தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் லட்சியம் குடிகொள்வ தில்லை. அவர்களிடம் எப்போதும் தயக்கம் இருக்கும். பேச்சில் தயக்கம், நடை & உடை பாவனையில் தயக்கம், பய உணர்வு போன்ற பிரச்சனைகள் அவர்களிடம் குடி கொண்டிருக்கும். அவர்கள் இருக்கிற சூழ்நிலையை புரிந்து கொள்ளமாட்டார்கள். அல்லது புரிந்து கொள்ள மறுப்பார்கள். அவர்கள், நமது நிலைமை என்ன? நம் குடும்ப நிலைமை என்ன? நம் லட்சியம் என்ன? அது சாதிக்க கூடிய ஒன்றா? அதற்கு வேண்டிய அறிவும், திறமையும், பயிற்சியும், பக்க பலமும் இருக்கிறதா? என்று அறிவுப் பூர்வமாக சிந்திக்க மாட்டார்கள்.
தன்னம்பிக்கை உள்ளவர்களோ நேர்மறை எண்ணங்களையே வெளிப்படுத்துவார்கள். அவர்களின் வாழ்க்கை பாதையில் வரும் தடங்கல்களை கண்டு அஞ்சமாட்டார்கள். அந்த தடங்கல்கள் தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்காக ஏற்படுபவை என்று எண்ணுவார்கள். போராட்டங்களும், அச்சங்களும், ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எதிர் கொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது.
எத்தகைய சோதனையாக இருந்தாலும் நிச்சயமாக அதில் சாதகமான ஒரு அம்சமும் இருக்கும். அதனை ஆராய்ந்து அதன் பலனை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
நாம் ஏறும் ஒவ்வொரு படியும் நம்மை அடுத்த படியில்தான் கொண்டு சேர்க்கும் என்பது இயற்கையின் நியதி. எனவே பிரச்சனை என்றால் அதன் அடுத்த படி அதற்கான தீர்வுதான் என்பதை உணர்ந்து பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.
பிரச்சனைகள் நமது கையில் உள்ளனவே தவிர நாம் பிரச்சனையின் கையில் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்துபோனவற்றை பற்றிய கவலைகளை விட்டுவிட வேண்டும். நடக்கப்போவதை பற்றி நினைக்க வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு திறன் சரியாக இருந்தால் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் விரைவில் குணமாகிவிடும். அதேசமயம் நோய் எதிர்ப்பு திறன் இல்லாவிடில் சிறு ஜலதோசமும் பாடாய்படுத்தி விடும். இதேபோல்தான் மனநிலையிலும்.
பிரச்சனைகளை எதிர்த்து நிற்கும் மன உறுதி, தன்னம்பிக்கை இவை இருந்தால் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் அதன் பிடியில் இருந்து விடுபட்டுவிடலாம்.
ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் சிறு பிரச்சனையைக்கூட எதிர் கொள்ள முடியாது. ஒரு மனிதன் தனது வாழ்வில் எத்தகைய துன்பங்களை எதிர் கொள்கிறான் என்பது ஒரு பிரச்சனையே அல்ல. அவற்றை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை பொறுத்தே அவனது வாழ்வில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அடுத்த இதழில் சந்திப்போம்...

Issues: